பிளஸ் 2 வரை நீட்டிப்பு - 31-01-2011
நாட்டில் 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் அனைவரும் கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு "அனைவருக்கும் கட்டாய மற்றும் இலவசக்கல்வி' திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இத்திட்டம் இந்தாண்டு முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இம்மாணவர்களுக்கு குறைந்தபட்ச கல்வியறிவு இதன் மூலம் கிடைக்கிறது.
இந்நிலையில் இந்த உன்னதமான திட்டத்தை பிளஸ் 2 வரை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார். ஏனெனில் 60 சதவீத மாணவர்கள் எட்டாம் வகுப்புடன் தங்களது கல்வியை முடித்துக் கொள்கின்றனர். இதன் மூலம் நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கிறது.
புதிய திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அதிகரிக்கும் வேலை வாய்ப்பின்மையை பெருமளவுக்கு குறைக்க முடியும். மேலும் இனிவரும் சந்ததியினர் அனைவரும் குறைந்தபட்ச கல்வியாக "பிளஸ் 2 படித்தவர்கள்' என்ற நிலையை அடையலாம். இருந்தாலும் தற்போதைய திட்டத்துக்கும் கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே இப்புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தனியார் பள்ளிகள் மாநாட்டின் அதிரடி கோரிக்கை ஏற்கப்படுமா?
மாணவர்களை 8ம் வகுப்புவரை பெயிலாக்கக்கூடாது என்ற விதிமுறையை திரும்ப பெறும்படி அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளின் பல்வேறு அசோசியேஷன்களால் "தமிழ்நாடு வளர்ச்சிக்கான தரமான கல்வி" என்ற தலைப்பில் சென்னையில் நடத்தப்பட்ட மாநாட்டில், அரசுக்கு இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மாநிலம் முழுவதிலுமிருந்தும் ஏராளமான பள்ளிகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் பல அம்சங்களை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் ஒன்றுதான், 8ம் வகுப்புவரை மாணவர்களை பெயிலாக்கக்கூடாது என்பது.
இதைத்தவிர, பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசுக்கு வேண்டுகோள், என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தை பின்பற்றுவதன் மூலமாக சமச்சீர் கல்வியில் தரத்தை பேணுவதற்கான வேண்டுகோள், மூன்றுமொழி கல்விமுறையை புகுத்துவது மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டண விகிதத்தை மீளாய்வு செய்வது உள்ளிட்டவை அந்த அம்சங்களில் அடங்கும். இந்த மாநாட்டில் பல முக்கிய தனியார் கல்வித்துறை பிரமுகர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.