போதையில் வந்த மாணவர்களுக்கு 'டிசி': தலைமை ஆசிரியைக்கு 'நோட்டீஸ்'
மது குடித்து விட்டு பள்ளிக்கு வந்த நான்கு மாணவர்களுக்கு 'டிசி' வழங்கிய பள்ளி தலைமையாசிரியைக்கு விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது.
திருச்செங்கோடு அடுத்த மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கடந்த 14ம் தேதி பிளஸ் 2 மாணவர் நான்கு பேர் குடி போதையில் வந்தனர். அவர்களின் நடத்தையில் மாற்றம் இருப்பதை அறிந்த ஆசிரியர்கள் விசாரணை செய்தனர். இதில் அவர்கள் குடித்துவிட்டு வகுப்பறைக்கு வந்தது தெரியவந்தது.அதை தொடர்ந்து மாணவர்களின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்களும் மாணவர்கள் மது அருந்தியதை உறுதிபடுத்தினர்.இதனால் நான்கு மாணவர்களுக்கும் 'டிசி' கொடுத்து பள்ளி தலைமையாசிரியர் சிவகாமி வெளியேற்றினார்.அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும்படி கேட்டும் அவர் ஏற்கவில்லை.இந்நிலையில் மாணவர்களில் ஒருவர் தன் பெற்றோருடன் சென்று நாமக்கல் கலெக்டர் தட்சிணாமூர்த்தியிடம் மனு அளித்தார். அவரை கண்டித்த கலெக்டர் அறிவுரை கூறியதுடன் மீண்டும் அம்மாணவரை பள்ளியில் சேர்க்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
அதை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் கலெக்டர் பரிந்துரையின்படி மாணவரை பள்ளியில் மீண்டும் சேர்க்க தலைமையாசிரியைக்கு உத்தரவிட்டார். ஆனால் பள்ளி தலைமையாசிரியர் சிவகாமி மீண்டும் மாணவரை சேர்க்க மறுத்துவிட்டார்.இந்த பிரச்னை தொடர்பாக தலைமையாசிரியை சிவகாமிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.பள்ளி தலைமையாசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.