ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கு பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களை பயன்படுத்துவதால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு முடிந்து, தற்போது முதலாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடக்கிறது. இத்தேர்வை, பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் முதன்மை கல்வி அலுவலர், கல்வி மாவட்ட அலுவலர் ஆகியோர் நடத்துகின்றனர். இடைநிலை முதல், தலைமை ஆசிரியர்கள் வரை அனைவரும் பங்கேற்று தேர்வை நடத்துகின்றனர். ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த யாரும் தேர்வில் பங்கேற்பதில்லை. மாறாக, பள்ளிக் கல்வித்துறையே முழுமூச்சாக இதை நடத்துவதால் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிப் பணிகள் பாதிக்கின்றன.
புதிய கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை, புதிய பாடத்திட்டம் என இப்பள்ளிகள் "பிசி'யாக இயங்கும் நேரம், ஆசிரியர் பயிற்சி தேர்வு நடக்கிறது. இத்தேர்வுக்கென பள்ளி ஆசிரியர்கள் சென்றுவிடுகின்றனர். இதுதவிர, தேர்வு நடக்கும் மையங்களும் இப்பள்ளிகளில்தான் அமைக்கப்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் அரசு, உதவிபெறும், சுயநிதி என 28 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இங்கு படிக்கும் ஆயிரம் பேர் வரை இத்தேர்வில் பங்கேற்கின்றனர். இவர்களுக்கான தேர்வை, தனி இயக்குனரகத்தின் கீழ் இயங்கும், ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி கல்வித் துறையே நடத்துவதே பொருத்தமாக இருக்கும். அதை, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலேயே நடத்தலாம். அதற்கான ஆசிரியர்களும் உள்ளனர். ஆனால், பள்ளிக் கல்வித் துறை நடத்துவதால், ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள், தேர்வுக் காலம் முழுவதும் வேறு பணியின்றி உள்ளனர். தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலர் சாமிசத்யமூர்த்தி, மாவட்ட செயலர் பாஸ்கரன் கூறுகையில், "பள்ளி மாணவர் நலன் கருதி, ஆசிரியர் பயிற்சி தேர்வை அத்துறையினரே நடத்தலாம். மெட்ரிக் பள்ளிகளின் தேர்வை அப்பள்ளிகளிலேயே நடத்துவது போல, இத்தேர்வையும் நடத்தலாம்' என்றனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.