பிளஸ் 2 பொதுத்தேர்வு
வினாக்களில் புதிய மாற்றம் : மனப்பாட பதிலுக்கு இனி 'சென்டம்' கிடைக்காது
பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாளில், இந்த ஆண்டு பெரியளவில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இனி, மனப்பாட பதிலுக்கு முழு மதிப்பெண் கிடைக்காது. மருத்துவம், இன்ஜி., மற்றும் சட்டம் போன்ற மேல் படிப்புகளில், பிளஸ் 2 மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால், மாணவர்கள், கல்லுாரியில் சேர்ந்த பின், முதல் ஆண்டு பருவத்தேர்வில் பல பாடங்களில், 'பெயில்' ஆகின்றனர்.
மாணவர்கள் திணறல் : இதுகுறித்து ஆய்வு செய்ததில், மனப்பாட கல்வியில், அதிக மதிப்பெண் பெறும் மாணவர் பலர், கல்லுாரி பாடங்களை புரிந்து படித்து, பதில் எழுத திணறுவது தெரிய வந்தது. இது தொடர்பாக, கடந்த ஆண்டு பள்ளிக்கல்வித் துறை, தேர்வுத் துறை மற்றும் உயர்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதன்பின், பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. பாடப் புத்தகத்தின் பின்பக்க கேள்விகள் மட்டுமின்றி, பாடத்தின் உள்பகுதிகளில் இருந்தும் புதிய கேள்விகள் கேட்கப்பட்டன.
இந்த மாற்றம் தொடர்பாக, கடந்த கல்வி ஆண்டு துவக்கத்திலேயே, அரசு பள்ளிகளுக்கு தேர்வுத் துறையில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இந்த தகவல், நமது நாளிதழில், கல்வி ஆண்டு துவக்கத்திலேயே வெளியானது. பொதுத்தேர்விலும் அதேபோல், புதிய வினாக்கள் இடம் பெற்றன. இதை தொடர்ந்து, பிளஸ் 2 பொதுத்தேர்வில், இந்த ஆண்டும் புதிய மாற்றங்களை கொண்டு வர, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக உயரதிகாரிகள், கல்வியாளர்கள், வினாத்தாள் தயாரிப்பு ஆசிரியர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த மாற்றங்களை முடிவு செய்வது குறித்து, குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., மற்றும் உயர்கல்விக்கான கல்வி நிறுவனங்களில், மனப்பாட முறை இல்லை. வினாத்தாளில் உள்ள கேள்வியை புரிந்து கொண்டு, அதற்கான பதிலை சரியாக எழுதினால் போதும். ஆனால், தமிழக பள்ளிக்கல்வி மாணவர்கள், இது போன்று புதிய பதிலை எழுத இன்னும் பழகவில்லை.
எனவே, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பாடப் புத்தகத்தில் உள்ள வரிகளை, அப்படியே மனப்பாடம் செய்து எழுதுகின்றனர். புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கேள்வியை தவிர, வேறு கேள்வியை கேட்டால், மாணவர்கள் திணறுகின்றனர்.
புரிந்து பதில் எழுத... : புதிய கேள்விகளுக்கு பதில் எழுதும் பழக்கத்தை, கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் அறிமுகம் செய்தோம். இந்த ஆண்டு, வினாக்களின் பொருள் மாறாமல், வினாக்களின் வார்த்தைகளை மாற்றி கேட்கப்பட உள்ளது. எனவே, கேள்வியை மாணவர்கள் நன்றாக புரிந்து, பதிலை எழுத வேண்டும். இதற்கு, பள்ளியிலேயே மாணவர்கள் புரிந்து படிக்க வேண்டும். பாடத்தில் கூறப்படும் கருத்தையும், தொழில்நுட்பத்தையும் புரிந்து கொண்டு, சரியான பதிலை, பொருள் மாறாமல் எழுத வேண்டும். அதனால், மாணவர்களின் விடை எழுதும் முறையில் மாற்றம் வரும். வரும் தேர்வுகளில், இந்த அடிப்படையில் எழுதும் மாணவர்களுக்கு மட்டுமே, முழு மதிப்பெண்ணான, 'சென்டம்' அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு ஏற்ற வகையில், ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.