!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 12 ஆகஸ்ட், 2015

'கூகுள்' நிறுவன தலைவராக தமிழர் சுந்தர் பிச்சை நியமனம்: சர்வதேச நிறுவனங்களில் இந்தியர்கள் 'கலக்கல்!'
தகவல் தொழில்நுட்பத் துறையில், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான, 'கூகுள்' தலைமை நிர்வாக அதிகாரியாக, தமிழகத்தின், சென்னையைச் சேர்ந்த, சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். 


அமெரிக்காவை சேர்ந்த, 'கூகுள்' நிறுவனம், இணையதளம் தொடர்பான சேவையில், உலகளவில் முன்னணியில் உள்ளது. தேடுபொறி, சர்வர் தொழில்நுட்பம், மென்பொருள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை, கூகுள் அளித்து வருகிறது. இதனுடைய ஆண்டு விற்றுமுதல், 4.2 லட்சம் கோடி ரூபாய். 



மோடி வாழ்த்து:



கூகுள் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான லாரி பேஜ், நேற்று, கூகுள் மற்றும் அதன் துணை நிறுவனங்களை மறுசீரமைத்து, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கூகுள் மற்றும் அதன் துணை நிறுவனங்களை மறுசீரமைக்கும், பிரதான நிறுவனமாக, 'ஆல்பபெட்' என்ற பெயரில் புதிய நிறுவனத்தை, லாரி பேஜ் உருவாக்கி உள்ளார். அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக, தன்னை நியமித்துக் கொண்ட லாரி பேஜ், 'கூகுள்' தலைமை நிர்வாக அதிகாரியாக, தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சையை, 43, நியமித்தார். 
இதன் மூலம், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் ஜாம்பவான்கள் பட்டியலில், சுந்தர் பிச்சையும் இணைந்துள்ளார். இவர், இதற்கு முன், கூகுள் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு தலைவராக பதவி வகித்தார்.கூகுள் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, சுந்தர் பிச்சைக்கு, பிரதமர் நரேந்திர மோடி, 'டுவிட்டர்' இணையதளத்தில் வாழ்த்து கூறியுள்ளார். மோடியின் வாழ்த்துச் செய்தியில், 'கூகுள் நிறுவனத்தில், புதிய பொறுப்பில், சிறப்பாக செயலாற்ற வாழ்த்துகிறேன்' என, கூறியுள்ளார். 

உலகளவில், முன்னணி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில், இந்தியர்கள் அதிகமாக இடம் பெற்று வருவதற்கு, சர்வதேச முன்னணி பத்திரிகையான, 'டைம்' இதழும் பாராட்டு 
தெரிவித்துள்ளது. 


உற்பத்தி களமாக...:



இது தொடர்பாக, அப்பத்திரிகையில் வெளியான கட்டுரை யில், 'உலக முன்னணி நிறுவனங்களுக்கு, தலைமை நிர்வாகிகளை ஏற்றுமதி செய்யும், உற்பத்திக் களமாக இந்தியா திகழ்கிறது' என, குறிப்பிட்டுள்ளது. கூகுள் போக, இந்தியர்கள் தலைமைப் பொறுப்பு வகிக்கும் நிறுவனங்கள், அனைத்தும் சேர்ந்து, ஆண்டுக்கு, 25 லட்சம் கோடி ரூபாய் விற்றுமுதல் வர்த்தகம் செய்கின்றன. இவை அனைத்திலும், இந்தியர்களே தலைமைப் பொறுப்பில் உள்ளனர்.இந்தியர்களின் தலைமைப் பண்பு குறித்து, மனிதவள மேம்பாட்டுத் துறை நிபுணர்கள் அபாரம் என, கருத்து கூறுகின்றனர். 'இந்தியாவில் பிறந்து, உயர் கல்வி கற்று, அதிகாரிகளாக திகழ்பவர்கள், தொழில் நுட்பத்தில் சிறந்தவர்களாகவும், மிகக் கஷ்டமான சூழலை சாதுரியமாக எதிர்கொள்ளத் தக்கவர்களாகவும் உள்ளனர். இப்பண்புகள், அவர்களை தலைமைப் பொறுப்புக்கு ஏற்றவர்களாக, மாற்றுகின்றன' 
என்கிறார்கள் அவர்கள். 

சுந்தர் பிச்சையை அழைத்து கவுரவிக்க சென்னை வனவாணி பள்ளி முடிவு : - சென்னையைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை, ஜூலை, 12, 1972-ல் பிறந்தவர். 10ம் வகுப்பு வரை, சென்னை, அசோக் நகரில் உள்ள, ஜவஹர் வித்யாலயா பள்ளியில் படித்தார். பின், வனவாணியிலும், ஐ.ஐ.டி., கரக்பூரில், பி.டெக்., மெட்டலர்ஜி மற்றும் மெட்டீரியல் சயின்ஸ் படிப்பும் படித்தார். பின், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில், எம்.எஸ்., பயின்றவர், வார்ட்டன் பல்கலைக்கழகத்தில், எம்.பி.ஏ., பட்டம் பெற்றார். அவர், கரக்பூரில் படித்த போது கல்லுாரி ஆவணங்களில், பி.சுந்தரராஜன், என்று, அவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள பிரபல, வால் ஸ்டிரீட் ஜர்னல் இதழில் இருந்து, கரக்பூர் ஐ.ஐ.டி.,யை, சில மாதங்களுக்கு முன் தொடர்பு கொண்டு, சுந்தர் பிச்சையை பற்றி விசாரித்த போது, 'அப்படி ஒரு மாணவரே இல்லை' என்று கூறிவிட்டனர். பின், விவரம் அறிந்து மீண்டும் ஆய்வு செய்ததில், அவர் அங்கு தான், 1993-ல் பட்டம் பெற்றார் என்பதும், அதிக மதிப்பெண் பெறுவோருக்கு வழங்கப்படும், பி.சி.ராய் வெள்ளிப் பதக்கத்தை வென்றவர் என்பதும் தெரிய வந்தது. சுந்தர் பிச்சை, கிரிக்கெட்டும், செஸ்சும் விளையாடுவதில் வல்லவர். அவரது பெற்றோர் மற்றும் மனைவி அஞ்சலி ஆகியோர், அமெரிக்காவில் வசிக்கின்றனர். அவருக்கு, 12 வயதில் ஒரு பெண் இருக்கிறார்.நேற்று, சுந்தர் பிச்சை பற்றிய செய்தி வெளியானதும், சென்னை, வனவாணி பள்ளியின் முதல்வர் காவேரி பத்மநாபன், அதுகுறித்து, மாணவர்களிடையே அறிவித்து, அவரை பற்றி அறிவிப்பு பலகையில் வாசகம் வெளியிட்டார். 

இதுகுறித்து, பள்ளியின் துணை முதல்வர் சேவியர் சகாயநாதன் கூறியதாவது:கடந்த, 1987- - 89ம் ஆண்டுகளில், இப்பள்ளியில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் அவர் படித்துள்ளார். அவர் படித்த போது நானும், முதல்வரும், இங்கு பணி புரியவில்லை. எனினும், சுந்தர் பிச்சையை எப்படியாவது தொடர்பு கொண்டு இங்கு வரவழைத்து, மாணவர்களிடையே அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார். 


ராஜாதி ராஜாக்கள்:


இந்திரா நுாயி:குளிர்பானம் மற்றும் உணவுப்பொருள் தயாரிப்புத் துறையில் முன்னணியிலிருக்கும் நிறுவனங்களில் ஒன்றான பெப்சியின் தலைவராக, சென்னையில் பிறந்த, இந்திரா நுாயி சாதனை படைத்து வருகிறார். இந்திரா, 1994ல், பெப்சி நிறுவனத்தில் சேர்ந்தார். 


சத்யா நாதெள்ளா:



ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் தலைநகராக இருக்கும், ஐதராபாத்தில், பிறந்து வளர்ந்த சத்யா நாதெள்ளா, தகவல் தொழில் நுட்பம், மென்பொருள் உற்பத்தியில் கோலோச்சி வரும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார். 1992ல், இந்நிறுவனத்தில் சேர்ந்த சத்யா, 22 ஆண்டுகளில், அதன் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்து சாதனை படைத்தார். 


சாந்தனு நாராயண்:



ஐதராபாத்தில் பிறந்த, சாந்தனு நாராயண், தகவல் தொழில் நுட்பத் துறையில் புகழ் பெற்று விளங்கும், அடோப் நிறுவனத்தின், உலகளாவிய செயல்பாடுகளின் தலைமைப் பொறுப்பில் உள்ளார். இந்நிறுவனத்தில், 1998ல், சாந்தனு, தன்னைஅர்ப்பணித்துக் கொண்டார். 


ராஜீவ் சூரி:



இந்தியாவில் பிறந்து, சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவரான, ராஜீவ் சூரி, 'நோக்கியா சொல்யூஷன் அண்ட் நெட்வொர்க்' நிறுவனத்தின், தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். கடந்த, 1995ல், இந்நிறுவனத்தில் சேர்ந்த ராஜீவ், பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து, தற்போது தலைமைப் பதவிக்கு உயர்ந்துள்ளார். 

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png