கோடை காலம் முடிந்த பின்னரும் தமிழ்நாட்டில் வெயில் கொளுத்துவது ஏன்? வானிலை அதிகாரி விளக்கம்
தமிழ்நாட்டில் கோடை காலம் முடிந்த பிறகும் வெயில் கொளுத்தி வருகிறது.
2–வது கோடைகாலம்?
சென்னை உள்ளிட்ட பெரும்பாலான தமிழக நகரங்களில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக காணப்படுகிறது.
சென்னையில் நேற்று வெயில் அளவு 100.4 டிகிரியாக இருந்தது. 2–வது கோடை காலம் வந்துவிட்டதோ? என்று கூறும் அளவுக்கு சென்னையில் வெயில் கொளுத்தியது.
வீடுகளில் வெப்பக்காற்று
சென்னையில் நேற்று காலையில் இருந்து மாலை வரை வெயிலின் தாக்கம் இருந்தது. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வீடுகள் தவிர மற்ற வீடுகளில் உள்ள மக்கள் வியர்வை மழையில் நனைந்தனர்.
சாலைகளில் நடந்து சென்றவர்களும், இரு சக்கரவாகனங்களில் சென்றவர்களும் சிரமபட்டு சென்றனர். வீடுகளில் மின் விசிறிகள் ஓடியும் அவை வெப்பக்காற்றையே உமிழ்ந்தன. பஸ்கள், மின்சார ரெயில்களின் கைப்பிடி கம்பிகளும் சுட்டன. குடிநீர் குழாய்களில் தண்ணீர் சுடுநீர்போல் வந்தது. பஸ்களில் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டுதான் பயணம் செய்தனர்.
அதிக வெயில் காரணமாக இளநீர், ஐஸ்கிரீம், மோர், சர்பத், பழச்சாறு, குளிர்பானங்கள் விற்பனை ஜோராக நடந்தது.
மெரினாவில் குவிந்த மக்கள்
இப்படி பகல் முழுவதும் வீடுகளில் அதிக வெயில் காரணமாக முடங்கி கிடந்த சென்னை நகர மக்கள் மாலையில் வெயிலின் தாக்கத்தில் இருந்த தப்பிக்க மெரினா கடற்கரையில் குவிந்தனர். அலைகளில் கால் நனைத்து வெப்பத்தை தணித்தனர்.
இது குறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:–
கடல்காற்று தாமதம்
தமிழ்நாட்டில் பகல்நேரத்தில் வானம் மிகவும் தெளிவாக காணப்படுகிறது. இதனால் வெயிலின் கடுமை அதிகமாக இருக்கிறது. மேலும் கடல் காற்று தாமதமாகத்தான் நிலப்பகுதியை நோக்கி வீசுகிறது.
இதன் காரணமாகவும் வெயில் அதிகமாக கொளுத்தி வருகிறது. இன்னும் சில நாட்களில் தமிழ்நாட்டில் மழையை எதிர்பார்க்கலாம். அப்போது மீண்டும் கோடை காலம் திரும்பியது போல வெயில் அடிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.