சமச்சீர் கல்வி தொடர வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
சென்னை: சமச்சீர் கல்வித்திட்டத்தை அனைத்து வகுப்புகளிலும் தொடர சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வரும் 28ம் தேதிக்குள் சமச்சீர் பாடபுத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகம் செய்யவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது
.
சட்ட திருத்தமும் ரத்து: இந்த வழக்கில் இன்று சென்னை மதியம் (12. 45 மணியளவில் ஐகோர்ட் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். தலைமை நீதிபதி இக்பால் தலைமையிலான பெஞ்ச் கொண்ட நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது: நடப்பாண்டில் 1 முதல் 10 வரை அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வியை தொடர வேண்டும் என்றும் வரும் 22 ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி தொடர்பான புத்தங்கள் வழங்கிட வேண்டும் என்றும், பழைய பாடத்திட்டத்திற்கு தடை விதித்தது. மேலும் இன்னும் 3 மாதத்திற்குள் ஒரு குழுவை அமைத்து சமச்சீர் கல்வி குறைபாடுகளை தீர்த்துக்கொள்ளலாம். தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தமும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. புதிய பாடப்பபுத்தகம் வழங்குவதற்கான கால அவகாசம் போதாது என்று அரசு வக்கீல் சார்பில் தெரிவிக்கப்பட்டது .இது தொடர்பாக தனி மனுவை தாக்கல் செய்யுங்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர்
.
சமச்சீர் கல்வி: தமிழக அரசு மேல்முறையீடு
சென்னை: சமச்சீர் கல்வி வழக்கில் சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, சமச்சீர் கல்வித்திட்டம் மீண்டும் இழுபறி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது
சமச்சீர் கல்வி திட்டம்: தி.மு.க.,விற்கு சொந்தமல்ல :கருத்தரங்கில் சாடல்.
"சமச்சீர் கல்வியின் பார்வையில் சட்டம்' எனும் தலைப்பில், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசியதாவது: கடந்த 2006ம் ஆண்டு, தேசிய கல்வி திட்டப்படி, சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை வகுக்க, தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனம், தமிழக அரசுக்கு 10 லட்சம் ரூபாய் அளித்தது. ஆனால், 2009 ஜூலை 14ம் தேதி, இந்திய மாணவர் சங்கத்தினர், தலைமைச் செயலகம் முன், சமச்சீர் கல்வியை அமல்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்திய பின்தான், தமிழக அரசு இத்திட்டத்தை முழுவீச்சில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தது. எனவே இத்திட்டம், முந்தைய தி.மு.க., அரசுக்கோ, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கோ சொந்தமானதல்ல.
இப்பாட திட்டப்படி தயாரிக்கப்பட்ட பாடபுத்தகங்களில் உள்ள எழுத்துப் பிழைகளை திருத்துவது, அரசியல் சார்ந்த சில கருத்துகள் இடம்பெற்றுள்ள பக்கங்களை மறைப்பது போன்ற பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுபோல, இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும், ஏழு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலுமான பாடப்புத்தகங்களில் பிழைகள் இருந்தால் அவற்றை திருத்தலாம். சமச்சீர் கல்வி பாடத் திட்டம் கொண்டுவரப்படுவதன் மூலம், தங்கள் பாடத் திட்டம் குறித்து, அரசுப் பள்ளி மாணவர்கள் மத்தியில் உள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கலாம். மெட்ரிக், அரசுப் பள்ளி மாணவர்களுக்கிடையே படிப்பில் ஆரோக்கியமான போட்டி ஏற்படும். அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பட வழிபிறக்கும். இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசினார்
தரமற்ற பள்ளிக்கட்டடம் உருவாகும் அபாயம் :அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவிப்பு
தமிழகத்தில், இடைநிலைக்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், 2009-10ம் ஆண்டில், 200 நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதில், நான்கு வகுப்பறை, ஒரு தலைமை ஆசிரியர் அறை, அலுவலக அறை, ஆய்வுக்கூடம், நூலகம், கலாசார அறை, கம்ப்யூட்டர் அறை உள்ளிட்டவற்றின் கட்டுமானத்துக்கு மட்டும், ஒவ்வொரு பள்ளிக்கும், 48 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2009, டிசம்பரிலேயே பள்ளி தலைமை ஆசிரியர், செயலராக உள்ள கல்விக் குழுவுக்கு முதல் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனாலும், கட்டடம் கட்டுவதற்கான அப்ரூவ்டு மேப் தருவதில், அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்ட அலுவலர்கள் தாமதம் செய்ததால், பணம் வழங்கியும் கட்டட பணிகளை துவக்க முடியாத நிலை காணப்பட்டது.
இந்நிலையில் ஓராண்டு தாமதத்துக்கு பின், 2010 டிசம்பரில், மேப் உள்ளிட்ட அனுமதி வழங்கப்பட்டு, இப்பள்ளிகளில் கட்டுமானப் பணிகள் துவங்கின. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பெரும்பாலான பள்ளிகளிலும், தற்போது வரை பாதியளவு கட்டடம் கூட கட்டி முடிக்கப்படவில்லை. ஆனால், சில மாதங்களுக்கு முன் இருந்த கட்டுமானப் பொருட்களின் விலை, தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில், 6,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மணல் விலை தற்போது, 16 ஆயிரத்து, 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜல்லி ஒரு யூனிட், 1,500 லிருந்து, 2,500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சிமென்ட், இரும்பு கம்பி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பல மடங்கு விலை அதிகரித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் மதிப்பிடப்பட்ட அதே தொகையில், கட்டடங்களை கட்டி முடிக்க, தலைமை ஆசிரியர்கள் விரட்டப்படுகின்றனர். இதனால், தரமற்ற பள்ளிக்கட்டடங்கள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரசு பள்ளி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: பள்ளிகளில் வகுப்பறை கட்டடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய அரசு தயாராக இருந்தாலும், அதை பெற்றுக்கொள்ள தலைமை ஆசிரியர்கள் மறுக்கும் நிலை உருவாகியுள்ளது. அனைவருக்கும் இடைநிலைத் திட்டத்தில், 2009-10ம் ஆண்டில் மதிப்பிடப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்துள்ள வகுப்பறை கட்டடங்கள் தற்போதுதான் கட்டத்துவங்கியுள்ளனர். திட்ட மதிப்பீடு செய்யும் காலத்துக்கும், கட்டட பணி துவங்கும் காலத்துக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. இதில், விலைவாசி பல மடங்கு அதிகரித்துள்ளதால், ஒதுக்கப்பட்ட நிதிக்கு, கட்டடங்களை கட்டி முடிக்க முடியாத நிலை உள்ளது. ஒரு சில தலைமை ஆசிரியர்கள், பிரச்னைகளை தவிர்க்க தங்களது சொந்தப்பணத்தை கொண்டு, கட்டடம் கட்டுகின்றனர். மனமில்லாதவர்கள், ஒதுக்கிய நிதியில் மேம்போக்காக கட்டடத்தை உருவாக்குகின்றனர். இதனால் பல பள்ளிகளில் கட்டடங்கள் தரமில்லாமல் உருவாகும் நிலை உள்ளது. புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவிப்பில் உள்ளனர். பள்ளிக்கட்டடங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கவுன்சிலிங் மூலம் "டிரான்ஸ்பர்' கோரி கல்வி அதிகாரிகள் போராட முடிவு
சிவகங்கை : ஆசிரியர்களைப் போன்று கல்வி அதிகாரிகளுக்கும் டிரான்ஸ்பர் கவுன்சிலிங் நடத்தக்கோரி, போராட்டம் நடத்துவது குறித்து கல்வி அதிகாரிகள் முடிவு எடுக்க உள்ளனர். மாநிலத்தில் முதன்மை, மாவட்ட கல்வி அலுவலர்கள், மெட்ரிக்., பள்ளி ஆய்வாளர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் உயர், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நிலையில் இருந்து பதவி உயர்வு பெற்றவர்கள். உயர், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியருக்கு தனி ஊதியமாக 500, 600 ரூபாய் வழங்கினர். இதே தலைமை ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்ற பின், தனி ஊதியத்தை அரசு ரத்து செய்தது. கவுன்சிலிங்: கல்வித்துறையில் ஆசிரியர் பணியிட மாற்றத்தின் போது, ஏற்படும் முறைகேட்டை தவிர்க்க, கடந்த ஆட்சியில் அ.தி.மு.க., அரசு கவுன்சிலிங் திட்டம் கொண்டு வந்தது. இதனால் நேர்மையான முறையில் ஆசிரியர்கள் "டிரான்ஸ்பர்' பெற்றனர். இது ஆசிரியர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால், கல்வித்துறை அதிகாரிகள் "டிரான்ஸ்பர்' க்கு கவுன்சிலிங் நடத்துவதில்லை. இதனால், சில கல்வித்துறை அதிகாரிகள், தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி, வேண்டிய மாவட்டங்களுக்கு டிரான்ஸ்பர் பெற்றனர். பதிவு மூப்பில் இருந்தும், விரும்பிய இடம் கிடைக்காமல், சில கல்வி அதிகாரிகள் பாதிக்கப்பட்டனர். இதை தவிர்க்க, கவுன்சிலிங் நடத்தவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து முதன்மை, மாவட்ட கல்வி அதிகாரிகள் சங்க மாநில தலைவர் பெரியசாமி கூறுகையில்,"" கடந்த 8 ஆண்டுக்கு முன் எங்களுக்கும் கவுன்சிலிங் நடத்தினர். அதற்கு பின் நடத்தவில்லை. வரும் 24ல் மாநில நிர்வாகிகள் தேர்தல் திருச்சியில் நடக்கிறது. அன்று எங்கள் கோரிக்கைகளை பெற எந்தவிதமான போராட்டம் நடத்துவது என முடிவு எடுப்போம்,'' என்றார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.