இலவச 'பஸ் பாஸ்' எண்ணிக்கை அதிகரிப்பு கிராம பள்ளிகள் மூட இதுவும் காரணம்?
:' நீலகிரியில், மாணவ, மாணவியருக்கான இலவச பஸ் பாஸ்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, கிராமப்புற பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைய, முக்கிய காரணமாக உள்ளது' என்ற சர்ச்சையை கிளப்பியுள்ளது. நீலகிரியில், அரசு, உதவி பெறும் தனியார் மற்றும் மெட்ரிக்., பள்ளிகள் என, 216 பள்ளிகள் உள்ளன. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்தாண்டு, 34 ஆயிரம் இலவச பஸ் பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. 30 ஆயிரம் பாஸ்ஊட்டி கோட்ட போக்குவரத்து கழக பொது மேலாளர் நடராஜன் கூறுகையில், ''நடப்பாண்டு இதுவரை, 30 ஆயிரம் பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு, பாஸ் எண்ணிக்கை அதிகரிக்கும்,'' என்றார். தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின், முன்னாள் மாவட்ட செயலர் மனோகரன் கூறியதாவது: கிராமப்புற மாணவ, மாணவியர், பல கி.மீ., தூரமுள்ள நகர்ப்புற பள்ளிகளுக்கு சென்று படிப்பதில் ஆர்வம் காட்டுவதுதான், இலவச பஸ் பாஸ் எண்ணிக்கை அதிகரிக்க காரணம். இது, கிராமப்புற அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறையவும் முக்கிய காரணமாக மாறி வருகிறது. கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, 300 குடியிருப்புகள் உள்ள ஒரு ஊரில், ஒரு கி.மீ., இடைவெளியில் ஆரம்பப்பள்ளி; 2 கி.மீ., இடைவெளியில் நடுநிலை; 3 கி.மீ., இடைவெளியில் உயர்நிலைப்பள்ளி; 5 கி.மீ., இடைவெளியில் மேல்நிலைப்பள்ளி இருக்க வேண்டும். அதன்படி, கிராமங்கள் தோறும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் தேவைக்கேற்ப உள்ளன. அதே நேரம், வரைமுறை இல்லாமல், இலவச பஸ் பாஸ்களும் வழங்கப்படுவதால், கிராமப்புற மாணவர்கள், அதிக தூரம் பயணித்து, தனியார் பள்ளிகளுக்கு செல்கின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'கல்வி உரிமைச் சட்டப்படி, நகர்ப்புற பள்ளிகளில், 5ம் வகுப்பு வரை, வகுப்புக்கு, 30 மாணவர்கள்; 6-, 8ம் வகுப்பு வரை, 35; 9ம் வகுப்புக்கு மேல், 40 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
ஆய்வுக்குப் பின்... நீலகிரியில் உள்ள பல தனியார், உதவி பெறும் பள்ளிகளில், ஒவ்வொரு வகுப்பிலும், 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். கல்வி உரிமைச் சட்டப்படி, மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால், கிராமப்புற மாணவர்கள், தங்கள் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மட்டுமே சேர்ந்து படிக்க வேண்டிய நிலை உருவாகும்' என்றனர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேசமூர்த்தியிடம் கேட்ட போது, ''இலவச பஸ் பாஸ் என்பது, அரசின் கொள்கை முடிவு. நீலகிரி கிராமப்புற அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைய, பஸ் பாஸ் காரணமாக உள்ளதா என்பது குறித்து, ஆய்வு செய்த பின்தான் கூற முடியும்,'' என்றார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.