!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

தமிழர் பெருமையை தமிழராவது அறிவோம்!

                     தஞ்சாவூர் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. காலத்தை வென்ற ஆலயம் படைத்த ராஜராஜ சோழனுக்கு விழா எடுத்து அஞ்சல் தலை வெளியீடு, நாணயம் வெளியீடு, கருத்தரங்கம், ஆயிரம் நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்ற நாட்டிய நிகழ்ச்சி, திருமுறை ஓதுதல் என நம்மால் இயன்றளவு நினைவுகூர்ந்துள்ளோம்.
 பார்க்கப் பார்க்க பேரதிசயமாக இருக்கிறது பெருவுடையார் கோயில். ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி ஓர் அற்புதத்தைப் படைத்தவர்கள் தமிழர்கள் எனும்  பெருமையும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
                      கற்களுக்கான முகாந்திரமே இல்லாத பகுதியில் கற்கோயிலை, கற்கோட்டையையே கட்டியுள்ளார் ராஜராஜன். தஞ்சைப் பெரிய கோயில் ஒரு வழிபாட்டுத் தலமாக மட்டும் இருந்திருக்காது என்றே தோன்றுகிறது. மற்ற கோயில்களுக்கும் தஞ்சைப் பெரிய கோயிலுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. மற்ற கோயில்களில் எங்கு பார்த்தாலும் சந்நிதிகள், சிற்பங்கள், மண்டபங்கள் என நிறைந்திருக்கும். பெரிய கோயிலில் கட்டுமான இடங்களுக்கு நிகராக வெற்றிடம் அதிகமாக இருப்பதையும், கோயிலைச் சுற்றி கோட்டைச் சுவர், அகழி போன்ற அமைப்பு இவை அனைத்தையும் பார்த்தால், ஆபத்துக் காலங்களில் அது கோயிலாக மட்டுமன்றி மக்களுக்கான பெரும் பாதுகாப்பு அரணாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அக் கோயில் கட்டப்பட்டதாகக் கருத இடமுண்டு.
 மன்னராக இருந்தபோதிலும் சிறந்த முறையில் மக்களாட்சியை நடத்தியவர்; குடவோலை முறை மூலம் உலகுக்கே மக்களாட்சியை அறிமுகப்படுத்தியவர் ராஜராஜன்  என ஆராய்ச்சிகள் மூலம் அறிகிறோம். ராஜராஜனின் படையெடுப்புகள், கடல் கடந்து சென்று பெற்ற வெற்றிகள், தமிழ், இசை, கலைக்கு ஆற்றிய தொண்டுகள் என காலமெல்லாம் கொண்டாட எத்தனையோ விஷயங்கள் உள்ளன.
                   ஆனால், ஓர் அக்பரை போல, பாபரை போல, ஷாஜகானை போல ராஜராஜனின் புகழ் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. ராஜராஜனின் கீர்த்திகளை மற்ற நாட்டவரை, மாநிலத்தவரை விடுங்கள், தமிழர்களாவது அறிந்துள்ளனரா? அமரர் கல்கி "பொன்னியின் செல்வன்' நாவல் எழுதாவிட்டால் இந்த அளவுகூட அருள்மொழி வர்மன் என்ற ராஜராஜனைப் பற்றி அறிந்துகொள்ள முடியாமல் போயிருக்குமோ எனத் தோன்றுகிறது.
                   ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக நிற்கும் ஒரு கலைக் கோயிலை படைத்திட்ட நம் தமிழ் மன்னனை ஒவ்வொரு தமிழரும் நினைத்து நினைத்துக் கொண்டாட வேண்டாமா?
 ஒரு மன்னராக போரை மட்டுமா நடத்தினார் ராஜராஜன்? இன்றைய மக்களாட்சியை 1000 ஆண்டுகளுக்கு முன்னரே தனது ஆளுகைக்கு உள்பட்ட ஒவ்வொரு ஊர்களிலும் நடைமுறைப்படுத்தியவர் அல்லவா?
சமயங்களைக் கடந்து, அனைத்து சமயங்களையும் ஆதரித்து நிதி வழங்கிய வள்ளல் அல்லவா? இன்றைய அரசு நிர்வாகத்துக்கு முன்னோடியாக தனித்தனியாக அரசாங்க நிர்வாக அவைகளை நியமித்து சிறப்புற ஆட்சி நடத்தியவர் அல்லவா?  பள்ளிப் புத்தகங்களில் ராஜராஜனைப் பற்றி பாடங்கள் உள்ளன. ஆனால், தமிழ் மன்னர்கள் வரிசையில் ராஜராஜனைப் பற்றியும் கூறப்படுவதாக மட்டுமே அது அமைந்துள்ளது. அந்தப் பாடங்களை மாற்றி, ராஜராஜனைப் பற்றி விரிவாக இடம்பெறச் செய்தால் வருங்கால சமுதாயமாவது அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும்.
                   தமிழ் மன்னர்களிலேயே வெளிநாடுகளுக்குப் படையெடுத்து வெற்றிகளை ஈட்டியதில் சிறப்பிடம் வகித்தவர் ராஜராஜன். அதற்கு அவருக்குப் பேருதவி புரிந்தது கப்பற்படை.
ஆதலால், ராஜராஜனின் வீரம், ஆன்மிகப் பணி, தமிழ்ப் பணி, சமுதாயப் பணி என ஒவ்வொன்றைப் பற்றியும் நாம் அறிந்தவரையிலும், இன்னும் ஆராய்ச்சி செய்தும் பள்ளி, கல்லூரிப் பாடங்களில் இடம்பெறச் செய்யலாம்.
                 திரைப்படங்களிலும், இணையதளங்களிலும் மூழ்கி தேவையில்லாத தகவல்களையும்  விரல்நுனியில் தெரிந்திருக்கும் இளைய சமுதாயம் நம் ராஜராஜனைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொள்ளட்டுமே.
                             இவை மட்டுமன்றி, தஞ்சைப் பெரிய கோயிலைச் சுற்றிப் பார்ப்பதற்காக என்றே தனி சுற்றுலா திட்டத்தை சலுகைக் கட்டணத்தில் மாவட்டந்தோறும் அரசு செயல்படுத்தலாம். ராஜராஜன் குறித்து ஆராய்ச்சிகள் மூலம் இதுவரை தெரியவந்துள்ள தகவல்களைப் புத்தகமாக வெளியிட்டு, நூலகங்களுக்கு அரசே வழங்கலாம். தமிழ் மன்னரின் பெருமைகளைத் தமிழர்களாவது தெரிந்துகொள்ளட்டும்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png