!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

ஞாயிறு, 28 ஜூன், 2015

படிப்பை இடையே நிறுத்தும் மாணவர்கள் அதிகரிப்பு?
தமிழகத்தில் தற்போது, 10ம் வகுப்பு தேர்வெழுதியவர்களில் மட்டும், ஒன்பதாம் வகுப்பு சேர்க்கையிலிருந்து, 10ம் வகுப்பு தேர்வு முடிவதற்குள், ஒரு லட்சத்து, 8 ,224 மாணவ, மாணவியர் இடையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பள்ளிகள் மேற்கொள்ளும் நடவடிக்கையால், ஒவ்வொரு ஆண்டும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் எதிர்காலம் பாழாக்கப்படுகிறது.


மிரட்டல்:


தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2வில் அதிக தேர்ச்சி விகிதம் பெற வேண்டும் என்பது, அனைத்து பள்ளிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுவிட்டது.
தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, 100 சதவிகித தேர்ச்சி என்ற விளம்பரமே, மாணவர்களை கொண்டு வந்து சேர்க்கும் மந்திரமாக கருதப்படுகிறது. இதனால், எட்டாம் வகுப்பு வரை, சுமாராக படிக்கும் மாணவர்களை, 'டிசி' கொடுத்து அனுப்பி விடுவதை வழக்கமாகவே வைத்துள்ளனர்.அரசு பள்ளிகளிலும், சமீப காலமாக, கல்வித்துறை கடும் நெருக்கடி தர துவங்கியுள்ளது. 10ம் வகுப்பில், 100 சதவிகித தேர்ச்சி பெற வேண்டும் எனவும், தவறும் பள்ளிகள் மீதும், தலைமை ஆசிரியர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மிரட்டல் விடுத்து வந்தது.
எட்டாம் வகுப்பு வரை, எழுத படிக்கக்கூட தெரியாமல் வரும், அரசு பள்ளி மாணவர்களை, தேர்ச்சி பெற வைக்க வழி தெரியாமல், பெற்றோரை வரவழைத்து பேசி, அவர்களாகவே, 'டிசி' வாங்கிக்கொள்வதை போன்று, கட்டாய இடைநிறுத்தம் செய்து வந்தனர்.

அதையும் தாண்டி, தேர்வெழுதும் கடைசி நேரத்தில், தேர்ச்சி பெறுவது கடினம் என்ற மாணவர்களை, 'ஆப்சென்ட்' ஆக்குவதையும் வழக்கமாக கொண்டனர்.இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள, 10ம் வகுப்பு தேர்வு முடிவில், 92.9 சதவிகிதமாக தேர்ச்சி அதிகரித்துள்ளதாகவும், கல்வித்தரம் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகிறது.உண்மையில், இந்த ஆண்டு, ஒன்பதாம் வகுப்பு சேர்க்கையில் துவங்கி, 10ம் வகுப்பு தேர்வெழுதியது வரை, ஒரு லட்சத்து, 8,224 மாணவ, மாணவியர் மாயமாகியுள்ளது நிரூபணமாகியுள்ளது.

மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டு உள்ள இடைநிலைக்கல்வி, தகவல்:கடந்த, 2013 - -14ம் ஆண்டில், 6 லட்சத்து, 8,085 மாணவர்களும், 5 லட்சத்து, 61 ஆயிரத்து, 25 மாணவியர் சேர்த்து, மொத்தம், 11 லட்சத்து, 69 ஆயிரத்து, 110 பேர், ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்துள்ளனர்.
இவர்கள், 2014- - 15ம் ஆண்டில், 10ம் வகுப்பு படித்து, தேர்வெழுத தயாராகினர்.

இல்லை:


இதில், தேர்வுக்கான மாணவர் பட்டியல் தயாரிக்கப்படும் போது, 5 லட்சத்து, 40 ஆயிரத்து, 505 மாணவர்களும், 5 லட்சத்து, 32 ஆயிரத்து, 186 மாணவியரும் சேர்த்து, மொத்தம், 10 லட்சத்து, 72 ஆயிரத்து, 691 பேராக சரிந்தது.
அதாவது, ஒன்பதாம் வகுப்பிலிருந்து, 10ம் வகுப்பு தேர்வுக்கு முன் வரை, 67 ஆயிரத்து, 580 மாணவர்களும், 28 ஆயிரத்து, 580 மாணவியரும், சேர்த்து, மொத்தம், 96 ஆயிரத்து, 419 பேர் மாயமாகியுள்ளனர். இவ்வளவு பேரும், ஒன்பதாம் வகுப்பில் பெயில் ஆக்கப்பட்டள்ளனரா என்றால், 'இல்லை' என்ற பதில் தான் கிடைக்கிறது.

'ஆப்சென்ட்':


அதிலும் குறிப்பாக இடைநிறுத்தம் செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையில், மாணவர் எண்ணிக்கை, இரு மடங்குக்கும் மேல் அதிகமாக உள்ளது.
தேர்வு முடிந்த பின், தேர்வெழுதியவர்களின் எண்ணிக்கை, 5 லட்சத்து, 33 ஆயிரத்து, 43 மாணவர்களும், 5 லட்சத்து, 27 ஆயிரத்து, 823 மாணவியரும் சேர்த்து, 10 லட்சத்து, 60 ஆயிரத்து, 940 ஆக இருந்தது. அதாவது தேர்வில், 12 ஆயிரம் பேர், 'ஆப்சென்ட்'
ஆகியுள்ளனர்.தற்போது தேர்வெழுதிய மாணவர்களுடன், ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களில், ஒரு லட்சத்து, 8, 224 மாணவ, மாணவியர், பொதுத்தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
வேறு ஊருக்கு மாற்றலாகி போவதாக, 'டிசி' வழங்கப்படும் மாணவர்கள், வேறு எந்த ஊரிலும் சேராமல், இடை யில் நிற்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.

கேள்வி:


இதன் மூலம், இடைநிலைக்கல்வியில் மட்டும், ஒவ்வொரு ஆண்டும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இடையில் நிற்பது தெரியவந்துள்ளது. பல கோடி ரூபாய் செலவழிக்கும் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் என்ற மத்திய அரசின் திட்டத்தின் நோக்கம், 2017ம் ஆண்டுக்குள், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி தர வேண்டும் என்பது தான். ஆனால், பள்ளிக்கு வரும் மாணவர்களை, தேர்ச்சி விகிதத்தை காட்டி, விரட்டியடிக்கப்படும் போது, இந்த நோக்கத்தை நிறைவேற்றுவது எப்படி என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png