பள்ளி கல்வித்துறை செயலர் சபீதா ஆஜராக உத்தரவு
சென்னை: பார்வை குறைபாடு உடையவர்களுக்கு, விரிவுரையாளர் பணியில் ஒதுக்கீடு வழங்காத வழக்கில், அரசு தரப்பில் தாக்கல் செய்த மனுவுக்காக, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பார்வை குறைபாடு ஆசிரியர்கள் சங்கம், தாக்கல் செய்த மனு: விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கு, 2009, அக்டோபரில், ஆசிரியர் தேர்வு வாரியம், அறிவிப்பு வெளியிட்டது. அதில், பார்வை குறைபாடு உடையவர்களுக்கு, ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. விளக்க குறிப்பேட்டில், பார்வையற்றோர், காது கேளாதோர், விண்ணப்பிக்க தகுதியில்லை என, கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்; சட்டப்படி, எங்களுக்கு, ஒரு சதவீத ஒதுக்கீடு வழங்க, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.
அரசு மற்றும் ஆசிரியர் கல்வி இயக்குனரகம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு: காலி பணியிடங்கள், 165 ஐ நிரப்ப, அனுமதி வழங்கப்பட்டது. ஆசிரியர் பயிற்சி பெறுபவர்களின் செயல்பாடுகள், அவர்களின் முக வெளிப்பாடு, உடல் அசைவு, மொழித் திறன் ஆகியவற்றை விரிவுரையாளர்கள் மதிப்பிட வேண்டும். களப்பணியும் தேவைப்படுகிறது. பணியின் தன்மை, ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன் மற்றும் நடவடிக்கைகளை கண்காணித்து மதிப்பிடுவது, பார்வையற்றவர்களுக்கு கஷ்டம். இந்த நடவடிக்கைகளை எல்லாம், சாதாரணமாக உள்ளவர்களால் மட்டுமே ஆற்ற முடியும். இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கோவி. ராமலிங்கம் ஆஜரானார். 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: பார்வை குறைபாடு உடையவர்களை, சாதாரண நபர்களாக கருதாமல், தாக்கல் செய்யப்பட்ட மனு முறையற்றது. சட்டத்தை அமல்படுத்தாமல், அதை ஏய்க்கின்றனர். மனுவில், பள்ளி கல்வி துறை செயலர் சபிதா உறுதியளித்த, விவரங்களுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். அதிகாரி தாக்கல் செய்த மனுவின் தன்மையை பார்க்கும் போது, இந்த விஷயத்தை அப்படியே விட்டு விட முடியாது. துவக்கத்தில் இருந்து எவ்வளவு இடங்கள் காலியாக உள்ளது, பார்வை குறைபாடு உடையவர்களுக்கு எவ்வளவு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன, எவ்வளவு நிரப்பப்பட்டுள்ளன, காலியிடங்கள் இருந்தால், எவ்வளவு நாட்களுக்குள் நிரப்பப்படும் என்கிற விவரங்களை, பள்ளி கல்வித் துறை செயலர் மூலம், தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை, ஏப்., 1ம் தேதிக்கு, தள்ளி வைக்கப்படுகிறது. அன்றைய தினம், பள்ளி கல்வித் துறை செயலர், சபிதா, நீதிமன்றத்தில் இருக்க வேண்டும். இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.