பள்ளிக் கல்வி இயக்குனராக வசுந்தரா தேவி நியமனம்-18-06-2011
பள்ளிக் கல்வி இயக்குனர் பதவியை கூடுதல் பொறுப்பாக வகித்து வந்த தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி, பள்ளிக் கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்வுத்துறை இயக்குனர் பதவி, கூடுதல் பொறுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி இயக்குனர் பதவியில் இருந்த பெருமாள்சாமி, முந்தைய ஆட்சியில் டி.என்.பி.எஸ்.சி.,யில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
அதையடுத்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவியிடம், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பதவி, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இர ண்டு மாதங்களுக்கும் மேலாக, இரு பொறுப்புகளையும் வகித்து வந்த வசுந்தரா தேவி, சமச்சீர் கல்விக்கான நிபுணர் குழுவில், பள்ளிக் கல்வி இயக்குனர் என்ற முறையில், உறுப்பினர் - செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கூடுதல் பொறுப்பு வகிக்கும் நிலையில், ஒரு அதிகாரி, நிபுணர் குழுவில் இடம் பெறக் கூடாது என கூறப்படுகிறது. இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறையின் இயக்குனராக வசுந்தரா தேவி நியமிக்கப்பட்டு, தேர்வுத்துறை இய க்குனர் பணியிடம் கூடுதல் பொறுப்பாக மாற்றி வழங்கப்பட்டுள்ளது.
குழுவின் பணி முடிந்த பிறகு, வசுந்தரா தேவி மாற்றம் செய்யப்பட மாட்டார் என்றும், பள்ளிக் கல்வி இயக்குனர் பதவியில் தொடர்வார் என்றும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜூலை 6ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி குறித்த அறிக்கை தயார்: குழுவை நியமித்தது அரசு
சென்னை: சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, சமச்சீர் கல்வி பாடத்திட்டங்களின் தரத்தை ஆராய, தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையில் 8 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைத்து, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இக்குழு, பாடத்திட்டத்தின் தரத்தை ஆய்வு செய்து, ஜூலை 6 க்குள், சென்னை ஐகோர்ட்டில் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும் முதல்வர் தெரிவித்து உள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக மாணவர்களுக்கு தரமான, சமமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், 2010ம் ஆண்டு சமச்சீர் பள்ளிக்கல்வி முறை சட்டத்திற்கு எனது அரசால் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து, சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த சென்னை ஐகோர்ட், சட்டத் திருத்தத்திற்கு இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல் சிறப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஜூன் 15ல் வழங்கிய உத்தரவில், "பாடத்திட்டத்தின் தரம் மற்றும் பாட நூல்களின் தரம் ஆகியவை குறித்து ஆராய, தலைமைச் செயலர் தலைமையில், இரு மாநில பிரதிநிதிகள், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இரு பிரதிநிதிகள், இரு கல்வியாளர்கள், பள்ளிக் கல்வித் துறை செயலர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு குழு அமைக்க வேண்டும் என்றும், இக்குழு, ஜூலை 6க்குள் சென்னை ஐகோர்ட்டில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என்றும் கூறியிருந்தது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, தலைமைச் செயலர் தலைமையில், எட்டு உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவை, தமிழக அரசு அமைத்துள்ளது. இக்குழு, ஜூலை 6க்குள், தனது அறிக்கையை சென்னை ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கும் என அறிக்கையில் கூறியுள்ளார். சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களில், கோவை செம்மொழி மாநாட்டுக்காக, முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய பாடல் மற்றும் மாநாட்டுச் செய்திகள், கருணாநிதியைப் பற்றிய பல்வேறு குறிப்புகளும் சேர்க்கப்பட்டன. நடந்து முடிந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், சமச்சீர் கல்வித் திட்டங்கள் தரமானதாக இல்லை என்றும், இத்திட்டத்தை நடப்பாண்டில் நிறுத்தி வைத்து, பழைய பாடத்திட்டங்களே அமல்படுத்தப்படும் என்றும் புதிய அரசு அறிவித்தது. சமச்சீர் கல்வித் திட்டங்களின் தரத்தை உயர்த்திய பின், அத்திட்டம் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சமச்சீர் கல்வியை நிறுத்த வழி வகை செய்யும் சட்டத் திருத்தத்தை, கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் கொண்டு வந்து, ஒரே நாளில் தமிழக அரசு நிறைவேற்றியது.
இந்த சட்டத் திருத்தத்திற்கு, சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்த நிலையில், இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, தற்போது சமச்சீர் கல்வித் திட்டங்களின் தரத்தை ஆராய குழு அமைத்து, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். நிபுணர்கள் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கும். அதன் பிறகே, இரண்டு முதல் ஐந்து மற்றும் ஏழு முதல் பத்தாம் வகுப்புகளுக்கான பாடத்திட்ட விவரங்கள் தெரிய வரும். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு மட்டும், சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு எந்தவிதமான பிரச்னைகளும் இல்லை. இதர வகுப்பு மாணவர்களுக்கு, சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வரும் வரை, மூன்று வாரங்களுக்கு செய்முறை அடிப்படையில், பல்வேறு சிறப்புத் திட்டங்களை வகுத்து, பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளன.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.