காத்திருந்த டாக்டர்களுக்கு விரைவில் வருது விடிவு
போட்டித்தேர்வு மூலம், அரசுப்பணிக்கு தேர்வாகியும், 10 மாதங்களாக வேலை கிடைக்காமல் காத்திருந்த, 579 மருத்துவர்களுக்கு, பணி நியமன கலந்தாய்வு நாளை துவங்குகிறது.'அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்க, 34 பல் மருத்துவர் உட்பட, 2,167 உதவி மருத்துவர்கள், தற்காலிகமாக அரசுப் பணியில் சேர்க்கப்படுவர்' என, தமிழக அரசு அறிவித்தது. மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம், 2014 அக்டோபரில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, 2,167 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில், 1,700 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும், 700 பேருக்கு, 10 மாதங்களாக வேலை வழங்கப்படவில்லை. இதுகுறித்து, நமது நாளிதழில், இம்மாதம், 5ம் தேதி செய்தி வெளியானது. உடன் சுறுசுறுப்படைந்த அரசு, புதிய மருத்துவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள, 579 பேர் பட்டியலை வெளியிட்டதோடு, 'விரைவில், பணி நியமன கலந்தாய்வு நடக்கும்' என, அறிவித்தது.
அதன்படி, புதிய மருத்துவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, சென்னை, எழும்பூரில் உள்ள சுகாதாரத் துறை பயிற்சி அரங்கில், நாளை துவங்குகிறது. கலந்தாய்வுக்கு வரும், 26, 31 மற்றும் செப்., 2, 5, 7ம் தேதிகளில், தலா, 100 பேர்; செப்., 9ம் தேதி, 79 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர்.
சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தொடர்ந்து பல கலந்தாய்வு நடந்ததால், மருத்துவர்கள் பணி நியமனத்தில் தாமதம் ஏற்பட்டது. 579 மருத்துவர்கள் பணி நியமனம் முடிந்ததும், தேர்வானோர் பட்டியலில் மீதம் உள்ளோரும், அடுத்த கட்டமாக பணி நியமனம் செய்யப்படுவர்' என்றார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.