கலாம் கடைசி நிகழ்ச்சியின் வீடியோ இல்லை உதவியாளர் ஸ்ரீஜன் பால் சிங் உருக்கம்
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பல பதவிகளை வகித்தாலும், வாழ்நாள் முழுவதும் ஆசிரியராகவே இருக்க விருப்பப்பட்டார். அவரின் விருப்பப்படி, மாணவர்களுக்கு கற்பிக்கும்போதே உயிர் பிரிந்தது. அவரின் கடைசி நிகழ்ச்சியை வகுப்பாக நடத்தியதால், புகைப்படம், வீடியோ எடுக்கப்படவில்லை,'' என, கலாமின் உதவியாளர், ஸ்ரீஜன் பால் சிங் தெரிவித்தார்.
'மிடாஸ்' கல்வி நிறுவன மாணவர்கள் சார்பில் அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக அப்துல் கலாமின் உதவியாளராக இருந்த, ஸ்ரீஜன் பால் சிங் பங்கேற்று பேசியதாவது: நான், 2008ல், ஆமதாபாத், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில், எம்.பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்தேன். அப்போது, ஜனாதிபதி கலாம், எங்கள் கல்வி நிறுவனத்திற்கு வந்தார். நான், மாணவர் தலைவன் என்பதால், விமான நிலையம் சென்று வரவேற்றேன். அதுதான் நான் அவரை முதன் முதலில் சந்தித்தது. அதன்பின் அவரின் பேச்சால், சிறந்த எண்ணத்தால் கவரப்பட்டேன். எம்.பி.ஏ.,வில் தங்க பதக்கம் பெற்று, அதை அவரிடம் காட்டி சந்தோஷப்பட்டேன். அதன் பின் அவருடன், ஏழு ஆண்டுகள் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவரின் கடைசி நிகழ்ச்சியில், நானும் கலந்து கொண்டேன். கவுகாத்தியில் இருந்து ஷில்லாங் நகருக்கு காரில் சென்றபோது, பஞ்சாப் கலவரம், பார்லிமென்ட் இயங்காமல் இருப்பது குறித்து மிகவும் வருத்தப்பட்டு பேசினார். மாணவர்களுக்காக ஆசிரியர் காத்திருக்கலாம். ஆனால், ஆசிரியருக்காக மாணவர்கள் காத்திருக்கக் கூடாது என்பது அவரின் கருத்து. அவர் எவ்வளவோ பதவிகளை வகித்தாலும், வாழ்நாள் முழுவதும் ஆசிரியராகவே இருக்க விரும்பினார். அவரின் விருப்பப்படியே, மாணவர்களுக்கு போதிக்கும் போது அவர் உயிர் பிரிந்தது. அவர் என்னிடம் கடைசியாக பேசிய வார்த்தை, 'ஆர் யு ஆல் வெல்?'அவர், மாணவர்களுக்கு வகுப்பு நடத்தியதால், அந்நிகழ்வை யாரும் புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுக்கவில்லை. இவ்வாறு ஸ்ரீஜன் பால் சிங் பேசினார். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவியரின் அஞ்சலி இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.