மதுகுடித்து பள்ளிக்கு வந்த மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்கிய பிரச்னை தலைமை ஆசிரியர் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்த ஆசிரியர் சங்கங்கள்
மதுகுடித்து பள்ளிக்கு வந்த மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்கிய பிரச்னையில், தலைமை ஆசிரியர் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.
திருச்செங்கோடு அருகே மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 14ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்கள் 4 பேர் பள்ளி அருகில் உள்ள புதரில் மது அருந்தியபின் பள்ளிக்கு வந்தனர். அப்போது மாணவர்களின் நடத்தையில் மாற்றம் இருப்பதை அறிந்த ஆசிரியர், விசாரணை செய்தார். விசாரணையில் மது' குடித்துவிட்டு வகுப்பறைக்கு வந்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து, மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு வந்து அவர்கள் மது அருந்தியதை உறுதிபடுத்தினர்.
அதன்பின் பள்ளி தலைமையாசிரியர் சிவகாமி நான்கு மாணவர்களுக்கும் மாற்றுச்சான்றிதழ் கொடுத்து வெளியேற்றினர். இதன்பிறகு பெற்றோர்கள், மாணவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும்படி பலமுறை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தும் தலைமையாசிரியர் அதை ஏற்கவில்லை. அதனால் நீக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர், தனது பெற்றோருடன் சென்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் அண்மையில் மனு அளித்தார். அப்போது அம்மாணவரை கண்டித்த ஆட்சியர் அறிவுரை கூறியதுடன், மீண்டும் அம்மாணவரை பள்ளியில் சேர்க்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
அதை தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எஸ்.கோபிதாஸ், ஆட்சியர் பரிந்துரைபடி, மாணவரை பள்ளியில் மீண்டும் சேர்க்க தலைமையாசிரியைக்கு உத்தரவிட்டார். ஆனால் பள்ளித் தலைமையாசிரியர் சிவகாமி, மீண்டும் மாணவரை சேர்க்க மறுத்துவிட்டார். இதற்கு விளக்கம் கேட்டு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எஸ்.கோபிதாஸ், பள்ளித் தலைமையாசிரியர் சிவகாமிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியை வெள்ளிக்கிழமை மாலை பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அதில் நீக்கப்பட்ட மாணவர்களை அருகாமையில் உள்ள வேறு பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளவும் தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு அனுப்பபட்ட நோட்டீஸை திரும்பபெறவும் ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை பரிசீலிப்பதாக ஆட்சியர் தெரிவித்தார் என ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.