15ம் தேதி பள்ளிகள் திறப்பு தமிழக அரசு உறுதி: சமச்சீர் இழுபறி நீடிப்பு
சென்னை: திட்டமிட்டபடி ஜூன் 15ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. எந்த பாடப் புத்தகங்களை பின்பற்ற வேண்டும் என்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது. தமிழகத்தில் நடைமுறையில் இருந்த நான்கு விதமான பாடத் திட்டங்களை நீக்கிவிட்டு அனைவருக்கும் ஒரே மாதிரியான பாடத் திட்டத்தை கொண்டு வர திமுக அரசு சட்டம் இயற்றியது. முதல் கட்டமாக சென்ற ஆண்டில் 1 மற்றும் 6ம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டில் மற்ற வகுப்புகளுக்கு அமல்படுத்துவதாக இருந்தது. இதற்காக ஏழரை கோடி புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிலையில், அதிமுக அரசு பதவி ஏற்றதும் சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. பழைய பாடத் திட்டப்படி புத்தகங்களை அச்சிட வேண்டியிருப்பதால் ஜூன் 1க்கு பதில் 15ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவித்தது. தென் மாநிலங்களை சேர்ந்த 45க்கு மேற்பட்ட அச்சகங்களில் அந்த பணி நடக்கிறது. இதற்கிடையில், சமச்சீர் கல்வியை நிறுத்திவைப்பதை எதிர்த்து ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. அதையடுத்து, அரசு ஒரு சட்ட திருத்தத்தை பேரவையில் நிறைவேற்றியது. வழக்கில் நேற்று தீர்ப்பு அறிவித்த ஐகோர்ட், அரசின் சட்ட திருத்தத்துக்கு தடை விதித்தது. இதனால் பள்ளிகள் திறப்பு, பாடத் திட்டம் ஆகியவை குறித்து குழப்பம் ஏற்பட்டது. இது குறித்து பள்ளிக்கல்வி செயலாளர் சபீதாவிடம் கேட்டபோது, ‘ஜூன் 15ம் தேதி திறக்கப்படும் என்ற அறிவிப்பில் மாற்றம் இல்லை. எந்த பாடப் புத்தகத்தை பின்பற்றுவது என்பது பின்னர் அறிவிக்கப்படும்‘ என்றார்.
கவுன்சிலிங் தாமதம்: ஆசிரியர்கள் குழப்பம்
கவுன்சிலிங் நடத்துவதில் தாமதத்தால், குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க முடியாமல் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
கடந்தாண்டு வரை, பள்ளி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், மே இறுதிக்குள் நடத்தி முடிக்கப்படும். இடமாறுதல் பெற்றுச் செல்லும் ஆசிரியர்கள், பணியேற்கும் பகுதியில் உள்ள பள்ளிகளில், தங்கள் குழந்தைகளை சேர்க்க ஏதுவாக இருந்தது. அதிகபட்சமாக, பள்ளி துவங்கிய இரண்டு வாரங்களுக்குள், இதற்கான பணிகளை முடித்து விடுவர். தற்போது கவுன்சிலிங் செயல்முறைகள் தயாராகி வருகின்றன. ஜூன் துவங்கி 10 நாட்களாகியும், இடமாறுதல் வாய்ப்பு குறித்த முடிவு எடுக்க முடியாத சூழல் நிலவுகிறது. கவுன்சிலிங்கின்போது எதிர்பார்த்த பள்ளிக்கு இடமாறுதல் கிடைக்குமா; குழந்தைகளை புதிய இடத்தில் சேர்ப்பதா; கடந்தாண்டு படித்த பள்ளியிலேயே தொடரலாமா? என குழப்பங்கள் நீடிக்கின்றன. இதையடுத்து குழந்தைகள் படிக்கும் பள்ளி குறித்து எவ்வித முடிவும் எடுக்க முடியாமல், ஆசிரியர்கள் பரிதவிக்கின்றனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.