!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 16 மார்ச், 2016

ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு ஒப்புதல் வழங்க உத்தரவு
அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களுக்கு, ஒப்புதல் மற்றும் நிதி உதவி வழங்க, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், காவலர்கள், துப்புரவாளர்கள் நியமனங்கள் தொடர்பாக, 2007, ஏப்ரலில், பள்ளி கல்வி துறை உத்தரவு பிறப்பித்தது. அதில், காவலர்கள், பெருக்குபவர்கள், துப்புரவாளர்கள் பணியிடங்களில் வெளியாட்களை கொண்டு நிரப்பி கொள்ளவும், அவர்களுக்குரிய செலவுகளை, அரசு உதவி பெறும் பள்ளிகள் ஏற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், 281 அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களில், 140 காலியிடங்களை நிரப்பிக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது.


இதையடுத்து, 2010, ஜூலையில் பிறப்பித்த உத்தரவில், 952 ஆசிரியர் அல்லாத பணியிடங்களில், 465 பணியிடங்களை, வெளியாட்கள் மூலம் நிரப்பவும், மீதி இடங்களுக்கு, அவை நிரப்பப்பட்ட நாளில் இருந்து, முழு நேர ஊதிய விகிதத்தில், அரசு மானியத்துடன் அனுமதி வழங்கலாம் என, கூறப்பட்டுள்ளது.

இந்த அரசாணைகளை தொடர்ந்து, ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களுக்கு, மானியம் வழங்க மறுத்து, மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவுகள் பிறப்பித்தனர்.
பள்ளி கல்வி துறையின் அரசாணைகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 200க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மனுக்களை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: நிதி உதவி தொடர்பாக, அரசு பிறப்பிக்கும் எந்த உத்தரவாக இருந்தாலும், சட்ட வரையறைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். 'அனுமதிக்கப்பட்ட இடங்களில் நியமனங்கள் மேற்கொள்வதற்கு முன், அரசின் அனுமதியை, அரசு உதவி பெறும் பள்ளிகள் பெற வேண்டும்' என, சட்டத்தில் எங்கும் குறிப்பிடவில்லை.எனவே, ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்களில் நியமனங்கள் செய்யப்பட்டால், கல்வி அதிகாரிகள், அரசின் மானியத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அரசின் அனுமதியை பெறும்படி, பள்ளிகளிடம், கல்வி அதிகாரிகள் கேட்க முடியாது.வழக்கு தொடுத்த அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு, பல ஆண்டுகளாக அரசின் மானியத்தை பெற்று வருகின்றன. சட்டத்துக்கு முரணாக, மானியத்தை அரசு நிறுத்தி வைக்க முடியாது.

எனவே, மாவட்ட கல்வி அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகள், ரத்து செய்யப்படுகின்றன. அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்களுக்கு, அரசு ஒப்புதல் வழங்க வேண்டும்; மானியமும் தர வேண்டும்.ஆறு வாரங்களுக்குள், நீதிமன்ற உத்தரவை அரசு பின்பற்ற வேண்டும். பள்ளி கல்வி துறை, 2007, மே மாதம், 2010, ஜூலை மாதம் பிறப்பித்த அரசாணைகள், ரத்து செய்யப்படுகின்றன.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png