!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

சனி, 4 ஜூன், 2016

எங்கே செல்லும் இந்த பாதை? கஞ்சா போதையில் தஞ்சமாகும் சிறுவர்கள்... 
கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில், குப்பை பொறுக்கும் சிறுவர்கள், கஞ்சாவுக்கு அடிமையாகி, வழி தவறிச் செல்வது, இவர்களைக் கவனித்து வரும் சமூக ஆர்வலர்களை பெரும்
வேதனையில் ஆழ்த்தியுள்ளது.


வடசென்னையில், 350 ஏக்கரில் கொடுங்கையூர் குப்பைக்கிடங்கு உள்ளது. சென்னை மாநகரில், சேகரமாகும் குப்பைகளை இங்கே மலை போல குவித்து வருகின்றனர். கடந்த 1986லிருந்து, இந்த குப்பைக் கிடங்கில், மாதவரம், திரு.வி.க., நகர், தண்டையார்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும், 3,500 டன் குப்பை சேகரித்து இங்கு வந்து கொட்டப்படுகிறது.

இந்த குப்பைக் கிடங்கில், விலை போகும் பொருட்களைத் தேடிக்கண்டு பிடித்து, அவற்றைப் பொறுக்கி, கடையில் போட்டுப் பிழைப்போர் ஏராளம். ஜே.ஜே.நகர், ஆர்.கே.நகர், எழில் நகர், அண்ணா நகர், ராஜரத்தினம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், இத்தொழிலை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

குப்பையில் புதைந்து கிடக்கும் பிளாஸ்டிக், அட்டை, இரும்பு உள்ளிட்டவற்றை பொறுக்கி எடுத்து, தினமும், 200 ரூபாய் வரை, வருவாய் ஈட்டுகின்றனர். தினசரி வருவாய் கிடைப்பதால், இத்தொழிலில், தங்களது குழந்தைகளையும் ஈடுபடுத்துகின்றனர். பள்ளிக்குச் செல்ல விரும்பாத அல்லது பெற்றோர்களால் நிர்ப்பந்திக்கப்படும் சிறுவர்களே, இந்த தொழிலுக்கு எளிதாக வந்து விழுகின்றனர்.

போதையின் பாதையில்...
மிகச்சிறிய வயதில், இவர்களுக்கு கிடைக்கும் 200 ரூபாய் வருவாய், இவர்களை தவறான பாதைகளில் திருப்பி விடுகிறது. இந்த சிறுவர்களில் பலர், சினிமா என்று ஆரம்பித்து, அதன் பின், பீடி, சிகரெட், மது என்று போதையின் பாதைக்குத் திரும்பி விடுகின்றனர். சமீபகாலமாக, இவர்களில் பலர் கஞ்சாவுக்கு அடிமையாகி வருவது அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள், வேதனை தெரிவிக்கின்றனர்.

இதற்கு, இப்பகுதியில் தாராளமாகப் புழங்கும் கஞ்சா விற்பனையும் முக்கியக் காரணம். கஞ்சா பொட்டலத்தை வாங்கக் குறைவான பணமே தேவைப்படுவதால், இச்சிறுவர்கள், கஞ்சாவுக்கு எளிதில் அடிமையாவதாக இவர்கள் மனம் வெதும்புகின்றனர். கல்வியறிவும், விழிப்புணர்வும் இல்லாத பெற்றோர்களுக்கு, இவர்கள் திசை மாறிச் செல்வது, தாமதமாகவே
தெரியவருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் கீ.சு.குமார் கூறியதாவது:
சமீபகாலமாக, காலை, மாலை, இரவு என எந்த நேரமும், இப்பகுதியில் போதைப் பொருட்கள் பயன்படுத்தும் சிறுவர்கள் கூட்டத்தைக் காண முடிகிறது. ஒதுக்குப்புறமாக உள்ள மரங்கள், முட்புதர்கள் அடியில் ஒதுங்கும் இவர்கள், கஞ்சா புகைப்பதை வாடிக்கையாக மாற்றிக் கொண்டுள்ளனர். பதினைந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள், 50க்கும் மேற்பட்டோரை, அங்கே
எப்போதுமே பார்க்க முடியும்.

குற்றங்களின் கூடாரம்
இச்சிறுவர்கள் படிப்பு, வாழ்க்கை, குடும்பம் என அனைத்தையும் இழந்து, மிகச்சிறிய வயதிலேயே, போதைக்கு அடிமையாகி எதிர்காலம் இழந்து கேள்விக்குறியாகி நிற்கின்றனர். பரந்து விரிந்து கிடக்கும் இப்பகுதியை கண்காணிக்க அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இங்கு, கள்ளச்சந்தையில் மது, கஞ்சா பொருட்கள் விற்பனை உள்ளிட்ட சகல குற்றங்களும் அரங்கேறுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

இங்கு நடக்கும் கஞ்சா விற்பனை குறித்து, போலீசுக்கு மக்கள் பல முறை புகார் தெரிவித்தும், கண் துடைப்புக்கு மட்டுமே வந்து செல்கின்றனர். உறுதியான நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை. வழி தவறும் இந்த இளைய தலைமுறையை மீட்டு, நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கித்தர வேண்டிய பொறுப்பு, அரசுக்கு மட்டுமின்றி, சமூக அக்கறையும், மனித நேயமும் உள்ள ஒவ்வொருவருக்கும் உள்ளது.

400 ஏக்கர்: 4 ஸ்டேஷன் 'லிமிட்!'
கொடுங்கையூர் குப்பைக்கிடங்கு பகுதியில் நடந்து வரும் பல்வேறு சட்டவிரோதச்
செயல்களைத் தடுக்க, காவல் துறை நடவடிக்கை எடுக்காமலிருப்பது குறித்து, உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அந்த குப்பைக்கிடங்கு, 400 ஏக்கர் பரப்பில் உள்ளது; மொத்தம், 4 போலீஸ் ஸ்டேஷன்
எல்லையில் வருகிறது. இதனால், ஒருங்கிணைந்த நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை. மட்டுமின்றி, இது போலீசால் மட்டுமே, தடுக்கக் கூடிய காரியமில்லை. அப்பகுதியிலுள்ள பொது மக்கள், கல்வியறிவு இல்லாதவர்களாக இருப்பதால், இதற்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை. அரசும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. பல்வேறு துறைகளையும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும், சமூக அமைப்புகளையும், அங்குள்ள பொது மக்களையும் இணைந்து ஒருமித்த நடவடிக்கை எடுப்பது அவசியம். அப்போது தான், அங்கு நடக்கும் சட்டவிரோதச் செயல்களுக்கு, நிரந்தரமான முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
இவ்வாறு உளவுத்துறை அதிகாரி தெரிவித்தார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png