ஜன- 03-01-2011 |
தமிழகத்தில் பல்வேறு புதிய முயற்சிகளை கல்வித்துறையில் பலர் பின்பற்றினாலும், அடிப்படையில் பல பிரச்னைகளை கல்வித்துறை சந்திக்கிறது. தமிழகத்தில் சமச்சீர் கல்வி நடைமுறை அமல்படுத்தப்பட்டாலும், அடுத்த பத்தாண்டுகள் கழித்து மற்ற மாநிலங்களுடன் கல்வியில் போட்டியிட முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. சமீபத்தில் கல்வியில் சீர்திருத்தம் என்ற அடிப்படையில், மைக்கேல் டானினோ என்பவர் ஒரு பெரிய சர்வே எடுத்திருக்கிறார். 11 ஆயிரம் மாணவ, மாணவியரிடம் எடுக்கப்பட்ட சர்வே அது. அதில் உள்ள சில தகவல்கள்: தாய் மொழி படிக்க ஆர்வம் இருக்கிறதே தவிர, அதிக அளவு பழக்கம் இல்லை. விளையாட்டுகளில் ஆர்வம் இருந்த போதும் கபடி போன்ற சாதாரண விளையாட்டுகளில் தான் பழக்கம் இருக்கிறது. சுயநலம், பணத்தின் மீது அதிக ஆசை இளம் வயதிலேயே ஏற்படும் வகையில் கல்வி உதவுகிறது. கஷ்டப்பட்டு படிப்பது ஒன்றே வாழ்க்கை, தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற கருத்தும் இருக்கிறது. ஆங்கில மீடியம் படிக்கும் மாணவர்கள் தமிழகத்தில் ஓரளவு படிப்பில் திருப்திபடுகின்றனர். ஆனால், பலர் பாடத்திட்டம் அதிகம் இருக்கிறது, அதில் எதிர்பார்க்கும் தரம் இல்லை என்றிருக்கின்றனர்.அதிக இன்ஜினியரிங் பட்டதாரிகளை உருவாக்கும் முன்னணி மாநிலம் தமிழகம். ஆண்டுதோறும் கல்லூரி வளாகத்திலேயே ஆயிரக்கணக்கானோர் தகவல் தொழில்நுட்பப் பணிகளுக்கு தேர்வும் செய்யப்படுகின்றனர். ஆனால் எத்தனை பேர் வேலை கிடைக்காமல், ஏனோதானோவென பணியில் சேர்கின்றனர் என்ற புள்ளி விவரம் இல்லை.தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் பிளஸ் 2 வரை கல்வி கற்பிக்கும் முறை அமல்படுத்தப்படுகிறது. குறிப்பாக செயல்முறைக்கல்வி மற்றும் முடுக்கிவிடப்பட்ட கல்வி என்று இவை தீவிரமாக அமலாகின்றன. ஆனால், மெட்ரிக் கல்வியில் இவை அமலாக்கம் இல்லை. தவிரவும், தற்போது பல மெட்ரிக் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., திட்டத்திற்கு மாற முயற்சிக்கின்றன. அதே சமயம், மத்திய கல்வித் திட்டத்தில் இயங்கும் ‘சென்ட்ரல் பப்ளிக் ஸ்கூல்’ அளவுக்கு கல்வியின் தரம் காணோம். காரணம், இத்தகைய பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் எளிதாக ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வை சந்திக்க முடியும். ஆனால், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் ‘பிட்ஜி’ போன்ற அமைப்புகளில் தனியாக சேர்ந்து தயார் செய்து கொள்ள வேண்டும். இதை விட, பிளஸ் 2வில் அறிவியல் பாடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுகளில், பிராக்டிகலுக்கு 50 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், எல்லா மாணவ, மாணவியரும் இந்த மதிப்பெண்ணை பெற்று விடுகின்றனர். மேலும், தியரி என்னும் பாடத்திட்ட கேள்விகளில் 20 மதிப்பெண் பெறுபவர்களும், பிராக்டிகலில் 40 மதிப்பெண் பெறுவது வழக்கம். தமிழகத்தில் அரசு சம்பந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 50 சதவீதப் பள்ளிகளில் இதற்கான பயிற்சி தர வாய்ப்பே இல்லை. மிகவும் சிறிய நகரங்களில் அமைந்த பள்ளிகளில் இத்தேர்வுகளை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் வெளியூரில் இருந்து வருவதால், அவர்களை உணவு கொடுத்து கவனிக்கும் நிர்வாகம், ‘சிக்கன்-65’ அளித்து எளிதாக முடித்து விடுவதாக பேச்சு இருக்கிறது. இது உபசரிப்பு தானே தவிர ஊழல் என்று கூறமுடியாது. ஆனால், இந்த மாணவ, மாணவியர் மேற்கல்வியில், குறிப்பாக இன்ஜினியரிங் மற்றும் அறிவியலில் சேரும் போது எப்படி சமாளிப்பர்? அண்டை மாநிலமான ஆந்திராவில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் கற்றுக் கொள்ளும் அறிவியல் பாடங்கள் அதன் தரம் இங்கு பிளஸ் 2விலும் இல்லை என்று கூறப்படுகிறது. இவை எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி கல்வித் திட்டம் அமைய வேண்டும். மத்திய அமைச்சர் கபில் சிபலோ அவசர அவசரமாக அடுத்தடுத்து புதிய திட்டங்களை அறிவிக்கிறார். மாநிலங்களில் உள்ள கல்வித் திட்டம் பற்றிய ஒட்டுமொத்த அணுகுமுறை அதில் இருப்பதாக தெரியவில்லை.இந்த நிலையில், தமிழகத்தில் கல்வித்திட்டங்கள் எந்த நோக்கில் அடுத்த பத்தாண்டுகளுக்கு நிலையான பாதையில் செல்லுமா, அதற்கான அடிப்படைக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டதா, அப்படி உருவாக்கவில்லை எனில் எப்போது உருவாக்கப்படும் என்ற கேள்வி இப்போது பெரிதாக எழுந்திருக்கிறது. -கல்வி மலர் |
.
திங்கள், 3 ஜனவரி, 2011
கல்வித்துறையில் உள்ள அடிப்படை சிக்கல்கள்
Facebook Comments
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.