தமிழருவி மணியன்
தாயின் கருவறையில் இருக்கும் போதே நாம் அனைவரும் கேட்பது அவரவர்களுடைய தாய் மொழியைத்தான். அதனால்தான் மொழியைத் ‘தாய்மொழி’ என்று சொல்கிறோம். தாயை நேசிப்பதற்கு ஒரு குழந்தைக்கு யாரும் சொல்லித்தரத் தேவையில்லை. அது இயல்பானது. அதுபோலவேதான் தாய்மொழியை நேசிப்பதும்.
எனக்கும், நமக்கும் தாய்மொழியாக இருப்பது தமிழ் மொழி. ஒவ்வொருவருக்கும் அவரவருடைய தாய்மொழியானது, சொல்லும் போதே சுகம் தருகிறது. நினைக்கும் தோறும் நெஞ்சிலே இனிமையாகப் பாய்கிறது. மனித வாழ்க்கையின் முக்கிய பகுதிகள் மொழியும், மரபுகள் எனப்படும் பண்பாடுகளும்தான். இது நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றது.
எனவே எப்படி நோக்கினாலும் மொழியைப் பேணி வளர்ப்பதன் மூலம்தான் நமது மரபுப் பரப்பையும் வளர்க்க முடியும். சரி, அப்படியானால் இந்த மொழியின் நேசிப்பை, வளர்ப்பை எங்கிருந்து தொடங்குவது? மொழிதான் அறிவு என்ற மாபெரும் பிழையால் இங்கு எத்தனை விதமான மொழிச் சண்டைகள்?
மொழி தான் அறிவு என்பது பிழை மட்டுமல்ல; அது ஒரு மிகப்பெரிய அறியாமையும் கூட. உலகில் நடந்த எத்தனையோ ஆராய்ச்சிகளும், திறனாய்வுகளும் தாய்மொழியில் கற்பதாலே ஒரு மனிதன் தன்னை முழுமையாக்கிக் கொள்ள முடியும் என்பதை காலந்தோறும் அறிவுறுத்தி வருகின்றன.
ஆனால் நமது அறியாமை, அது மொழி விஷயத்தில் பல்வேறு விதமான அரசியல் ஆதாயம் ஆக்கப்பட்டு, இறுதியில் அது வியாபாரத்தில் சிக்கிச் சின்னாபின்னமாகி, சமூகத்தில் மொழியையும் பணம் சம்பாதிக்கும் பொருளாகப் பார்க்கப்பட்டு, ஒரு நிலைகொள்ளாப் போக்கில் இளைஞர் சமூகத்தைத் தள்ளிவிட்டிக்கிறது என்பது எவ்வளவு பெரும் அவலம்?
மொழி என்பது வெறும் வயிற்றுப்பாட்டுக்கு வழிதேடித் தருகிற அட்சயப்பாத்திரம் இல்லை. ‘மொழியைக் கற்று அதன் மூலமும் பணம் சம்பாதிக்க வேண்டும். இதைப் படிப்பதும் கூட ஒரு தொழிலுக்கான வழிதான்’ என்ற நிலைதான் நமது மொழி விஷயத்தில் இளைஞர்களின் அதிகபட்ச அறிவு. ஒரு தொழிலுக்காக மொழியைக் கற்க நினைப்பதை விட, மூட எண்ணம் வேறு ஏதும் இருக்க முடியாது.
அது யாராக இருந்தாலும், தாய்மொழி என்பது வெறும் மொழி மட்டுமல்ல; அதே நேரம் வெறும் கருவியுமல்ல. அதுதான் வாழ்க்கைப் பாதையை எது சரி, எது தவறு என்பதைக் கற்றுத் தந்து, நல்லதை எடுத்துக் கொண்டு, தீயதைக் கழித்து அடுத்த தலைமுறைக்குத் தோள் மாற்றி தோள் மாற்றி அந்தச் சமூகத்தைப் பலம் பெற வைக்கிறது. இதை யாராவது மறுக்க முடியுமா? இதை பொய் என்று சொல்ல முடியுமா? அப்படியிருக்கும் போது நாம் மொழியின் விஷயத்தில் எவ்வளவு அறியாமையுடன் இருக்கிறோம் என்பதை இளைய சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழையும், தமிழின் பண்பாட்டு விழுமியங்களையும் நாம் சரியாகப் புரிந்து கொள்ளாமல் போனதால்தான், இன்று தமிழர்களின் வாழ்க்கைப் பாதையே சிக்கலானதாகி விட்டிருக்கிறது என்று நான் சொல்வேன்.
தமிழ்நாட்டில் தமிழ் எந்த நிலையில் இருக்கிறது?
‘தமிழைத் தமிழனே மறந்த நாள் இந்நாள்’ என்றார் பாரதிதாசனார். கல்வி நிலையங்கள் எதிலும் இன்றுவரையில் சரியான முறையில் தாய்மொழிக் கல்வி இல்லை. இதனால் பெற்ற தாய் தகப்பனைத் தமிழில் அழைப்பது கூட பாவமாகி விட்டது தமிழ்நாட்டில். சோற்றுக்கு வழிதேடும் அவசரத்தில் வாழ்க்கையின் விழுமியங்களைத் தமிழர்கள் தொலைத்து விட்டார்கள்.
ஒரு மனிதனுக்குத் தன்னம்பிக்கையை முதன்முதலில் விதைப்பது கூட அவனின் தாய்மொழி தான். ஏனென்றால், அவன் தாய் வயிற்றிலிருந்தே பெறும் சக்தி அது. சோறு மட்டும்தான் வாழ்க்கை என்றால், சுதந்திரம் எதற்கு? அடிமைப்பட்டுக் கிடக்கும் போது கூடத்தான் சோறு கிடைக்கிறது. சாதிக்கும், சமயத்துக்கும் தருகிற முக்கியத்துவத்தை மொழிக்கும், இனத்துக்கும் நாம் தருவதாய் இல்லை.
மொழிதான் ஒவ்வொருவரையும் ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகளாக இணைக்கும் சக்தி. அதைப் பழுதடையாமல் காக்க வேண்டிய தலைமுறையை நாம் பேணி வளர்க்க மறந்துவிட்டோம். தட்டேந்துகிற நிலைக்குத் தமிழன் சென்றதற்குக் காரணம் அவனின் மொழியில் நேசிப்பும், வாசிப்பும், பற்றும், காதலும், அன்பும் இல்லாமல் போய், பனைமரத்தில் முளைத்த ஆலம் விதையாய் பிடிப்பின்றி தடுமாற்றமாகிக் கிடப்பதே.
இளைய சமூகத்திற்கு மொழிபற்றியும், அதன் அனைத்துவிதமான செயல்பாடுகள் பற்றியும், அது இயங்கும், இயக்கும் பாங்கு பற்றியும் உள்ளீடோடு புரிய வைத்தல் அவசியம்.
ஏதோ வேலைக்காக மொழியைக் கற்றால், அது வேலைக்காகாது இளைஞர்களே! மொழியென்பது உங்களின் பலம், அறிவு, மேன்மை, சமூக மாற்றம். அதைவிடவும் உங்களை நீங்கள் யார் என்று உணரும் வரலாற்று மாற்றமும் கூட!
‘உங்களுடைய பழைய வரலாறு தெரியவில்லை என்றால், உங்களின் நிகழ்காலம் சரியாக இருக்காது… எதிர்காலம் இல்லாமலே போகும்’ என்றான் பகத்சிங். இதை அறியும் ஒரு பண்பாட்டுக் கூறு மொழியிலும் இருக்கிறது!
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.