தேர்வறையில் நேர மேலாண்மை
தேர்வறை பெரும்பாலானவர்களுக்கு பதட்டம் தரும் இடமாக இருக்கிறது. தேர்வுக்காக சரியாக தயாராகாதவர்கள் மட்டுமல்லாது நன்றாக தயார் செய்து வந்தவர்கள் கூட தேர்வறைக்குள் நுழைந்ததும் தடுமாற்றம் அடைவது உண்டு. 'எல்லாம் தெரிந்த கேள்வியாகத்தான் இருந்தது, ஆனால் பதிலளிக்க நேரம் கிடைக்கவில்லை' என்று பரீட்சை எழுதி முடித்ததும் புலம்புபவர்களும் உண்டு. தேர்வறைக்குள் எப்படி நடக்க வேண்டும், நேரத்தை மிச்சம் பிடித்து வெற்றியை எப்படி தனதாக்க வேண்டும்? என்பதற்கு இங்கே டிப்ஸ்...
* போட்டித் தேர்வு அறிவிப்புகள் அடிக்கடி வெளியாகின்றன. வேலைவாய்ப்புக்கான தேர்வு, மேற்கல்விக்கான நுழைவுத் தேர்வு, கல்வி உதவித் தொகை மற்றும் பணிகளுக்கான தகுதித் தேர்வு என தேர்வுகளின் பட்டியல் நீள்கிறது. ஆனால் இவற்றில் பெரும்பாலான தேர்வுகளில் 'ஆப்ஜெக்டிவ் டைப்' எனப்படும் கொள்குறி வகை வினாக்களே கேட்கப்படுகிறது. இது எளிமையானது என்ற மனப்பான்மை பெரும்பாலானவர்களிடம் உண்டு. ஏனெனில் விடை தெரியாவிட்டால்கூட ஏதாவது ஒன்றை தேர்வு செய்து பதிலாக குறிப்பிட முடியும் என்று நினைக்கிறார்கள். நிச்சயமாக கொள்குறி வகை வினாக்கள் தரமான தேர்வு முறையாகும். நாம் சரியான விடை என்று நினைப்பதை குழப்புவதற்கென்றே அது தொடர்பான மற்ற விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதுவே நிறைய பேரை தடுமாறச் செய்துவிடும். எனவே கொள்குறி வினாக்களை நிதானமாக வாசித்து கவனமாக பதில் அளிக்க வேண்டும்.
* அதே நேரத்தில் கொள்குறி வகை தேர்வு, சரியாக கேள்வியை புரிந்து கொண்டால் உடனே விடையை தேர்வு செய்ய வாய்ப்பாகவும் இருக்கும். எனவே நல்ல தயாரிப்பு நிலையுடன் சென்றால் தேர்வறையில் அதிகமான நேரத்தை மிச்சம்பிடிக்கலாம்.
* இந்த வகை தேர்வுகளில் வினாக்களின் எண்ணிக்கை அதிகமாகவும், அளிக்கப்படும் நேர அவகாசம் குறைவாகவும் இருப்பதால் துரிதமாக செயல்படுவது அவசியம். தேர்வுக்கு தயாராகும்போதே நேரம் மற்றும் வினாக்களின் எண்ணிக்கையை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அப்படி கணக்கிட்டால் சில தேர்வுகளில் ஒரு வினாவுக்கு 10 முதல் 20 வினாடிகளே அவகாசம் கிடைக்கும். இந்த அவகாசத்தில் நன்றாக தெரிந்த வினாக்களுக்கே பதில் அளிக்க முடியும். எனவே தெரியாத வினாக்களில் யோசித்து நேரத்தை வீணடிப்பதைவிட தெரிந்த வினாக்களுக்கு பதில் அளித்துக் கொண்டே செல்வது உத்தமம். இறுதியாக கிடைக்கும் அவகாசத்தில் தெரியாத வினாக்களுக்கு யோசித்து பதில் அளிக்கலாம்.
* எதிர்மறை மதிப்பெண் (நெகட்டிவ் மார்க்) வழங்கும் தேர்வு முறை என்றால் உறுதியாக விடை தெரியாத வினாக்களுக்கு விடையளிப்பதை தவிர்த்து விடலாம்.
* யோசித்து பதில் அளிக்க வேண்டிய வினாக்களுக்கு 20 சதவீத நேரத்தை ஒதுக்கிக் கொள்ளலாம்.
* விளக்கம் அளிக்க வேண்டிய தேர்வுகளில், விடைகளை சுருக்கமாகவும், தெளிவாகவும் எழுதப் பழக வேண்டும்.
* படங்கள் வரைய வேண்டிய தேவை இருந்தால் அது பற்றிய பயிற்சியை பலமுறை செய்து பார்த்திருப்பது நல்ல பயனைத் தரும். படங்கள், விடை திருத்துபவரின் கவனத்தை உடனடியாக ஈர்ப்பதால் அவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். குறிப்பிட்ட நேரமும் ஒதுக்க வேண்டும்.
* நுணுக்கமாக குழப்பம் தரும் வகையில் கேட்கப்படும் வினாக்களுக்கு நிதானமாக பதில் அளியுங்கள். சில பத்திகளில் தகவல்களை கொடுத்து அதில் இருந்து எடுக்கப்படும் வினாக்கள் இவ்விதமாக அமைக்கப்பட்டிருக்கும்.
பொருளை நன்றாக விளங்கிக் கொண்டு பதில் அளிப்பது சிறந்தது. இவை அதிக நேரத்தை வீணாக்கும் என்பதால் முடிந்தவரை இறுதியாக இது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம்.
* கணிதங்களில் கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் நேரத்தை விழுங்கும். சில வினாடிகளில் சிந்தித்து விடையளிக்கும் கணித வினாக்களுக்கு மட்டும் முதலில் விடையளித்துவிட்டு, படிமுறையில் விடை கண்டுபிடிக்க வேண்டிய வினாக்களுக்கு இறுதியில் பதில் அளிக்கலாம்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.