சர்க்கரை நோய் என பணி வழங்க மறுப்பதாதெற்கு ரயில்வேயின் 'அப்பீல்' தள்ளுபடி
சர்க்கரை நோய் குறைபாட்டை காரணம் காட்டி, பணி வழங்க மறுத்தது சரியல்ல' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் மனுவையும், உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.தெற்கு ரயில்வே மற்றும் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில், 3,698 குரூப் - டி பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன; 4.03 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.எழுத்து தேர்வுக்கு, 35 ஆயிரத்து 137 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களில், கடைசியாக, மருத்துவ பரிசோதனைக்கும், சான்றிதழ் சரிபார்ப்புக்கும், 4,232 பேர் அழைக்கப்பட்டனர். இதில், 58 பேருக்கு, 'மருத்துவ தகுதியில்லை' என, கூறப்பட்டது.அவ்வாறு தகுதியில்லை என, நிராகரிக்கப்பட்டவர்களில், புஷ்பம் என்ற பெண்ணும் ஒருவர். அவருக்கு, சர்க்கரை நோய் இருப்பதாக, காரணம் கூறப்பட்டது.மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு, மேல்முறையீடு செய்தார். தலைமை மருத்துவர் பரிசோதித்து, 'வேலைக்கு தகுதியில்லை' என, கருத்து தெரிவித்தார்.
இந்த முடிவை எதிர்த்து, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில், புஷ்பம், மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த தீர்ப்பாயம், குரூப் - டி பணியில், புஷ்பத்தை சேர்க்கும்படி உத்தரவிட்டது.
தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தெற்கு ரயில்வே சார்பில், மனுத் தாக்கல் செய்யப்பட்டது.மனுவை, நீதிபதிகள் ராமசுப்ரமணியன், மதிவாணன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்'
விசாரித்தது. புஷ்பம் சார்பில், வழக்கறிஞர் எல்.சந்திரகுமார் ஆஜரானார்.ரயில்வே சார்பில், வழக்கறிஞர் வி.ஜி.சுரேஷ்குமார், ''ஒருவர், 40வது வயதில், கடுமையான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டால், அவரது பணி திறன் சீர்குலையும்; எனவே, விண்ணப்பத்தை நிராகரித்ததில், குறை கூற முடியாது,'' என்றார்.
மனுவை விசாரித்த, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் அலுவலக கடமையை ஆற்ற முடியாது என்பதை காட்டுவதற்கு, அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லாத போது, ரயில்வே தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்க முடியாது.
கடந்த, 50 ஆண்டுகளில், உணவு, உரம், மருந்து, குளிர்பான தொழிற்சாலைகளின் நடவடிக்கைகளினால், உலக அளவில், நீரிழிவு நோயின் தலைநகராக இந்தியா மாறியுள்ளது.
இந்திய சர்க்கரை நோய் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில், 4.9 கோடி பேர், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்; நோய் என்பதை விட, குறைபாடு எனக் கூறலாம்.எனவே, சர்க்கரை நோய் உள்ளவர்களால், வேலை செய்ய முடியாது என்றோ, அவர்கள், நிறுவன உரிமையாளர்களுக்கு சுமையாகி விடுவர் என்றோ கூறுவதை, ஏற்க முடியாது; மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.எட்டு வாரங்களுக்குள், புஷ்பத்துக்கு, பணி நியமன உத்தரவை, ரயில்வே நிர்வாகம் வழங்க வேண்டும்.இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.