சமச்சீர் கல்வி திட்டத்தில் தயார் நிலையில் புத்தகம்
சமச்சீர் கல்வியை அமல்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டதையடுத்து, தமிழ்நாடு பாடநூல் கழக குடோன்களில் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சமச்சீர் கல்வி திட்டத்தை, இந்த கல்வி ஆண்டு முதலே அமல்படுத்த வேண்டும் என, சென்னை ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. புத்தகம் இருப்பு: ஜூலை 22க்குள், புத்தகங்களை பள்ளிகளில் வழங்க கோர்ட் உத்தரவிட்டது. அவற்றை வழங்க, கல்வித்துறை அதிகாரிகள் அரசின் உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதே நேரம், மெட்ரிக் பள்ளிகளுக்கு தேவையான சமச்சீர் கல்வி புத்தகங்கள், தமிழ்நாடு பாடநூல் கழக குடோன்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இவற்றை, மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர்களே வாங்கி தருவார்களா அல்லது பள்ளி நிர்வாகம் வாங்கி, மாணவர்களுக்கு வழங்க வேண்டுமா என்ற அறிவிப்பு இல்லாததால், மெட்ரிக் மாணவர்கள், புத்தகம் கிடைக்குமா என்ற சந்தேகத்தில் தவிக்கின்றனர். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்க, சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன. மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கான சமச்சீர் கல்வி திட்ட பாடப் புத்தகங்களை அந்தந்த பள்ளிகளே நேரடியாக குடோனில் பெறலாம். இதற்கான உத்தரவு இரண்டு நாட்களில் வரும். அதன் பின் புத்தகம் வழங்கப்படும்'' என்றார்
சமச்சீர் கல்வி குறித்த ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு
சென்னை: "ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த கல்வியாண்டில் அமல்படுத்த வேண்டும். வரும் 22ம் தேதிக்குள், மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டது. சமச்சீர் கல்வி அமல்படுத்துவதை தள்ளி வைக்க வகை செய்யும், சட்டத் திருத்தத்தையும் ஐகோர்ட் ரத்து செய்தது. ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப் போவதாக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து இன்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
இவ்வழக்கில், "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: சமச்சீர் பாடத் திட்டம் மற்றும் பாடப் புத்தகங்களை இந்த ஆண்டில் கைவிட வேண்டும் என, குழு உறுப்பினர்களிடம் ஒருமனதான கருத்து இல்லை. சில மாற்றங்கள், இணைப்புகளை ஒவ்வொரு உறுப்பினரும் சுட்டிக் காட்டியுள்ளனர். இதே கருத்தை, கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர். இது தான் நிலை என்றால், சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்கும் அரசு முடிவு, பின்னோக்கி அடியெடுத்து வைப்பது என்பதில் சந்தேகமில்லை; இதை நாங்கள் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. மீண்டும் பழைய நிலைக்கு செல்வது என்பது, ஐகோர்ட் உத்தரவை மீறுவது மட்டுமல்லாமல், சமச்சீர் கல்வி சட்டத்தை ரத்து செய்தது போலாகி விடும். அரசின் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தினால், மாணவர்களின் நலன்களுக்கு ஆபத்தாகி விடும். தமிழக அரசு கொண்டு வந்த திருத்தச் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்தில் கூறியுள்ள சம உரிமையை மீறுவதாக உள்ளது. இது ரத்து செய்யப்படுகிறது. வகுப்புகளை ஆசிரியர்கள் துவங்க ஏதுவாக, சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை உடனடியாக வினியோகிக்க வேண்டும். வரும் 22ம் தேதிக்குள் வினியோகித்து முடிக்க வேண்டும்.
மூன்று மாதங்கள்: குழு உறுப்பினர்கள் அளித்த பரிந்துரைகளின்படி, பாடத் திட்டங்கள், பாடப் புத்தகங்களை ஆய்வு செய்யலாம். ஆட்சேபனைக்குரிய பகுதிகளை நீக்கிவிட்டு, சேர்க்க வேண்டிய பகுதிகளைச் சேர்த்து, அவற்றை கூடுதல் தொகுப்பாக மூன்று மாதங்களுக்குள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட பாடப் புத்தகங்களில் அங்கீகரிக்கப்பட்ட பாடப் புத்தகங்களை அரசு தெரிவிக்க வேண்டும்.
இன்றைய மாணவர்கள் தான், நமது நாட்டின் நாளைய எதிர்காலம் என்பதை கருத்தில் கொண்டு, சமச்சீர் கல்வியை அமல்படுத்த மாநில அரசு முயற்சிகளை எடுக்கும் என நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
டில்லி பறந்தார்...! : உத்தரவை தலைமை நீதிபதி வாசித்து முடித்த உடன், "ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்துவதை தள்ளி வைக்க வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய உள்ளோம்' என அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கூறினார். ஆனால், அவர் கேட்ட கால அவகாசத்தை முதல் பெஞ்ச் ஏற்கவில்லை. தங்களுக்கு உத்தரவின் நகல் உடனடியாக வழங்க வேண்டும் என, அட்வகேட் ஜெனரல் கோரினார். உத்தரவு நகல் வழங்க, தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அப்பீல் செய்வதற்காக நேற்று அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், டில்லி புறப்பட்டு சென்றார். தற்போது சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள், மாவட்ட தலைநகரங்களில் முதன்மை கல்வி அலுவலர்கள் கட்டுப்பாட்டில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு, மேல் முறையீடு செய்தால், அதன் மீது உத்தரவு வர சில நாட்கள் ஆகும். அதுவரை பாடப் புத்தகங்கள் வழங்கப்படுமா, இல்லையா என்பது தெரியவில்லை.
மாணவர்களுக்கு புத்தகம் கிடைக்குமா? : சமச்சீர் கல்வி வழக்கில், நடப்பு கல்வியாண்டில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, சென்னை ஐகோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. 22ம் தேதிக்குள், மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்கி, வகுப்புகளை ஆரம்பிக்க வேண்டும் என, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பின்படி, மாணவர்களுக்கு இன்று முதல், சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து, அரசு வட்டாரங்கள் கூறியதாவது: வரும் 22ம் தேதிக்குள், சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும் என்று தான், ஐகோர்ட் கூறியுள்ளது. 19ம் தேதியில் இருந்து வழங்க வேண்டும் என கூறவில்லை. எனவே, 22ம் தேதி வரை கால அவகாசம் இருக்கிறது. தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் உடனடியாக மேல் முறையீடு செய்ய உள்ளது. கடந்த முறை, விரைவாக தீர்ப்பு பெற்றதுபோல், இந்த முறையும் தமிழக அரசின் அப்பீல் மனுவை, அவசர மனுவாக ஏற்று விசாரிக்க வலியுறுத்தப்படும். நாளையே (இன்று) அப்பீல் மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், விரைவாக தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தெரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்பட அரசு திட்டமிட்டுள்ளது. சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை, மாணவர்களுக்கு வினியோகம் செய்ய ஒரு நாள் போதும். அதனால், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும் வரை, எந்தவித நடவடிக்கையும் இருக்காது. இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், 22ம் தேதி வரை மாணவர்களுக்கு புத்தக வினியோகம் உடனடியாக இருக்க வாய்ப்பில்லை.
கல்வி அமைச்சர் டில்லி பயணம் : சமச்சீர் கல்வி குறித்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பை அடுத்து மேல் முறையீடு செய்வதற்காக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று டில்லி புறப்பட்டுச் சென்றனர். சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே செயல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வதற்காக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், பள்ளிக்கல்வித்துறை செயலர் ஷபீதா, அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் நேற்று இரவு 9.10 மணிக்கு சென்னையில் இருந்து டில்லி செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் டில்லி புறப்பட்டனர்.
மேல்முறையீடு: மாலையில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. தனது மனுவில் சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் தரமற்றவை. நடப்பாண்டு பழைய பாடத்திட்டங்களே தொடர அனுமதி வழங்க வேண்டும் என கூறியுள்ளது.
சீட்' கிடைத்தும் பணம் இல்லாததால் கானல் நீரானது டாக்டர் படிப்பு!
அரியலூர்: டாக்டருக்கு படிக்க இடம் கிடைத்தும், கல்வி கட்டணம் செலுத்த முடியாததால், அரியலூர் அருகே, விவசாய கூலி தொழிலாளியின் மகன், விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகிறார். அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல், 50. இவரது மனைவி லெட்சுமி, 45. விவசாய கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு, ராஜவேல், 17, என்ற மகனும், சுபாஷினி என்ற மகளும் உள்ளனர். சிறுகடம்பூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் படித்த ராஜவேல், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், 470 மதிப்பெண் பெற்று, பள்ளியில் இரண்டாமிடம் பெற்றார். கூலித் தொழிலாளி மகனான ராஜவேல், அதிக மார்க் பெற்று தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து, நல்ல பள்ளியில் படிக்க வைத்தால், பிளஸ் 2வில் அதிக மார்க் பெறுவார் என, பள்ளி ஆசிரியர்களும், மாணவனின் உறவினர்களும் கூறியதையடுத்து, தங்கவேல், சிறுகடம்பூரில் இருந்த வீட்டை விற்று, சேலம் மாவட்டம், வீரகனூரில் உள்ள ராகவேந்திரா பள்ளியில் மகனை சேர்த்து படிக்க வைத்தார்.
கிராமத்தில் இருந்த வீட்டை விற்று விட்ட தங்கவேல், தற்போது செந்துறையில் உள்ள நமச்சிவாயம் என்பவரது வயலில், ஒரு கொட்டகையில் குடியிருந்து, விவசாய கூலி வேலை செய்து வருகிறார். ராகவேந்திரா பள்ளியில், பிளஸ் 2 படித்த ராஜவேல், 1,171 மார்க் பெற்று, பள்ளி அளவில் முதலிடமும், சேலம் வருவாய் மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பெற்றார். ராஜவேலின் ஏழ்மை நிலையை உணர்ந்த ராகவேந்திரா பள்ளி நிர்வாகிகள், அவரது மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை பெற்று, சொந்த செலவில் மருத்துவ கவுன்சிலிங்குக்கு அனுப்பி வைத்தனர். ராஜவேலின் மருத்துவ, "கட் ஆப்' மதிப்பெண், 198.5. டாக்டர் படிப்புக்கான கவுன்சிலிங்குக்கு சென்ற ராஜவேலுக்கு, மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க இடம் கிடைத்துள்ளது. இதையடுத்து, மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் செலுத்த முடியாமல், ராஜவேலுவின் தந்தை தங்கவேலு தவித்து வருகிறார். மகனுடைய பிளஸ் 2 படிப்புக்காக, வீட்டை விற்று விட்டு, விவசாய நிலத்தில் குடியிருந்து வரும் தங்கவேலு, மகனின் டாக்டர் படிப்புக்கு பணம் கட்ட முடியாமல் திணறி வருகிறார். அதனால், தங்கவேலுக்கு உதவியாக, ராஜவேலுவும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். மாணவன் ராஜவேலுவின் கல்வி கட்டணத்தை ஏற்க முன்வருவோர், தங்கவேலுவின் மொபைல்போன் எண் 95852 68053க்கு தொடர்பு கொள்ளலாம்.
கிராமத்தில் இருந்த வீட்டை விற்று விட்ட தங்கவேல், தற்போது செந்துறையில் உள்ள நமச்சிவாயம் என்பவரது வயலில், ஒரு கொட்டகையில் குடியிருந்து, விவசாய கூலி வேலை செய்து வருகிறார். ராகவேந்திரா பள்ளியில், பிளஸ் 2 படித்த ராஜவேல், 1,171 மார்க் பெற்று, பள்ளி அளவில் முதலிடமும், சேலம் வருவாய் மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பெற்றார். ராஜவேலின் ஏழ்மை நிலையை உணர்ந்த ராகவேந்திரா பள்ளி நிர்வாகிகள், அவரது மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை பெற்று, சொந்த செலவில் மருத்துவ கவுன்சிலிங்குக்கு அனுப்பி வைத்தனர். ராஜவேலின் மருத்துவ, "கட் ஆப்' மதிப்பெண், 198.5. டாக்டர் படிப்புக்கான கவுன்சிலிங்குக்கு சென்ற ராஜவேலுக்கு, மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க இடம் கிடைத்துள்ளது. இதையடுத்து, மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் செலுத்த முடியாமல், ராஜவேலுவின் தந்தை தங்கவேலு தவித்து வருகிறார். மகனுடைய பிளஸ் 2 படிப்புக்காக, வீட்டை விற்று விட்டு, விவசாய நிலத்தில் குடியிருந்து வரும் தங்கவேலு, மகனின் டாக்டர் படிப்புக்கு பணம் கட்ட முடியாமல் திணறி வருகிறார். அதனால், தங்கவேலுக்கு உதவியாக, ராஜவேலுவும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். மாணவன் ராஜவேலுவின் கல்வி கட்டணத்தை ஏற்க முன்வருவோர், தங்கவேலுவின் மொபைல்போன் எண் 95852 68053க்கு தொடர்பு கொள்ளலாம்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.