ரூ.100ல் இயற்கை வடிகட்டி : அரசுப் பள்ளி மாணவியின் முயற்சி
சவ்வூடு பரவல் மூலம் நீரை வடிகட்டி அருந்தினால், நமக்கு தேவையான தாது உப்பு (மினரல்) கிடைக்கும்' என்கிறார், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி அரசுப்பள்ளி மாணவி சுவீட்டி. காரைக்குடி அழகப்பா மெட்ரிக் பள்ளியில் 'புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது' (இன்பயர்) கண்காட்சி நடந்தது. அரசுப் பள்ளிகளை சேர்ந்த 310 மாணவர்கள் படைப்புகளை காட்சிப் படுத்தினர். தேவகோட்டை 16-வது வார்டு நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவி சுவீட்டி, இயற்கை சவ்வூடு பரவல் மூலம் நீரை வடிகட்டும் முறையை காட்சிக்கு வைத்திருந்தார்.
அவர் கூறியதாவது: தண்ணீரில் 'கால்சியம்', 'மக்னீசியம்', 'சோடியம்' உள்ளிட்ட தாது உப்பு உள்ளது. 'புளூரைடு' அதிகமாக இருக்கும் நீரையும், கடல் நீரையும் சுத்திகரிக்க கண்டுபிடிக்கப்பட்டதே 'தலைகீழ் சவ்வூடு பரவல்' (ஆர்.ஓ.,) முறை. தமிழகத்தில் உள்ள நிலத்தடி நீரில் 'புளூரைடு' அதிக அளவில் இல்லை. வடமாநிலங்களில் அதிக அளவில் உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து நன்னீரும் குடிப்பதற்கு ஏற்ற 'பி.எச்.,7' என்ற அளவீடுக்கு உள்ளாகவே இருக்கிறது. அதை 'தலைகீழ் சவ்வூடு பரவல்' (ஆர்.ஓ.,) முறையில் வடிகட்டும் போது, 'கால்சியம்'
உள்ளிட்ட அத்தியாவசிய தாது உப்பும் வடிகட்டப்படும். 'கால்சியம்' இழந்த தண்ணீரை குடிப்பதால் எலும்பு தேய்மானம் ஏற்படும். ஆர்.ஓ.,முறையில் சுத்திகரிக்கப்படும் நீரில் 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை மட்டுமே திரும்ப பெற முடியும். எஞ்சியவை கழிவுநீராக வெளியேற்றப்படும். 71 சதவீத தண்ணீரில், குடிப்பதற்கு உகந்த நீர் 1 சதவீதம் மட்டுமே. அதையும் நாம் 'வடிகட்டல்' என்ற பெயரில் வீணடிக்கிறோம். இயற்கை நீர் சுத்திரிப்பு முறையில் கூழாங்கற்கள், பெருமணல், சிறுமணல் மூலம் தண்ணீரை வடிகட்டி அருந்தினால் செலவும் மிச்சமாகும்; தண்ணீரும் சேமிப்பாகும். இயற்கையாக சுத்திகரிக்கப்பட்ட நல்ல நீரும் கிடைக்கும்.
மினரல் வாட்டர் கேனில் சிறுமணல், பெருமணல், கூழாங்கற்கள் போட்டு (சவ்வூடு பரவல்) அதன்மேல் தண்ணீரை நிரப்பினால், அடிப்பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட நீர் வெளியேறும்.
இந்த அமைப்பு ஏற்படுத்த செலவு ரூ.100 மட்டுமே. தண்ணீரில் 'பாக்டீரியா'வை நீக்க, சூடாக்கி அருந்தலாம். ஒரு மாதத்துக்கு ஒரு முறை மண்ணை மாற்றினால் போதும். குடிநீர் சுத்திகரிப்பு அமைப்பு ஏற்படுத்த, அறிவியல் ஆசிரியை சுமித்ராதேவி வழிகாட்டினார், என்றார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.