இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகளை மூடும் முடிவை, மத்திய அரசு கைவிட்டுள்ளது. '
வரும் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என, அறிவித்துள்ளது. ஆனால், கல்லுாரிகளை நிர்வகிப்பது யார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது.தமிழகத்தில், சென்னை, கோவை என, இரண்டு இடங்களிலும், நாடு முழுவதும், 13 அரசு இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இதில், 11 மருத்துவ கல்லுாரிகள் செயல்பாட்டில் உள்ளன.நிதிச்சுமையால் கல்லுாரிகளை நிர்வகிக்க முடியாமல் திணறிய, இ.எஸ்.ஐ., நிர்வாகம், வரும் ஆண்டில், மாணவர் சேர்க்கை இல்லை; மாநில அரசுகள் விரும்பினால் கல்லுாரிகளை ஒப்படைப்பது, இல்லாவிட்டால் மூடுவது என்ற முடிவுக்கு வந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இ.எஸ்.ஐ., மருத்துவ மாணவர்கள் நாடு முழுவதும், போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் உள்ள, இரண்டு கல்லுாரிகளையும் ஏற்று நடத்த, கொள்கை அளவில் ஒப்புக்கொண்ட தமிழக அரசு, பல நிபந்தனைகள் விதித்து, மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம்
எழுதியது.இந்த நிலையில், 'வரும் கல்வியாண்டில், மருத்துவம், மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய மருத்துவ துணை ஆணையர் விவேக் ஹண்டா, கல்லுாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இதை தெரிவித்துள்ளார்.மத்திய, மாநில அரசுகளுக்கான ஒதுக்கீடு விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வகிப்பதில் சிக்கல்:'எங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கல்லுாரிகளின் நிர்வாக சிக்கலையும் தீர்க்க வேண்டும்' என, மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.நிதிச்சுமையால் திணறியதால் தான் மாணவர் சேர்க்கையை நிறுத்தும் முடிவுக்கு, இ.எஸ்.ஐ., தலைமையகம் வந்தது. மாநில அரசுகள் பல நிபந்தனை விதித்துள்ள நிலையில், கல்லுாரிகளை நிர்வகிப்பது யார் என்ற சிக்கல் எழுந்துள்ளது.
'மத்திய, மாநில அரசுகள், தங்களுக்குள் பேச்சு நடத்தி, இறுதி முடிவு எடுக்கும் வரை, இ.எஸ்.ஐ., நிர்வாகமே கல்லுாரிகளை நடத்தும்; வரும் கல்வியாண்டுக்குள் இறுதி முடிவு எட்டப்பட்டு விடும்' என, இ.எஸ்.ஐ., நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவையில் சேர்க்கை இல்லை:தமிழகத்தில், சென்னை கே.கே.நகர் மருத்துவ கல்லுாரியில், வழக்கம்போல் மாணவர் சேர்க்கை நடக்கும். கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரியில், வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்தும் வகையில், பணிகள் முடுக்கி விடப்பட்டன.அதற்கான பணியிடங்கள்; வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள கல்லுாரிகளில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடப்பதால், கோவை கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு வாய்ப்பில்லை.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.