!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 15 டிசம்பர், 2015

வீடு தரும்வரை பள்ளியை விட்டு வெளியேறமாட்டோம் சைதாப்பேட்டை மாதிரி பள்ளியில் முகாமிட்டுள்ளவர்கள் அறிவிப்பு
வீடு தரும்வரை பள்ளியை விட்டு வெளியேறமாட்டோம் என சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் முகாமிட்டுள்ளவர்கள் கூறியுள்ளனர்.

வெளியேற மறுப்பு
கனமழை காரணமாக தொடர் விடுமுறை விடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. எனினும் சில பள்ளிகளில் முகாமிட்டுள்ளவர்கள் பள்ளியை விட்டு வெளியே செல்லாத காரணத்தால் அந்த பள்ளிகளுக்கு நேற்று ஒரு நாள் மட்டும் தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. மேலும், அந்த பள்ளிகளில் தஞ்சம் அடைந்துள்ளவர்களை பள்ளியை விட்டு வெளியேறுமாறு அரசு அதிகாரிகள் வற்புறுத்தி வருகின்றனர்.
சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சைதாப்பேட்டை ஆற்றுமா நகரை சேர்ந்த குடிசைவாசிகள் தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்கள் அந்த பள்ளியை விட்டு வெளியேற மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
பள்ளியில் தஞ்சம்
இதுகுறித்து ஆற்றுமா நகரை சேர்ந்த ஜோதி என்ற பெண் கூறியதாவது:–
அண்மையில் பெய்த கனமழையில் எங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறோம். எங்களுக்கு வீடு வாசல் இல்லாமல், இந்த பள்ளியில் தஞ்சம் புகுந்துள்ளோம்.
எங்கள் பகுதியை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த பள்ளியில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஒரு அறையில் 10 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு இங்கு போதுமான அளவு குளிப்பதற்கான வசதியும், கழிப்பிட வசதியும் இல்லை என்றாலும் தங்குவதற்காவது போதுமான இடம் உள்ளது.
இந்த நிலையில், பள்ளியை திறப்பதற்காக எங்களை காந்தி மண்டபத்திற்கு செல்லுமாறு அதிகாரிகள் கூறுகிறார்கள். அங்கு ஏற்கனவே தங்கி இருப்பவர்களுக்கே போதுமான இடவசதி இல்லாத நிலையில், நாங்கள் அங்கு வெளியில் தங்க வேண்டிய நிலைதான் வரும். நாங்கள் என்ன ஆடு, மாடுகளா? எங்களை, விலங்குகளை போன்று வெளியே செல்லுங்கள் என்று கூறுகிறார்கள்.
வீடுகளை தந்தால் வெளியேறுவோம்
எங்களுக்கு தமிழக வீட்டுவசதி வாரித்தின் மூலம் வீடுகள் கட்டி தருவதற்கான ‘டோக்கன்’ கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன் வழங்கினார்கள். தற்போது, அதற்காக ஒக்கியம், துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் பகுதியில் வீடுகள் தயாராகி உள்ளன. அங்கு தண்ணீர் வசதி, மின்சார வசதி உள்பட அனைத்து வசதிகளும் தயாராகி விட்டது.
எனினும், தேர்தல் நெருங்குவதால், எங்களுக்கு வீடுகளை வழங்கினால், எங்கள் ஓட்டுகள் சிதறிவிடும் என்பதற்காக வீடுகளை ஒதுக்காமல் உள்ளனர். எங்களுக்கான வீடுகளை ஒதுக்கி தந்தாலே போதும் நாங்கள் இங்கிருந்து வெளியேறி விடுவோம். வீடுகளை ஒதுக்கீடு செய்து தராதவரை நாங்கள் இந்த பள்ளியை விட்டு வெளியேற மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திடீர் கடைகள்
முகாமில் தஞ்சம் புகுந்துள்ள மக்கள், தங்கள் வீடுகளை இழந்தாலும், அரசு ஏதேனும் உதவிகள் செய்யும் என்ற நல்லெண்ணத்தில் பள்ளி வளாகத்தில் தங்கள் இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். பள்ளி வளாகத்திற்குள்ளேயே மக்களின் அன்றாட தேவைக்கான பொருட்களை விற்பனை செய்யும் திடீர் கடைகளும் முளைத்துள்ளன.
குழந்தைகள் பள்ளிக்குழந்தைகள் விளையாடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் ராட்டினத்தில் உற்சாகமாக விளையாடி மகிழ்கின்றனர். பள்ளியில் தஞ்சம் அடைந்தவர்கள் தாங்கள் வளர்த்த முயல், நாய் போன்ற வளர்ப்பு விலங்குகளையும் தங்களுடன் பள்ளியில் தஞ்சம் அடைய செய்து வளர்த்து வருகின்றனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png