40 கோடி இளைஞர்களின் திறனை மேம்படுத்த இலக்கு: 15ம் தேதி 2 மெகா திட்டங்கள் துவக்கம்
வரும், 2022ம் ஆண்டுக்குள், 40 கோடி இளைஞர்களின் திறனை மேம்படுத்த, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான, தேசிய திறன் மேம்பாட்டு கொள்கை மற்றும் ராஷ்டிரிய கவுஷல் விகாஸ் திட்டத்தை, வரும் 15ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.
கடந்த 2009ல், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, வரும் 2022க்குள், 50 கோடி பேரின் திறனை மேம்படுத்தப் போவதாக திட்டம் அறிவிக்கப்பட்டது. அத்திட்டம் அறிவிக்கப்பட்டதோடு சரி; அடுத்தகட்ட நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் முடங்கிக் கிடந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய அரசு, இத்திட்டத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது.
இளைஞர் தினம்:
வரும், 15ம் தேதி உலக இளைஞர் திறன் தினமாக, உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டில்லியில் அன்று நடக்கும் விழாவில், தேசிய திறன் மேம்பாட்டு கொள்கையை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.
இதுகுறித்து, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் நிறுவுதல் துறை அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி, டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:
ஒப்பந்தம்:
வரும் 2022க்குள், 40.2 கோடி பேரின் திறனை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 54 சதவீதம் அல்லது 21.5 கோடி பேர், விவசாய துறை சார்ந்தவர்களாக இருப்பர். இதற்காக தேசிய திறன் மேம்பாட்டு கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துடன், ராஷ்டிரிய கவுஷல் விகாஸ் திட்டத்தையும் சேர்த்து, வரும் 15ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். தேசிய திறன் மேம்பாட்டு திட்டத்தை நிறைவேற்ற, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களுடனும், அவற்றின் கீழ் இயங்கும் நிறுவனங்களுடனும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. மத்திய உருக்கு மற்றும் சுரங்க துறையின் கீழ் உள்ள அரசு துறை நிறுவனங்கள், மத்திய திறன் மேம்பாட்டு துறையின் கீழ் உள்ள நிறுவனங்களுடன் சேர்ந்து செயலாற்றும். அரசு துறை நிறுவனங்களிடம் உபரியாக உள்ள உள்கட்டமைப்பு வசதிகளையும், நிதி ஆதாரங்களையும், திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு வசதிகள், மனித சக்தி, பயிற்சிக்கு தேவையான உப பொருட்களை கண்டறிதல், திறன் மேம்படுத்தப்படும் நபர்களை கண்டறிதல் போன்றவற்றுக்கான நடைமுறை செயல்பாடுகளை, சம்பந்தப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் நிர்ணயிக்கும்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.