!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 19 மே, 2016

வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவர்கள் இந்தியாவில் டாக்டராக பணிபுரிய முடியுமா?

வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவர்கள் இந்தியாவில் டாக்டராக பணிபுரிய முடியுமா என்பது குறித்து முன்னாள் மருத்துவ இயக்குனர் இளங்கோ பேட்டி அளித்துள்ளார்.
சென்னை:
பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகி உள்ள நிலையில் உயர்கல்வியில் தங்களது பிள்ளைகளை சேர்ப்பதற்கான முயற்சிகளில் பெற்றோர் ஒவ்வொருவரும் ஈடுபட்டு வருகின்ற நேரம் இது.

மதிப்பெண் குறைந்தாலோ, விரும்பிய படிப்பை தொடர முடியவில்லை என்றோ மாணவர்கள் விரக்தி அடையக்கூடாது.
குறிப்பாக மருத்துவ படிப்புகளில் சேர விரும்பி படித்த மாணவ - மாணவிகள் மனம் தளரக்கூடாது. நுழைவு தேர்வு நடத்த அதன் மூலம் மாணவர்களை மருத்துவ கல்லூரிகளில் சேர்க்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற இந்த உத்தரவால் தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதி இன்று முடிவை பெற்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து இந்திய சுகாதார சங்க தலைவரும் முன்னாள் சுகாதார இயக்குனருமான டாக்டர் இளங்கோ பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு ஆலோசனை, வழிகாட்டுதல்களை கூறியுள்ளார். அதன் விவரம் வருமாறு:–
பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகி மதிப்பெண்களை மாணவர்கள் தற்போது அறிந்து இருப்பார்கள். கிடைத்த மதிப்பெண்களை கொண்டு திருப்தி அடைய வேண்டும்.
எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்றால் விரக்தி அடையக் கூடாது. மறு மதிப்பீடு, மறு கூட்ட லுக்கு விண்ணப்பித்து சரியான விளக்கங்களை பெறலாம்.
பொதுவாக மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பை முதலாவதாகவும் 2-வதாக பொறியியல் படிப்பையும் தேர்வு செய்கிறார்கள். குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் கலை அறிவியல் பாடப்பிரிவுகளை நாடுகின்ற நிலை உள்ளது.
திறமையும், தகுதியும் அடிப்படையில் மதிப்பெண் கிடைப்பதால் அதனை திருப்தியாக ஏற்று கொள்ள வேண்டும். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தாங்கள் விரும்பும் படிப்பை தொடர பெற்றோர் உதவ வேண்டும். மருத்துவ படிப்பில் சேரும் தகுதி இருந்தாலும் கூட அவர்களுக்கு படிக்க விருப்பம் இல்லையென்றால் கட்டாயப்படுத்த கூடாது.
பொறியியல் கல்லூரியில் சேர விரும்பினால் அதில் சேர்ந்து படிப்பதே நல்லது. பெற்றோர்கள் கட்டாயத்தின் பேரில் படிப்பை தேர்வு செய்வது நல்லதல்ல. மாணவர்களின் விருப்பம் அறிந்து செயல்பட வேண்டும்.
எம்.பி.பி.எஸ். படிப்பை தொடர முடியாதவர்கள் மற்ற தொழில் படிப்புகளுக்கு மாறிவிட வேண்டும். எம்.பி.பி.எஸ். சேர விரும்பும் மாணவர்கள், இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) வெப்சைட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகள் எவை என்பதை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
அங்கீகாரம் இல்லாத கல்லூரிகள் அதில் இடம் பெறாது. அதனால் எந்த கல்லூரியில் படிக்க விரும்புகிறமோ அந்த விவரம் எம்.சி.ஐ. பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை தெரிந்து கொண்டு சேர்க்க வேண்டும்.
அங்கீகாரம் இல்லாத கல்லூரிகளில் சேர்ந்து பல லட்சங்களை கொடுத்து விட்டு பின்னர் அலைந்து திரியும் நிலை உள்ளது. இதனால் கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியாமல் பெற்றோர் அலைந்து திரிகிறார்கள்.
வெளிநாடுகளில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கான நிறைய விளம்பரங்கள் வருகிறது. அந்த கல்லூரி உண்மையாகவே தரமானதா? படித்தால் சான்றிதழ் கிடைக்குமா, அது இந்தியாவில் அங்கீகரிக்கப்படுமா? என தெரிந்து கொள்ள வேண்டும்.
வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு உள்ளதா? அங்குள்ள சூழல், உயிருக்கு உத்தரவாதம் அந்த நாடுகள் கொடுப்பது இல்லை. ஊக்கம் தரும் ஏஜென்சிகள் பிரச்சினை என்று வரும்போது கை விரித்து விடுகின்றன. எந்த உதவியும் செய்வது இல்லை.
மேலும் வெளிநாடுகளில் படித்தால் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற முடியுமா? என்பதையும் ஆராய வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாடுகளில் படித்தவர்கள் எம்.சி.ஐ. நடத்தும் தேர்வில் 10 முதல் 15 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 85 சதவீதம் பேர் வெற்றி பெறவில்லை. குறைந்த கட்டணம் என்பதை மட்டும் பார்க்க கூடாது. வெளிநாடுகளில் படித்தால் இந்தியாவில் டாக்டர் தொழில் செய்ய முடியுமா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மருத்துவ நுழைவு தேர்வு தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெறுமா? அல்லது பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். சேர்க்கை நடைபெறுமா? என்பது இன்னும் தெளிவாகவில்லை.
இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் திடீரென அகில இந்திய நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்று கூறுவது கஷ்டமான சூழ்நிலை.
இந்த வருடத்தில் நுழைவு தேர்வு நடத்துவது தவறு. அடுத்த வருடத்திற்கு மாணவர்களை தயார் செய்ய கூறலாம்.
சமச்சீர் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. சமச்சீர் பாடத் திட்டத்தை படிக்கும் மாணவர்களால் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவது கடினம்.கல்வி சமநிலையில் இல்லாத பட்சத்தில் அந்தந்த மாநில அரசுகளே தேர்வுகளை நடத்தி கொள்ள அனுமதி தர வேண்டும். இதனால் மாணவர்கள் பதட்டம் அடைய தேவையில்லை.
இதே போல நர்சிங் படிப்பிலும் நிறைய போலி கல்லூரிகள் செயல் படுகின்றன. அவற்றை அடையாளம் காண வேண்டும். தரமான அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளை வெப்சைட்டில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு டாக்டர் இளங்கோ கூறினார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png