!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 15 டிசம்பர், 2015

பள்ளி திறப்பு விழாவில் விபரீதம்: அமைச்சர்கள் நிகழ்ச்சியில் மாணவி மயக்கம்

அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவியர் வெயிலில் நிற்க வைக்கப்பட்டதால், பிளஸ் 2 மாணவி மயங்கி சாய்ந்தார். மற்ற மாணவியரும் களைப்பானதால், அவர்களை தரையில் அமர வைத்து நிலைமையை சமாளித்தனர்.

சென்னை உள்ளிட்ட, நான்கு மாவட்டங்களில், மழை, வெள்ள பாதிப்பால், 34 நாட்கள் விடுமுறைக்கு பின், நேற்று மீண்டும் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டன. சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வெள்ள நிவாரண மருத்துவ முகாம் மற்றும் சீருடை வழங்கும் விழா நடந்தன. பள்ளிக்கல்வி அமைச்சர் வீரமணி, துறை செயலர் சபிதா, இயக்குனர் கண்ணப்பன், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், துறை செயலர் ராதாகிருஷ்ணன், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.



நிகழ்ச்சி காலை, 9:30 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக, 300 மாணவியர், 9:00 மணியில் இருந்து மேடை முன், மூன்று வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். அமைச்சர்கள் வந்ததும், அதிகாரிகள் உட்பட மேடையில் இருந்த அனைவரும், ஒருவர் மாற்றி ஒருவர் மைக்கில் உரை நிகழ்த்தினர்.மாணவியர் வெயிலில் நீண்ட நேரமாக நிற்க முடியாமல், களைப்பில் தடுமாறினர். ஆனாலும், 'ஆசிரியர்கள் திட்டுவரோ' என, பயந்து சமாளித்தபடி நின்றனர். பிளஸ் 2 மாணவியரில் ஒருவர், அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில் மயங்கி, மற்ற மாணவியர் மீது சாய்ந்தார். சக மாணவியர் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, கைத்தாங்கலாக வகுப்புக்கு அழைத்து சென்றனர். மருத்துவ முகாமில் அந்த மாணவிக்கு சோதனை செய்யப்பட்டது.மயங்கி விழுந்த மாணவி, மாநில மகளிர் பள்ளியில் பிளஸ் 2 வணிக கணிதம் படிக்கிறார். அவரது தந்தை, அதே பள்ளியின் ஆசிரியர். இதை தொடர்ந்து, வெயிலில் நின்ற மாணவியர் ஒவ்வொருவராக நிழல் உள்ள பகுதிக்கு வந்தனர். ஆசிரியர் சிலர், மாணவியரை தரையில் அமர வைத்தனர். ஆனால், வளாகம் முழுவதும் ஈரமாக இருந்ததால், மாணவியர் ஆடையில் சேறு படிய அமர வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து, ஆசிரியர்கள், மாணவியர் மற்றும் அலுவலர்கள் கூறியதாவது: மாணவியரை காலை நேரத்தில் நீண்ட நேரம் வெயிலில் நிற்க வைத்திருக்கக் கூடாது. ஏற்கனவே, வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வந்த மாணவியரில் பலர் உடலளவிலும், உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை, அன்புடன் அரவணைத்து செல்லும் அணுகுமுறை தான் தற்போதைய தேவை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பெற்றோர் சிலர் கூறியதாவது: இது போன்ற சடங்கு, சம்பிரதாயங்களை விட்டொழித்தால் ஒழிய, கல்வித் துறை உருப்படாது. ஏற்கனவே, பாட நாட்கள் குறைவு என்றிருக்கும் நேரத்தில், இது போன்ற ஆடம்பர விழா தேவையா? இதை கல்வித் துறை இயக்குனர் யோசிக்கவே மாட்டாரா? அமைச்சருக்கு இந்த சின்ன விஷயத்தைக் கூட, சிந்திக்கத் தெரியாதா? மாணவியர் நொந்து கிடக்கும் நேரத்தில், அரசு துறையினருக்கு என்ன விளம்பரம் வேண்டிக் கிடக்கிறது? இப்படி, மனம் குமுறி பேட்டி அளித்தனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png