!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 10 மார்ச், 2016

கல்வித்துறையை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!'
கல்வித்துறை என்பது கையூட்டு துறை என மாறிவிட்டது. கையூட்டுக்கான ஏஜன்ட்களாக அதிகாரிகள் செயல்பட்டது ஊரறிந்த உண்மை. ஐந்து ஆண்டுகளில், கல்வித்துறையில், ஆறு அமைச்சர்கள் மாறிவிட்டனர். இதில், ஒரு அமைச்சர் கூட கல்வித்துறை குறித்து, 'அ' னா, 'ஆ' வன்னா கூட, படிக்க அனுமதிக்கப்படவில்லை.

 துறையை பற்றியே அமைச்சருக்கு தெரிய விடாமல், பார்த்து கொண்ட ஆட்சி தான், ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி. அதேபோல், ஐந்து ஆண்டுகளாக கல்வித்துறையின், ஏகாதிபத்திய அதிகாரியாக திகழ்ந்தவர் முதன்மை செயலர் சபிதா. இவர் அரசு அதிகாரி என்பதை விட, அரசு செலவில் இலவச திட்டங்களை வகுத்து கொடுத்து, இலவச பொருட்களில், ஜெயலலிதாவின் படத்தை ஒட்டி, மாணவர்கள், ஆசிரியர்களை, ஜெயலலிதாவின் பிரசாரகர்களாகவும், பள்ளிகளை பிரசார மையங்களாகவும் மாற்றிய பெருமை கொண்டவர்.மீண்டும், அ.தி.மு.க., ஆட்சியே தொடர்ந்தால், இவர் தான் நிரந்தர முதன்மை செயலராக இருப்பார். அவருக்கு கீழ் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், கையூட்டு பெற்று தரும் ஏஜன்டாக செயல்பட்டனர் என்பதை வெளிப்படையாகவே சொல்வேன். பாடநுால் அச்சடிப்பு, இலவச கணித உபகரண பெட்டி, புத்தகப்பை என, 14 வகை இலவச பொருட்களையும் தயாரிக்க, தனியாருக்கு, 'ஆர்டர்' வழங்கியதில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளன. ஆர்டர் எடுத்தவர், 45 சதவீத கமிஷன் தர, இந்த அதிகாரிகள் தான் ஏற்பாடு செய்து கொடுத்தனர். 
சமுதாயத்துக்கு மட்டுமின்றி அனைவருக்கும் தெரிந்த உண்மை. கற்பிக்கும் ஆசிரியர் நியமனத்திலும், பணியிட மாற்றத்திலும் பணம்பார்த்தவர்களை எப்படி மன்னிப்பது? முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்கில், கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, அவர் சிறைக்கு சென்ற நாளில் மட்டும், 600 பேருக்கு கலந்தாய்வு என்ற பெயரில்,ஒவ்வொருவருக்கும், ஒரு, 'ரேட்' வைத்து, விரும்பிய இடத்துக்கு நியமனம் செய்தனர்.ஒன்றியம் விட்டு ஒன்றியம் என்றால், இரண்டு லட்சம்; மாவட்டம் விட்டு மாவட்டம் என்றால், மூன்று லட்சம்; திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டம் என்றால், ஆறு லட்சம் ரூபாய் என, இட மாற்றத்திற்கு விலை வைத்தனர்.
கிருஷ்ணகிரி, நாமக்கல் என, அரசு பள்ளிகள் பின் தங்கிய மாவட்டங்களில், ஆயிரக்கணக்கான ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. ஆனால், திருநெல்வேலி, கன்னியாகுமரியில் உபரி ஆசிரியர்கள் இருந்தும், அங்கே கேட்போருக்கு பணம் வாங்கி கொண்டு, காலியிடத்தையே மாற்றி பணி நியமனம் செய்ததும் இந்த ஆட்சியின் சாதனையே.

மாணவர்களின் படிப்புக்கான, 'சிலபஸ்' மாற்றத்துக்கு கூட கல்வியாளர்களை இந்த அரசு நெருங்கவில்லை. தமிழ் பாட ஆசிரியர் நியமனத்தில், தமிழ் பாடத்தை கடைசி பட்டியலில் வைத்து, மற்ற பாடங்களுக்கு முன்னுரிமை அளித்து, தமிழை புறந்தள்ளியது இந்த அரசு. 
ஆசிரியர்களுக்கு கல்வி பணியை தவிர மற்ற எல்லா பணிகளும் கொடுத்தனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு; மந்திரிகளை வைத்து ஒவ்வொரு இலவச பொருளுக்கும், ஒரு விழா என, 14 லவசபொருட்களுக்கும் தனித்தனியே விழா எடுக்கும் பணி; அதிகாரிகளின் சொந்த விஷயங்களை கவனிக்கும் பணி; சைக்கிள், 'லேப்டாப்' எடுத்து வருதல்; இலவச புத்தக மூட்டை சுமப்பது; முதன்மை செயலரின் அறையில் காத்து கிடப்பது; மாவட்ட கல்வி அலுவலக பணிகள் என, ஆசிரியர் பணியில் அடங்காத னைத்தையும் பார்ப்பதற்கே, ஆசிரியர்களை பயன்படுத்தினர். ஆனால், கல்வித்தரம் இல்லையே என, நீலிக் கண்ணீர் வடிப்பது என்ன நியாயம்?

'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை இருக்க வேண்டும் என, மத்திய அரசு திட்டம் கொண்டு வந்து நிதியும் ஒதுக்கியது. அந்த நிதியை எதற்கோ செலவு செய்து விட்டு, கழிவறை இல்லாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம், கழிப்பறை இருப்பது போல் எழுதி வாங்கி விட்டனர். இந்த அவலத்தால், கிராமப்புற மாணவர்கள் தொற்று நோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.மெட்ரிக் இயக்குனரகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் பல முறைகேடுகள் நடந்தேறின. விதிகளை மீறியோருக்கும் அங்கீகாரம் அளித்தனர். அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 


நடிகர் ரஜினியின், 'ஆஷ்ரம்' பள்ளிக்கு அங்கீகாரம் இல்லாத நிலையில், அந்த பள்ளியின் மீது இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? மொத்தத்தில், ஐந்து ஆண்டு கால ஆட்சியில் கல்வித்துறை, கையூட்டு துறையாக மாறியதால், நுாற்றுக்கணக்கான அரசு பள்ளிகள் காணாமல் போய் விட்டன. இதே நிலை இனியும் தொடர்ந்தால், கல்வித்துறையை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.

க.மீனாட்சி சுந்தரம்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி 
ஆசிரியர் மன்ற பொதுச்செயலர்

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png