ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்களிடையே... ஆர்வமில்லை! மூன்று நாள் கவுன்சிலிங்கில் 4 பேர் சேர்க்கை
கடலுார் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இந்த ஆண்டு 'டல்' அடித்து வருகிறது. மூன்று நாள் நடந்த கவுன்சிலிங்கில் 4 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.கடலுார் மாவட்டத்தில் 20 தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும், ஒரு அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனமும் இயங்கி வருகிறது. இது தவிர கடலுார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கென தனியாக ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் நடப்பாண்டு முதல் செயல்பட வுள்ளது.
ஆரம்ப பள்ளிகளில் வேலைவாய்ப்பு குறைந்துள்ள காரணத்தாலும், பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றவுடன், பிளஸ் 2, பொறியியல், மருத்துவம் போன்ற உயர் கல்வியில் சேர ஆர்வம் அதிகரித்துள்ளதால் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர மாணவ மாணவியர்கள் ஆர்வமில்லாமல் உள்ளனர்.
குறிப்பாக இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதை விட கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இதனால் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், தொழில் பயிற்சி நிறுவனம் போன்ற கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கை 'டல்' அடித்து வருகிறது.
கடலுார் மாவட்டத்தில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வடலுாரில் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இப்பள்ளியின் மூலம் 50 ஆசிரியர்கள் படித்து முடித்து வெளியே வருகின்றனர்.
இந்த ஆண்டு 112 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 84 விண்ணப்பங்கள் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டு வரப்பெற்றுள்ளன.
ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கான கவுன்சிலிங் கடந்த 4ம் தேதி துவங்கியது. முதலில் ஆங்கில வழிக்கும், மறுநாள் தமிழ் வழிக்கும் நடந்தது. இதில் மொத்தம் 4 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதில் ஒரு மாணவியும் அடங்குவர். தொடர்ந்து 8, 9ம் தேதி கவுன்சிலிங் நடைபெற இருப்பதாக பயிற்சி பள்ளி முதல்வர் தெரிவித்தார்.
அதேப்போல நடப்பு ஆண்டு தொடங்கப்பட்டுள்ள ஒன்றிய ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளார். நடப்பு ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே வேளையில் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இடைத்தரகர்கள் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.