செனட், சிண்டிகேட் கூட்டம் முறைப்படி நடத்தப்பட்டதா?
தமிழகத்தில், 700 பி.எட்., கல்லுாரிகளை நிர்வகிக்கும் ஆசிரியர் கல்வியியல் பல்கலையில், செனட் மற்றும் சிண்டிகேட் கூட்டங்கள் முறைப்படி நடத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில், 2008ல், பி.எட்., கல்லுாரிகளுக்கு அதிக மவுசு ஏற்பட்டதும், தனியாக, ஆசிரியர் கல்வியியல் பல்கலை உருவாக்கப்பட்டு, அதன் கீழ், 700 பி.எட்., - எம்.எட்., கல்லுாரிகள் இணைக்கப்பட்டன. இந்த பல்கலைக்கு சரியான இடமோ, சரியான ஆசிரியர் நியமனமோ இல்லை.
இதையடுத்து, அரசு செலவில், காஞ்சிபுரம் மாவட்டம், காரப்பாக்கத்தில் புதிய அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டு, கடந்த மாதம் அங்கு பல்கலை மாற்றப்பட்டது. ஆனால், பல்கலையின் நிர்வாக பணிகளில் மாற்றம் வரவில்லை.
துணைவேந்தராக இருந்த விஸ்வநாதன் ஓய்வு பெற்றதால், பி.எட்., கல்வியில் நிபுணத்துவம் பெற்ற, பேராசிரியர் கோகிலா தங்கசாமி, புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பல ஆண்டுகளாக, முறையான செனட், சிண்டிகேட் கூட்டம் நடத்தப்படவில்லை என, புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து கல்லுாரி முதல்வர்கள் கூறியதாவது:ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு பல ஆண்டுகளாக, செனட், சிண்டிகேட் மற்றும் கல்வி கவுன்சில் கூட்டம் நடத்தப்படவில்லை. கூட்டங்கள் நடத்தியதாக, பதிவாளர் அலுவலகம் பதிவு செய்து வைத்துள்ளது.
ஆனால், கூட்டம் எப்போது நடந்தது; அதில் என்ன முடிவானது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. பல்கலையின் இணையதளத்திலும் இதுகுறித்து விவரங்கள் இல்லை. இதனால், பல மோசடிகள் நடக்க வாய்ப்புள்ளது. புதிய துணைவேந்தர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.