மாறுதலுக்கு காத்திருக்கும் கல்வித்துறை அதிகாரிகள்: பணிகள் கடும் தேக்கம்
சேலம்: தமிழக பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகளில் பலரும் இடமாறுதலுக்காக காத்திருப்பதால், முக்கிய கோப்புகளில் கையொப்பமிட மறுத்து வருகின்றனர். இதனால், கடந்த இரு மாதங்களாக, கல்வித்துறையில் பணிகள் தேக்கம் அடைந்துள்ளன.
தமிழகத்தில், கடந்த மே மாதத்தில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அரசு பதவியேற்றது. பதவியேற்றவுடன் போலீஸ் மற்றும் நிர்வாக துறையில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். அதில், பெரும்பாலான மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர் மற்றும் எஸ்.பி., உள்ளிட்டவர்கள் நியமிக்கப்பட்டனர். அதே போல், தமிழக பள்ளிக்கல்வித் துறையில், தேர்வுத்துறை, தொடக்கக்கல்வி, மெட்ரிக் பள்ளி, ஆசிரியர் பயிற்சி, பாடநூல் கழகம், அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி, வளரிளம்பருவ கல்வி உள்ளிட்ட இயக்குனர் அந்தஸ்தில் 9 பேரும், 10க்கும் மேற்பட்ட இணை இயக்குனர் பணியிடங்களும் உள்ளன. இப்பணியிடங்கள் மற்றும் மாவட்ட அளவிலான முதன்மைக்கல்வி அலுவலர், தொடக்கக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி இயக்குனர் ஆகிய பணியிடங்களிலும் இடமாறுதல் செய்யப்படலாம், என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், சமச்சீர் கல்வியை ரத்து செய்தது, கல்வித்துறையில் பூகம்பத்தை உருவாக்கியது. இப்பிரச்னை இதுவரை முடிவடையாமல் இழுபறியாகவே இருந்து வருவதால், கல்வித்துறை உயர் அதிகாரிகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், சமச்சீர் கல்வி பிரச்னையில் முடிவு தெரிந்த உடன், தங்களுக்கு இடமாறுதல் உறுதியாக இருக்கும் என, உயர் அதிகாரிகள் நம்பி வருகின்றனர். இதனால், எதிர்கால பிரச்னைகளை தவிர்க்க, முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவதை தவிர்த்து வருகின்றனர். இந்த ஆவணங்களை தொடர்ந்து, தங்களது டேபிளில் பாதுகாப்பாகவே வைத்திருப்பதால், பலருக்கும் பாதிப்புகள் ஏற்படுகிறது. உரிய காலத்தில் கிடைக்கும் நிவாரணங்களும் கிடைக்காமல் போகிறது. இன்னும் ஒரு மாதத்தில் ஓய்வு பெறப்போகும் இயக்குனர் ஒருவரும், எந்த பைலிலும் கையெழுத்திடுவதில்லை, என புகார் எழுந்துள்ளது. தங்களுக்கு கீழ் உள்ள பணியாளர்களின் பயணப்படிக்கான பைல்களில் கூட கையெழுத்திடுவதில்லை என்பதால், ஒட்டுமொத்த நிர்வாகமே ஸ்தம்பித்து கிடக்கிறது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.