மாணவர்களை நல்வழிப்படுத்த திருக்குறளை தனிப் பாடமாக்க வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மாணவர்களை நல்வழிப்படுத்த 1330 திருக்குறளையும் நன்றாக கற்கும் வகையில் ஆறாவது வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பாடத் திட்டத்தை மாற்றியமைத்து, திருக்குறளை தனிப் பாடமாக்க தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.கோவில்பட்டி ஓய்வு பெற்ற வணிகவரி அலுவலர் ராஜரத்தினம் தாக்கல் செய்த மனு: சமூகத்தில் இளைஞர்களின் நன்னடத்தை குறைந்துள்ளது.
திருமண விவகாரங்கள், முதியோர் இல்ல பிரச்னை வழக்குகள் அதிகமாக நீதிமன்றங்களில் தாக்கலாகின்றன. 2011 ல் சிறார்களுக்கு எதிராக 2083 வழக்குகள் பதிவாகின. இவர்களில் 1170 பேர் துவக்கக் கல்வி, 617 பேர் நடுநிலைக் கல்வி, 56 பேர் மேல்நிலைக் கல்வி பயின்றவர்கள்; 240 பேர் கல்வியறிவற்றவர்கள். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் குற்றங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.இளைஞர்களிடம் கல்வி மூலம் நன்னடத்தை, ஒழுக்கத்தை போதிப்பது அவசியம். அதற்கு திருக்குறளை ஒரு கருவியாக பயன்படுத்தலாம். அதில் வாழ்வியலின் அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. பள்ளிகளில் திருக்குறளை தனிப் பாடமாக கொண்டுவர வேண்டும்.
இதனால் சமூக மாற்றம், முன்னேற்றம் ஏற்படும்.
தமிழக அரசு 2014 செப்., 18 ல் அனைத்துப் பள்ளிகளிலும் முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாயப் பாடமாக்க உத்தரவிட்டது. திருக்குறள் இல்லாமல் மொழியை மேம்படுத்துவது உயிரில்லாமல் மொழியை மேம்படுத்துவதற்குச் சமம்.
நன்னெறி இல்லாத கல்விமுறையால் பயனில்லை. இதை வலியுறுத்தி உள்துறை, தமிழ் மற்றும் தகவல்துறை செயலாளர்களிடம் மனு அளித்தேன்.
தற்போதுள்ள பாடத் திட்டத்தின்படி திருக்குறளில் சில அதிகாரங்களை மட்டும் அறிந்த நிலையில் மாணவர்கள் உள்ளனர். 1330 குறள்களையும் முழுமையாக கற்பிப்பதில்லை.
1330 குறளையும் கற்ற மாணவர்கள் முழு மனிதர்கள். 1330 திருக்குறளையும் மாணவர்கள் நன்றாக கற்கும் வகையில் அடுத்த கல்வியாண்டிலிருந்து ஆறாவது வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பாடத் திட்டத்தை மாற்றியமைக்கவும், திருக்குறளை தனிப் பாடமாக்கவும் உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.
நீதிபதி ஆர்.மகாதேவன்: பொருளாதாரம், அரசாட்சி மற்றும் மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து கருத்துக்களும் திருக்குறளில் உள்ளன. அதை மாணவர்கள் நன்றாக கற்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை.
இவ்வழக்கில் பள்ளிக் கல்வித்துறை இயக்குனரை ஒரு எதிர்மனுதாரராக இணைத்து நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என்றார். மனுதாரர் வழக்கறிஞர் ஏ.சரவணக்குமார் ஆஜரானார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.