சென்னை : ""சமச்சீர் கல்வி திட்டம் முடக்கப்பட்டதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்,'' என, மனித உரிமைக் கல்வி நிறுவனத்தின் தலைவர் வசந்திதேவி குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில், "கல்விக் களத்தில் தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன?' என்ற தலைப்பில் கருத்தரங்கு மற்றும் ஆவண திரைப்படம் வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், மனித உரிமைக் கல்வி நிறுவனத்தின் தலைவர் வசந்திதேவி, பாரதி கிருஷ்ணகுமாரின் ஆவண திரைப்படத்தை வெளியிட்டு பேசியதாவது: சமச்சீர் கல்வியின் பொதுப் பாடத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னை புதுமையானது. கல்வியாண்டு துவக்கத்தில், மாணவர்களின் நலனைப் பணயம் வைத்து, அனைத்துப் பள்ளிகளையும் செயலிழக்கச் செய்தது வேறெந்த மாநிலத்திலும் நடக்கவில்லை.
சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தை ஆராய அமைக்கப்பட்ட குழுவில், அரசு, உதவி பெறும் பள்ளிகளிலிருந்து ஒருவர் கூட இடம் பெறவில்லை. இது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இக்குழு, பழைய, புதிய பாடத்திட்டம் குறித்து ஒப்பீடு செய்யவில்லை. குறைகளை கண்டுபிடிக்கும் நோக்கத்துடனே ஆய்வு செய்தால் எந்த பாடத் திட்டத்தையும் குறை கூறலாம். கல்வி தனியார்மயமாவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக, பொது பாடத்திட்டத்தை கொண்டு வர தடை விதிப்பது, இதற்கு எதிரானவர்களுக்கு சாதகமாக அமையும். இதை அரசு தடுக்க வேண்டும். மேலும், அரசுப் பள்ளிகளுக்கு ஒதுக்கும் நிதியளவை அதிகரிக்க வேண்டும். நாட்டில், கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தும், தமிழகத்தில் அது நடைமுறைப்படுத்தவில்லை. கல்வி, வணிகமாவதை தடுக்க, அனைத்து நடவடிக்கையையும் அரசு எடுக்க வேண்டும்.இவ்வாறு வசந்திதேவி பேசினார். கல்வியாளர்கள் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ராஜகோபாலன், பிரபா கல்விமணி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.