!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 19 ஜனவரி, 2016

லஞ்சம் வாங்கிய பிராவிடன்ட் பண்ட் கமிஷனர் சிக்கினார் :14 லட்சம் ரூபாயுடன் சுற்றி வளைத்தது சி.பி.ஐ.,

சென்னையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என, அழைக்கப்படும், இ.பி.எப்., பிராந்திய அலுவலகத்தின் ஆணையர் உட்பட, ஏழு பேர், 14 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். காணும் பொங்கலன்று, ஓடும் காரில், லஞ்ச பணத்தை வாங்கிய இ.பி.எப்., ஆணையர் கையும் களவுமாக சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் உள்ள தனியார் தொழில் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யும் இ.பி.எப்., பணத்தை, அந்தந்த பிராந்திய அலுவலகங்களில் செலுத்தி வருகின்றன. அதில், சில நிறுவனங்கள் மோசடி செய்து வருகின்றன. அதற்கு, இ.பி.எப்., ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர், 
உடந்தையாக உள்ளனர்.இதனால், நாடு முழுவதும் உள்ள இ.பி.எப்., அலுவலகங்களை, சி.பி.ஐ., அதிகாரிகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். சென்னையில் உள்ள பிராந்திய அலுவலகத்தில், முறைகேடுகள் நடப்பதை, சென்னை சி.பி.ஐ., அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து நடந்த அதிரடி வேட்டையில், இ.பி.எப்., அதிகாரிகள் மூவர், ஒரு வழக்கறிஞர், மூன்று கல்லுாரி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிக்கியது எப்படி?சென்னை சி.பி.ஐ., அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:வங்கிகள் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சென்னை பிராந்திய இ.பி.எப்., அலுவலகத்தையும் கண்காணித்து வந்ததில், அங்கு நடக்கும் மோசடி குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. அதனால், பிராந்திய இ.பி.எப்., அலுவலக ஆணையர் துர்கா பிரசாத் மற்றும் சில அதிகாரிகளை தீவிரமாக கண்காணித்து வந்தோம்.
அப்போது, பூந்தமல்லி அருகே, தண்டலம் பகுதியில் இயங்கி வரும் சவீதா பொறியியல் கல்லுாரி நிர்வாகிகள் சிலருடன், இடைத்தரகர் ஒருவர் மூலம், துர்கா பிரசாத் ரகசிய பேரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. கல்லுாரி ஊழியர்களின் இ.பி.எப்., பணத்தை செலுத்துவதில் நடந்த குளறுபடிகளை 
அடிப்படையாக வைத்து பேரம் நடந்தது.இதுதொடர்பான ஆவணங்களை சரிபார்த்த துர்கா பிரசாத், முறைகேடுகளை மறைக்க, 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பேரம் பேசியதில், 15 லட்சம் ரூபாயாக இறுதி செய்யப்பட்டது.
அந்த பணத்தை எங்கு பெறுவது என, ஆலோசித்தனர். யாருக்கும் சந்தேகம் வராது என்பதால், ஜன., 17 ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்யப்பட்டது. அன்று காணும் பொங்கல் என்பதால், சென்னை பரபரப்பாக இருக்கும். அதை பயன்படுத்தி கச்சிதமாக வேலையை முடிக்கலாம் என, தீர்மானித்தனர்.
கல்லுாரி உள்ள இடத்திற்கும், சென்னைக்கும் இடைப்பட்ட அம்பத்துாரில், ஒரு இடத்தில் பணத்தை பெறுவது என, முடிவானது. தன் காரில், ஞாயிறு மதியம், குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற இ.பி.எப்., ஆணையர் துர்கா பிரசாத்திடம், சவீதா கல்லுாரி ஊழியர் ஒருவர், 14.50 லட்சம் ரூபாயை கொடுத்தார். இந்த பண பரிவர்த்தனை, ஓடும் காரில் நடந்தது.
ரகசியமாக பின்தொடர்ந்து சென்ற சி.பி.ஐ., லஞ்ச ஒழிப்பு துறையினர், துர்கா பிரசாத்தை கையும், களவுமாக பிடித்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி, இ.பி.எப்., அதிகாரிகள் இரண்டு பேர், 
வழக்கறிஞர் ஒருவர், கல்லுாரி ஊழியர்கள் மூன்று பேரை கைது செய்தனர்.துர்கா பிரசாத் அலுவலகம், வீடு உள்ளிட்ட, 18 இடங்களில் சோதனை நடந்தது. இதில், ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளன; தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.சிறையில் அடைப்பு
துர்கா பிரசாத் உட்பட, ஏழு பேரை, சி.பி.ஐ., ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், சென்னையில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று மாலை, நீதிபதி கந்தகுமார் முன் ஆஜர்படுத்தினர். ஏழு பேரையும், பிப்., 1 வரை, நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பலத்த பாதுகாப்புடன், ஏழு பேரும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கைதுக்கு பின்னணி என்ன?
இச்சம்பவத்தின் பின்னணி குறித்து, இ.பி.எப்., வட்டாரங்கள் கூறியதாவது:சென்னை பிராந்தியத்தில் உள்ள பல தனியார் நிறுவனங்கள், இ.பி.எப்., சந்தா தொகை பிடித்தம் மற்றும் அந்தத் தொகையை செலுத்துவதில் முறைகேடுகள் செய்வதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து விசாரிக்க, இ.பி.எப்., அமைப்பில் அமலாக்க பிரிவு உள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்ட பல நிறுவனங்கள் மீது, இ.பி.எப்., அமலாக்க பிரிவினர் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும், அரசியல் மற்றும் பண செல்வாக்கு உள்ள சில நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க, இ.பி.எப்., அமலாக்க பிரிவினர் தயக்கம் காட்டினர்.
செல்வாக்கு இல்லாத சில நிறுவனங்களை, 'நடவடிக்கை எடுப்போம்' என, மிரட்டி, 'கட்டிங்' வாங்கினர். அமலாக்க பிரிவில் உள்ள சில அதிகாரிகள் இந்த போக்கை எதிர்த்தனர். இ.பி.எப்., ஆணையருடன் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ கூட்டங்களில், இப்பிரச்னையை வெளிப்படுத்தினர். இதனால், ஆணையருக்கும், அவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
ஆனால், அமலாக்க பிரிவின் பாரபட்சமான நடவடிக்கை வழக்கம் போல் தொடர்ந்தது. பாதிக்கப்பட்ட சில நிறுவன உரிமையாளர்கள், தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்திடம் புகார் செய்தனர்.
தொடர் புகார் மற்றும் அமலாக்க பிரிவு அதிகாரிகள் சிலரின் நேரடி வாக்கு மூலம் அடிப்படையில், சென்னை பிராந்திய இ.பி.எப்., அமலாக்க பிரிவு அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க, மத்திய அரசு பணியாளர் முறைகேடுகள் தடுப்பு விதிகளின்படி, சி.பி.ஐ.,யை தொழிலாளர் நலத்துறை 
அறிவுறுத்தியது.அதன் எதிரொலியாக, சென்னை பிராந்திய இ.பி.எப்., ஆணையர் துர்கா பிரசாத் உள்ளிட்ட, ஏழு பேர் பிடிபட்டு உள்ளனர்.இவ்வாறு இ.பி.எப்., வட்டாரங்கள் தெரிவித்தன.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png