உலகின் உச்சியில் துருவத்தின் ஒரு ஓரத்தில் வாக்கிங் போய்க்கொண்டிருந்தன ஒரு அப்பாப் பனிக்கரடியும் குட்டிப் பனிக்கரடியும்.
துள்ளிகுதித்து விளையாடிக் கொண்டே ஓடிய குட்டிப் பனிக்கரடி திடீரென நின்று தன் அப்பாவைப் பார்த்துக் குழப்பத்துடன் கேட்டது.
"அப்பா... நான் உண்மையிலேயே பனிக்கரடிதானாப்பா..?"
அப்பாப் பனிக்கரடி குட்டியைப் பார்த்துச் சொன்னது.
"ஆமாடா செல்லம். அதுல என்ன சந்தேகம்..?"
குட்டி தனது அடுத்த கேள்வியைக் கேட்டது.
"அப்ப நீ..?"
"ஆமா, நானும் பனிக்கரடிதான்...!".
"அம்மா...?"
அப்பாப் பனிக்கரடி தன் மகனின் தலையை வாஞ்சையாய்த் தடவியவாறே சொன்னது.
"நான்,நீ,அம்மா எல்லோருமே பனிக்கரடிதான். ஏன் கேட்கிற...?".
குட்டி தன் குழப்பம் நீங்கவே சந்தோசமாய்,"ஒண்ணுமில்லப்பா, சும்மாத்தான் கேட்டேன்.." என்றபடி மறுபடி விளையாட ஓடியது.
கொஞ்ச நேரம்தான்...குட்டிப் பனிக்கரடி மீண்டும் குழப்பத்துடன் அப்பாவிடம் வந்தது.
"அப்பா.. நாமெல்லாம் உண்மையிலேயே பனிக்கரடிதானா..?"
அப்பா ஆச்சர்யத்துடன் திரும்பக் கேட்டது.
"ஆமாடா... ஏன் கேக்கற...?"
"சும்மாத்தாம்பா... நாம பனிக்கரடிங்கறது சரி. உன் அம்மா அப்பா..?"
"அவங்களும் பனிக்கரடிதான்...!".
"அம்மாவோட அம்மா அப்பா..?"
"அவங்களும் பனிக்கரடிதான். ஏன் கேக்கற?"
குட்டிப் பனிக்கரடி,"இல்லப்பா, கேட்டேன்..!" என்று சொல்லிவிட்டு மறுபடி குஷியாய் ஓடியது.
சில நிமிடம்தான் இருக்கும்.
குட்டி திரும்பவும் தன் அப்பாவிடம் ஓடி வந்தது.
"அப்பா... நாம உண்மையிலேயே பனிக்கரடிதானா..?".
அப்பாப் பனிக்கரடி இப்போது கோபத்தின் உச்சிக்கே போய்விட்டது.
"இங்க பாரு... நாம பனிக்கரடிதான். எங்க அம்மா அப்பாவும் பனிக்கரடிதான். அவங்க அம்மா அப்பாவும் பனிக்கரடிதான். நம்ம பரம்பரையே பனிக்கரடிதான். இப்பச் சொல்லு நீ ஏன் அதைக் கேக்கற...?"
அப்பாப் பனிக்கரடி கோபத்துடன் கேட்டதும், குட்டிப் பனிக்கரடி தன் குழப்பம் சற்றும் விலகாமல் சொன்னது.
"இல்லப்பா... எனக்கு லேசாய்க் குளிருது...!".
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.