!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 30 டிசம்பர், 2015

தகவல் கேட்போரை அலைக்கழிக்கும் தகவல் ஆணையம்

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு மனு அளிப்போர், விசாரணைக்காக அலைக்கழிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. 

 பொதுமக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை எவ்வித முறைகேடும் இல்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் பெறுவதை உறுதி செய்யவும், மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை அறிந்துகொள்ளவும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தகவல் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 


 இந்தச் சட்டத்தின் அடிப்படையில், மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை அறிந்துகொள்ள விரும்புவோர், தகவல் ஆணையத்தில் மனு அளிக்கலாம். மனுதாரர்கள் கேட்ட தகவல் குடியிருப்பைத் தேடி வரும் வகையில் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் பொதுத் தகவல் அலுவலரிடம் மனு அளிக்க வேண்டும். அங்கு சரியான விவரங்கள் கிடைக்காவிடில், மாநிலத் தகவல் ஆணையத்தில் மனு அளிக்கலாம். இதேபோல, அரசு அலுவலர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகள், அரசுத் துறைகளின் செயல்பாடுகள், தனிநபர் பிரச்னைகள் ஆகியவை குறித்தும் பொதுமக்கள் தகவல் ஆணையத்தில் மனு அளிக்கின்றனர். 
 தற்போது, இந்தச் சட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு இருப்பதால், ஆணையத்திற்கு ஒவ்வொரு நாளும் 60 முதல் 80 புகார் மனுக்கள் வருகின்றன. இவற்றைப் பதிவு செய்து, விசாரணைக்கான கடிதம் மனுதாரருக்கு அனுப்பப்படும். பின்னர், குறிப்பிட்ட நாளில் சென்னையில் உள்ள மாநிலத் தகவல் ஆணையத்திற்கு வரவழைத்து விசாரணை செய்கின்றனர். இதனால் வயதானவர்கள், இருதய நோயாளிகள் உள்ளிட்டோர் வெகுதொலைவு பயணித்து சென்னை வர இயலாத நிலை உள்ளது. அதிலும், சொந்த வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு பயணம் செய்ய வேண்டியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதனால், அந்தந்த மாவட்ட அலுவலகங்களிலேயே விசாரணை செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாகும். 

 இதுகுறித்து தகவல் ஆர்வலரும், இந்தியன் குரல் அமைப்பின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளருமான ராமகிருஷ்ணன் கூறியதாவது: இந்தச் சட்டம் கொண்டு வந்த ஆரம்ப காலத்தில் ஒரு குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை வரவழைத்து தகவல் ஆணைய அலுவலர்கள் விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில், அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் இந்த விசாரணை முறை கைவிடப்பட்டது. இதையடுத்து, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் காணொலிக் காட்சி முறை மூலம் விசாரணை நடைபெற்றது. அப்போது, பொதுமக்கள் எளிதாக வந்து ஆஜராகி சென்றனர். ஆனால், தற்போது இந்த நடைமுறைக்குப் பதிலாக மனுதாரர்களை சென்னைக்கே வர அறிவுறுத்துவதால், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் உள்ளிட்டோர் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பிட்ட நாளில் விசாரணைக்கு ஆஜராகவில்லையெனில் மனுவை முடித்து வைத்தும் விடுகின்றனர். எனவே, மீண்டும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலேயே காணொலிக் காட்சி முறை மூலம் விசாரணை செய்ய வேண்டும் என்றார் அவர்.
 
 இதுதொடர்பாக தகவல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் புகார் மனுக்கள் மீது காணொலிக் காட்சி முறையில் விசாரணை நடத்தினால், ஆதாரங்களைத் தெளிவாகப் பெற முடியவில்லை. மேலும், ஆட்சியர் அலுவலகங்களில் ஒவ்வொரு நாளும் பல்வேறு துறைகளின் சார்பில் காணொலிக் காட்சிகள் நடைபெறுவதால், தகவல் ஆணைய மனுக்களை விசாரிப்பதற்கு போதிய கால அவகாசமும் இல்லாத நிலை உள்ளது. இதுபோன்ற காரணங்களால், மனுதாரர்களை சென்னையில் உள்ள மாநிலத் தகவல் ஆணையத்திற்கு நேரில் வரவழைத்து விசாரணை செய்யப்படுகிறது. எனினும், பொதுமக்களின் நலன் கருதி, மீண்டும் அந்தந்த மாவட்டத்திலேயே விசாரிக்க தகவல் ஆணையக் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது என்றார் அவர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png