மதம் மாறிய பெண்ணைபி.சி., பிரிவாக கருத உத்தரவு
முஸ்லிமாக மதம் மாறிய பெண்ணை, பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவராகக் கருதும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தைச் சேர்ந்தவர் ஆயிஷா. பிறப்பால் இந்துவான இவர், பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர். 2005ல், முஸ்லிம் மதத்துக்கு மாறினார்; 'முஸ்லிம் லெப்பை' என, சான்றிதழ் பெற்றார்.இளநிலை உதவியாளர் பணிக்கு, டி.என்.பி.எஸ்.சி., விண்ணப்பங்களை வரவேற்றது. ஆயிஷாவும் விண்ணப்பித்தார்.
2014ல் ஆகஸ்டில் நடந்த, சான்றிதழ் சரிபார்ப்பிலும் பங்கேற்றார். அப்போது, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவின் கீழ், விண்ணப்பித்திருப்பதாக தெரிவித்தார். ஆனால், பிறப்பால் முஸ்லிம் இல்லை என்பதால், அவரது விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்தனர்.தன்னை, பிற்படுத்தப்பட்ட முஸ்லிமாகக் கருத வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி.,க்கு மனு அனுப்பினார். எந்த பதிலும் இல்லை.
இதையடுத்து, தன் மனுவை பரிசீலிக்கக் கோரியும், பிற்படுத்தப்பட்ட முஸ்லிமாகக் கருதும்படியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை, நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் அஜிமத் பேகம், டி.என்.பி.எஸ்.சி., தரப்பில், வழக்கறிஞர் தேவேந்திரன் ஆஜராகினர்.
மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி, இந்தப் பிரச்னையை விரிவாக, நான் பரிசீலித்துள்ளேன். பிற்படுத்தப்பட்ட இந்து நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர், லெப்பை முஸ்லிமாக மாறியதால், அவரை பிற்படுத்தப்பட்ட முஸ்லிமாக பரிசீலிக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளேன்.
எனவே, குரூப் - 4 பணிக்காக பரிசீலிக்கும் போது, மனுதாரரை, பிற்படுத்தப்பட்ட முஸ்லிமாக, டி.என்.பி.எஸ்.சி., கருத வேண்டும்.இவ்வாறு நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.