கிருஷ்ணகிரி: ஓசூரில், பிளஸ்2 கணித தேர்வின்போது கேள்வித்தாளை செல்போனில் படம் பிடித்து வாட்ஸ் அப்பில் அனுப்பிய ஆசிரியர், பள்ளி முதல்வருடன் சிக்கியுள்ளார். தமிழகத்தில் கடந்த 5ம் தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு துவங்கியது. இதில் முறைகேட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அரசு தேர்வுகள் இயக்குநரின் சார்பில் மாவட்ட பொறுப்பாளராக அனைவருக்கும் கல்வி இயக்க இணை இயக்குநர் நாகராஜன் முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வு கண்காணிப்பு பணியில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும்
ஓசூரில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓசூரில் உள்ள பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர், அங்குள்ள மற்றொரு தேர்வு மையத்தில் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த 18ம் தேதி நடைபெற்ற கணித தேர்வின்போது, இவர் விதி மீறி அறைக்குள் செல்போனை எடுத்துச்சென்றுள்ளார். தேர்வு அறையில் கேள்வித்தாளை வழங்கியதும், அதனை தனது செல்போன் மூலம் படம் பிடித்துள்ளார். பின்னர், அதனை தான் பணியாற்றி வரும் பள்ளியின் முதல்வருக்கு வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பியுள்ளார். இதுபற்றி அறிந்த பறக்கும்படையினர் விரைந்து சென்று தேர்வு அறை கண்காணிப்பாளராக செயல்பட்ட அந்த ஆசிரியரிடம் சோதித்தனர். அப்போது, தேர்வறைக்குள் செல்போன் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.
பின்னர், நடத்திய சோதனையில் கணித கேள்வித்தாளில் இடம்பெற்றிருந்த அனைத்து கேள்விகளும் செல்போனில் பதிவாகி இருப்பதை கண்டு திடுக்கிட்டனர். மேலும், அதனை தனது பள்ளியின் முதல்வருக்கு வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் செய்திருப்பதை அறிந்து பறக்கும்படையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாவட்ட பொறுப்பாளரான அனைவருக்கும் கல்வி இயக்க இணை இயக்குநர் நாகராஜன் முருகனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அவர் போலீசில் புகார் தெரிவிக்குமாறு பறக்கும்படையினருக்கு உத்தரவிட்டார். இதன்பேரில், போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து அந்த அறையின் கண்காணிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக சிறப்பு பறக்கும்படை தலைவரான மாவட்ட கலெக்டர் ராஜேஷை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, விசாரித்து விட்டு 10 நிமிடத்தில் பேசுவதாக கூறினார். ஆனால், பேசவில்லை. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராம சாமியிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, நடந்தது உண்மை. இதுகுறித்து நாங்கள் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளோம். அவர்கள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என தெரியவில்லை என தெரிவித்தார். எஸ்.பி. கண்ணம்மாளை செல்போனில் தொடர்புகொள்ள முயன்றபோது தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக தகவல் வந்தது.
மாநில அளவில் முதலிடம் பிடித்த பள்ளி
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த பிளஸ்2 பொதுத் தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்த பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையும் மாநில அளவில் முதலிடம் பெற வேண்டும் என்ற நோக்கிலேயே வினாத் தாள் வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த முறையும் மாநில அளவில் முதலிடம் பெற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுள்ளனர். மேலும் இதுவரை நடந்துள்ள தேர்வுகளின் வினாத்தாளும் வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்டுள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத் தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
|
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.