ஐஐடி மாணவர் சேர்க்கை: தமிழக மாணவர் எண்ணிக்கை வீழ்ச்சி
தமிழக அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களில் 33 பேர் மட்டுமே ஐஐடி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு தேர்வாகியுள்ளனர்.
மத்திய அரசால் நடத்தப்படும் முன்னணித் தொழில் கல்வி நிறுவனங்களான ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் தமிழக அரசு பாடத்திட்டம் வழியாக படித்த மாணவர்கள் வெறும் 33 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளது கவலையளிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படித்த 65 மாணவர்கள் கடந்த ஆண்டு தேர்வாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதே நேரம் மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 418 பேர் இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய அளவில் இந்தத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில் 57 விழுக்காட்டினர், அதாவது 15,311 பேர் மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள்.
அதேநேரம் மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் பாடத்திட்டங்களின் கீழ் படித்தவர்களும் ஒரளவுக்கு வெற்றிபெற்றுள்ளனர்.
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு சமச்சீர் கல்விமுறை அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு தேர்ச்சி வீதமும், நூற்றுக்கு நூறு வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இருந்தும் போட்டித்தேர்வுகளில் நிலை வேறுமாதிரியாக இருக்கிறது.
தமிழகத்தின் பாடத்திட்டத்தின் குறைபாடுகள் ஏதும் இல்லை என்று கூறும் கல்வியாளரும், ஐஐடி கான்பூரின் தலைவருமான எம்.அனந்தகிருஷ்ணன், தேர்வு முறையில் மாற்றங்கள் தேவை என்கிறார்.
தமிழக கல்வித் துறை நடத்தும் தேர்வுகளில், கையேடுகளில் இருக்கும் கேள்விகள் மட்டுமே கேட்கப்படுவதாகவும், அதனால் மாணவர்கள் கணிதம், இயற்பியல் போன்ற பாடங்களில் அடிப்படை புரிதலை வளர்த்துக்கொள்ளவில்லை என்றும் கூறினார்.
நாட்டில் சுமார் 40 வேறுபட்ட கல்வித் திட்டங்கள் இருந்தாலும், இவற்றுக்கிடையே பெரிதாக வித்தியாசம் இல்லை என்றும் அவர் கூறினார்.
மத்திய அரசுப் பாடத்திட்டத்தின் அடிப்படையில், ஐஐடி நுழைவுத் தேர்வில் கேள்வி கேட்கப்படுவதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்றும் அவர் கூறினார்.
அதேநேரம் ஐஐடியில் சேரும் மாணவர்களில், கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கையும் பெண்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாக இருப்பதாக டாக்டர் அனந்தகிருஷ்ணன் தெரிவித்தார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.