பூந்தமல்லி அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்: போலீசார் தடியடி
மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பூந்தமல்லியில் அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர்கள் சாலை மறியல்
பூந்தமல்லியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு பள்ளியில் பயிலும் 80–க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து பூந்தமல்லி டிரங்க் ரோட்டின் ஒரு பகுதியில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தியும், பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரியும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்தும் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
லேசான தடியடி
சுமார் 15 நிமிடம் பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு கண்டன கோஷங்கள் எழுப்பியதால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு கூறினார்கள். ஆனால் மாணவர்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்து விட்டனர். இதனால் மாணவர்கள் சாலையின் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களில் சிலரை போலீசார் பிடித்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.