!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

ஞாயிறு, 8 மே, 2016

அன்னையை போல் ஒரு தெய்வமில்லை....... அன்னையர் தின ஸ்பெஷல்

கஷ்டம்  வரும்போது கண்ணை மூடாதேஅது உன்னை கொன்று விடும்.கண்ணை திறந்து பார்,நீ அதை வென்று விடலாம்.கூறியவர், டாக்டர் -A.P.J.அப்துல் கலாமாக இருக்கலாம். ஆனால், அதை என்னிடம் நாள் தவறாமல் சொல்வது என் அம்மா தான். ரொம்ப அன்பானவர், மென்மையானவர். படிப்பில் மதிப்பெண் குறைந்தால் கூட கோபிக்காதவர். படி, படித்தால்தான் உனக்கு நல்லது என்று வருத்தத்தை கூட மென்மையான வார்த்தையிலேயே வெளிப்படுத்தி விடுவார். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அதை எங்களிடம் வெளிப்படுத்தாதவர். எனக்கும், என் தங்கைக்கும் நல்ல தோழி என் அம்மா பீரிடா.
அண்ணாமலை, பாடலாசிரியர்

உறவுகள் பல இருந்தாலும், அதில் முதல் மரியாதை அம்மாவுக்குத் தான். அதனால் தான், அம்மாவை கண்கண்ட தெய்வம் என்கிறோம். என் அம்மா மங்கையர்கரசி. அவருக்கு என்னோட சேர்த்து, மூன்று பிள்ளைகள். அப்பா நடேசப்பிள்ளை ஆசிரியராக இருந்தாலும், ஐந்தாவது வரை மட்டுமே படித்த அம்மா தான், எங்களை வளர்ப்பதில் பெரும் கவனம் செலுத்தினார்.
அவர், எனக்கு அம்மாவாக இல்லாமல் இருந்திருந்தால், நான் சென்னைக்கு வந்திருக்க முடியாது. பிரபல பாடலாசிரியராகவும் ஆகியிருக்க முடியாது. கள்ளக்குறிச்சி அருகேயுள்ள, கீழப்பட்டு என்கிற சிறிய கிராமத்தில், 5ம் வகுப்பு வரை படித்தேன். அந்த வயதில் நண்பர்களோடு சேர்ந்து, கல்லுக்குட்டையில் குளித்து கல்லில் உடலை கிழித்துக் கொள்வது,
மாத்தோப்பில் மரமேறி விளையாடுவது, அடுத்தவர்கள் வயலில் வள்ளிக் கிழங்கு தோண்டுவது, கரும்பு ஒடிப்பது என்று சேட்டைக்காரனாய் இருந்தேன். அப்போது அம்மா தான் இங்கிருந்தா சரிவர மாட்ட என்று, 6ம் வகுப்பு படிக்க திருவண்ணாமலையில் இருக்கும், என் மாமா வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
அதன்பின் சென்னையில், மாமா வீட்டில் தங்கி படிக்க ஏற்பாடும் செய்தார். இப்போதும், என் பிள்ளை நல்லாயிருக்கணும் என்று வேண்டிக் கொள்ளும் சாமி அவர். வானத்தின் அகலத்தையும் அளந்து சொல்லலாம்; நட்சத்திரக் கூட்டத்தையும் விரலில் எண்ணலாம். ஆனால், என் அம்மா, என் மேல் வைத்த பாசத்தை கணக்கு சொல்ல முடியாது. 
கனிமொழி, தி.மு.க., மகளிர் அணி செயலர்

என்னுடைய அம்மா ராஜாத்தி பற்றி சொல்லணும்னா, அம்மா ரொம்ப இனிமையானவங்க. குழந்தைகள் என்றாலே கடுமையான சட்ட திட்டங்களோட வளர்க்கணும்னு நினைக்குற அம்மாக்களுக்கு மத்தியில், நிறைய சுதந்திரம் கொடுத்து வளர்த்தாங்க. அந்த இடைவெளியை அம்மா கொடுக்கிறார் என்பதே பெரிய விஷயம். என் எல்லா கஷ்டங்களிலும் உடன் நின்ற தோழி. அம்மாவினுடைய வாழ்க்கையே பெரிய போராட்டங்கள் நிறைந்தது தான். அதைப்பற்றி அவர்கள் சொல்லும் போது, பல விஷயங்கள் மிகைப்படுத்தப்பட்டு கூறுவதாய் தோன்றும். அதுமட்டுமல்ல கற்பனைக்கு கூட எட்டமுடியாத விஷயங்களாய் தோன்றும். ஆனால், அதே சூழ்நிலைகளை நாம் கடந்து போகும் போது, அம்மா எவ்வளவு உண்மையான வார்த்தைகளை சொல்லியிருக்கிறார் என்று தோன்றும். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், மிகவும் தைரியமாக இருக்கவும், எதிர்த்து போராடும் குணத்தையும் அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டேன்.
எம்.எம்.யூசுப், நுண்துளை இதய அறுவை சிகிச்சை நிபுணர்




மருத்துவர் என்பதால் மருத்துவத்தை பற்றி பேசாமல் அம்மாவை பற்றி பேச வாய்ப்பு கிடைத்ததையே, மிகப்பெரிய விஷயமாக கருதுறேன். குழந்தைகளின் முதல் ஆசிரியர் அம்மா. அப்பா யார் என்பதையே அம்மா சொல்லித்தானே தெரிஞ்சுக்குறோம். அப்போ அந்த உறவு எவ்வளவு முக்கியம். இறைவன் எழுதிய எனக்கான நாடகத்தின் கதாநாயகி என் அம்மா மும்தாஜ். நாம் எப்படி வளர்க்கப் பட்டிருந்தாலும் அப்போதெல்லாம் தெரியாத அம்மாவின் அருமை, அவர்களை பிரிந்து செல்லும் போது விளங்கும். அதுவும் விடுதியில் தங்கி படிக்கும் பிள்ளைகளுக்கு எளிதாக புலப்படும் அம்மாவின் அன்பு. வீட்டிலிருந்து விடுதிக்கு விடைபெறும் போது, செலவுக்கு காசு சற்று அதிகமாகவே கிடைக்கும். காரணம் எச்சூழலிலும் தன் பிள்ளை கஷ்டப்படக்கூடாது என்று. அம்மாவின் விருப்பமே நானும் என் சகோதரர்களும் மருத்துவராக வேண்டும் என்பது. அதற்காக நாங்கள் கண்ட கனவை விட அம்மாவின் கனவு பரந்து விரிந்தது. இன்று எனக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர். ஒரு தந்தையாக என்னால் ஆயிரம் விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடியும். என் அம்மாவின் குழந்தையாக எதுவுமே தோன்றவில்லை. காரணம் இன்னும் சிறு குழந்தையாக அம்மாவின் மடியையே கேட்கிறேன்.
சகாயம், ஐ.ஏ.எஸ்., துணைத் தலைவர், சயின்ஸ் சிட்டி, பிர்லா அறிவியல் கோளரங்கம், சென்னை.

'லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து!' இந்த வாசகம் என் வாழ்வின் தாரக மந்திரம். இது போன்ற எண்ணங்களை பெற்றதே என் அம்மா சின்னம்மாள் என்ற சவரியம்மாளிடம் தான். சொல்லப்போனால், அப்பாவின் உழைப்பில், அம்மாவின் உண்மையில் வளர்ந்தேன். இதற்கு உதாரணம் பல உள்ளது. புதுக்கோட்டையிலுள்ள பெருஞ்சோலை எனும் கிராமம் தான் என் சொந்த ஊர். அங்கே, எங்களுக்கு, ௩ ஏக்கர் நிலம் இருந்தது. அதற்கு அடுத்து காலி நிலம் பயன்படுத்தப்படாமல் இருந்தது. 
அதற்கு அடுத்து வேறொருவர் நிலம் இருந்தது. வருடத்திற்கு மூன்று அடி அவரது வரப்பு காலி இடத்தில் முன்னேறியிருக்கும். ஆனால், எங்களின் வரப்பு மட்டும் அப்படியே இருந்த இடத்திலேயே இருக்கும்.
சிறு பிள்ளையாய் இருந்தது போது, இது பற்றி அம்மாவிடம் கேட்ட போது, நமக்கு எது சொந்தமோ அதைத்தான் அனுபவிக்க வேண்டும். அடுத்தவங்களுக்கு சொந்தமானதை, நாம் அனுபவிக்க கூடாது என்றார். அன்றைக்கு விளையாட்டாய் தெரிந்த விஷயம், இன்று என்னை எனக்கே அடையாளப் படுத்தியிருக்கிறது எனும் போது, அம்மா என் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய விஷயத்தை, தன் செய்கையால் உணர்த்தியிருக்கிறார். அதுமட்டுமல்ல, என் அம்மா இரக்க குணம் உள்ளவர். வீட்டிற்கு யார் வந்தாலும் சாப்பிடாமல் போகக் கூடாது என்பதில், தீர்மானமாய் இருப்பார். 
இந்த சமூகத்தை நேசிக்கக் கூடிய ஒரு ஆத்மா. ௧,௦௦௦ கோடி கொடுத்தாலும் என்னால் நேர்மை எனும் நிலைப்பாட்டிலிருந்து மாற முடியாது. காரணம், என் அம்மா எனக்கு பயிற்றுவித்தது. அதுமட்டுமல்ல, ௨௦௧௧, ஆகஸ்ட் ௧௫ம் தேதி இறந்து விட்டார். ஒரு கலெக்டராக, நம் நாட்டு கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாடுகையில், மற்றவருக்கு இடையூறாய் இருக்க கூடாதென்ற எண்ணமோ தெரியவில்லை, அன்று மாலை தான் அவரது உயிர் பிரிந்தது. இந்த சமூகத்தை நேசிக்கும் குணம் மற்றும் பரிவு எல்லாமே அம்மாவிடம் கற்றது என்கிறார் பெருமையோடு.
ரெவரன்ட் டாக்டர் தனசீலன், இ.சி.ஐ., ஆலய போதகர்

அம்மா என்பவர்தான் எல்லா குழந்தைகளின் வாழ்வின் துவக்கமும். அன்பெனும் மெய்பொருள். ஆனால், அது அவர்களிடத்திலிருந்து எனக்கு கிடைத்ததில்லை. என் அம்மா அலீஸ்மேரி மங்களபாய், ஒரு பள்ளி ஆசிரியர். அக்காவையே அதிகம் நேசித்தார். அக்கா இறந்த போதுதான் அதை புரிந்து கொண்டேன். இருந்தாலும், அந்த தாயன்பும் போற்றக்கூடியதானே. அக்காவின் இறப்பு அவரை மன அழுத்தத்திற்கு ஆளாக்கியது. அவர் யார் என்பதையே மறந்தார்.
அக்காவைத் தவிர தனக்கு பிள்ளைகள் இருந்ததை மறந்தார். ஆனால், அம்மாவிற்கு பதிலாய் அத்தனை பாசத்தையும் நேசத்தையும் ஒரு சேர அப்பா காசிலிங்கம் எனக்கு தந்தார். ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் தாயுமானவர். அவர் இல்லாமல் இத்தனை முழுமையாய் என் வாழ்க்கை எனக்கு புலப்பட்டிருக்காது. அம்மாவிற்கு அம்மாவாய், அப்பாவிற்கு அப்பாவாய் இருந்து என்னை கவனித்துக் கொண்டவர். எங்களுக்காக வாழ்ந்தவர். 
என்னுடைய வழிகாட்டி. வாழ்க்கையில் அவரை தாயுமானவராய் அடைந்ததற்கு நான் தவம் செய்திருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, அம்மாவின் அன்பை பெற்றதில்லை; அதனால் எனக்கு தெரியவில்லை. அறிந்தவரை அப்பாவைத்தான் அம்மாவாக உணர்ந்தேன். இன்று அப்பாவும் இல்லை. அந்தக் குறையும் எனக்கு தெரியவில்லை. காரணம், என் மனைவி டாரீஸ் தேவகுமாரி, என் வாழ்வின் வலி நிவாரணி. இன்று உலகிலுள்ள எல்லா உறவுகளின் அன்பையும் ஒரு சேர அளிப்பவர். எவரிடத்தில் எல்லாம் தாயன்பு கிடைக்கிறதோ அவர்கள் எல்லாம் தாய் தானே!
ரெஹனா, இசையமைப்பாளர்

என் அம்மா கரிமா பேகம். ௧௫ வயசுலயே திருமணம் ஆகிடுச்சு. நான், ரகுமான், என்னோட இரண்டு சகோதரிகள் குழந்தைகளா பிறந்தோம். அப்பா இருந்தவரை அவங்க எப்படி இருந்தாங்கன்னு தெரியாது. அப்பா இறக்கும் போது, அம்மாவுக்கு ௨௮ வயசு. அவங்க ௧௫ வயது குழந்தையாக இருந்த போது, குழந்தைகளை பெத்து, எங்களை எப்படி வளர்தாங்கன்னு நினைக்கும் போது, ஆச்சரியமா இருக்கு. அப்பா, வெளிநாடுகளிலிருந்து இசை கருவிகளை வாங்கிட்டு வந்து வாடகைக்கு கொடுப்பார். அப்பா இறந்ததும், அந்த வியாபாரத்தை அம்மா எடுத்து செய்ய ஆரம்பிச்சாங்க.
ரகுமான் கைல கீ போர்ட்டை வலிந்து கொடுத்து, வாசிக்க வச்சாங்க... இன்னிக்கு மிகப் பெரிய இசையமைப்பாளராக ரகுமான், நான் எல்லாரும் இருக்கோம்னா, அதுக்கு அம்மாதான் காரணம். எங்களின் வழிகாட்டி. இறைவன் என்றால் யார் என்ற புரிதலை ஏற்படுத்தியவர்கள். இன்றைக்கு நான் பார்க்கும் விஷயங்கள் யாவிலும் இறைவன் இருக்கிறான் என்ற மனப்பான்மை வரக் காரணம் அம்மாதான். மனரீதியாக நிறைய தைரியமானவங்க. அப்பா, ஏன் குழந்தைகளை ஆங்கில வழிக்கல்வியில் படிக்க வைக்கணும் என்றபோது, மிகவும் பிடிவாதமாக, என் குழந்தைகள் ஆங்கிலத்தையும் கற்க வேண்டும் என்று பிடிவாதமாக படிக்க வைத்தவர். அவரிடம் நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் ஏராளம். குறிப்பாக உதவும் மனப்பான்மை. ஏராளமானோருக்கு உதவியிருக்கிறார்கள். ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அம்மா போல் வருமா?
ஆர்த்தி, நகைச்சுவை நடிகை


என் அம்மாவின் பெயர் ஜி.சரோஜினி. அவங்களோட பாதி உயிர் மூச்சுலதான் நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இன்னைக்கு தன்னம்பிக்கையா பல விஷயங்களை செய்யுறேன்னா, அதுக்கு காரணம் அம்மா தான். உதாரணம், நான் நடனம் ஆடுறது. சின் வயசுலயே நான் குண்டாதான் இருப்பேன். அதனால நடனம் ஆடுறது எல்லாம் சிரமம் என்று நினைச்சிருக்கேன். ஆனால், அம்மா அந்த எண்ணத்தையே மாற்றினாங்க. அவங்களுக்கு தெரியாம, ஒல்லியாக வேண்டும் என்பதற்காக, போட்ட மாத்திரைகளோட பக்க விளைவால் தான் அதிகமா குண்டானேன். அப்ப கூட எனக்கு தெரியாமல் செய்த விஷயத்தோட விளைவை பார்ன்னு பாசமாத்தான் கண்டிச்சாங்க. நான் குண்டாயிருக்கேன்னு நினைச்சு வருத்தப்பட்ட போது, அம்மா சொல்வாங்க த்ரிஷா, நயன்தாரா இவங்கள விட நீதான் அழகுன்னு... இதை விட எனக்கு வேற சாட்சி வேண்டுமா. 'என் அம்மாவுக்கு நான்தான் ஸ்பெஷல்!' என்கிறார் ஆர்த்தி.


ஜெ.கே.ரெட்டி, குழந்தைகள் நல நிபுணர்




என் அம்மாவை பற்றிய நினைவுகளை கூற வேண்டுமென்றால், நான் நானாக இருப்பதற்கு காரணம் அம்மா சவுஜன்யா. அப்பா பணி நிமித்தமாய் வெளிநாட்டில் இருக்கையில், மொத்த குடும்பத்தையும் நிர்வாகம் செய்ய ஒரு பெண்ணுக்கு எத்தனை தைரியம் வேண்டும். நான் மருத்துவம் பயின்ற போது, அம்மாதான் கல்லுாரியில் நடக்கும் சம்பவங்களை கேட்பார். தினமும் என்ன படித்தாய் என்பது முதல் அடுத்த நாள் என்ன வகுப்பு என்பது வரை அனைத்தையும் கேட்பார். நல்ல காரியங்களை நிறைய செய்யணும் என்பார். அதனால் இயக்கம் என்ற தன்னார்வ தொண்டுடன் என்னை இணைத்து கொண்டு, பல நல்ல காரியங்களை செய்து கொண்டிருக்கிறேன். பெற்றோராய் நமக்கு ஆற்ற வேண்டிய எல்லா கடமைகளையும் செய்த பின்னரும், இருக்கும் கடைசி காலம் வரை நமக்காகவே வாழ வேண்டும். நம்மைச் சுற்றியே அவர்கள் வாழ்க்கைப் பின்னப்பட்டிருக்க வேண்டும் என்கிற எண்ணங்களைத் தவிர்த்திட வேண்டும். அவர்களுக்கென்று இருக்கக் கூடிய சில ஆசைகள், ஆர்வங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நிம்மதியான சூழலை உருவாக்கித் தர வேண்டும் என்பதே என் விருப்பம்.

பிரசன்னா, பின்னணி பாடகர்




என் அம்மா இந்திரா, வாழ்க்கையை நடைமுறையா பார்ப்பவர்கள். காரணம் அறிவு சொல்றதை கேட்க மாட்டாங்க, மனசு சொல்றத கேட்பாங்க. எல்லா பிள்ளைகளும் டாக்டர், இன்ஜினியர் படிக்கனோம்ன்னு ஆசைபடும்போது, நான் கலைத்துறையில் பின்னணி பாடகராக ஆசைபட்ட போது, உண்மையான என் விருப்பத்தை, சந்தோஷமாக ஏத்துக்கிட்டவங்க. எனவே, எனக்குதான் பிள்னையின் வாழ்வில் முடிவுகளை எடுக்க உரிமை இருக்கிறது என்று நினைக்காமல் எனக்கான இடைவெளியை தந்தவர்.
பாடகராக முன்னேறிய போது, நான் தவறாக பாடினாலும் சரி, சரியாக பாடினாலும் சரி, நான் பாடுவதை கேட்க ஏங்குவார். இந்த உன்னதமான அன்பு தாயிடம் தானே கிடைக்கும். எதுக்காகவும் என்னை கட்டாயப்படுத்தியதில்லை. என்னை சந்தோஷப்படுத்தி அவர் அதில் ஆனந்தப்பட்டார். மன உணர்வுகளை கூட கட்டுப்படுத்த தெரியாத சாதாரண மனுஷி. அவர்களிடம்தான் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன்.


அன்னையர் தின வரலாறு




பழங்காலத்தில், கிரேக்கர்கள் வசந்த காலத்தின் துவக்கத்தை தாய் தெய்வத்தை வணங்கியே கொண்டாடினர். ரோமர்களும், 'சைபெலி' என்ற பெண் தெய்வத்தை தாயாக கருதி வழிபட்டனர். கிறிஸ்தவத்தின் வருகைக்கு பின், இந்த கொண்டாட்டம், மாதா திருக்கோவிலுக்கு, மரியாதை செய்வதாக மாறியது. இப்படிப்பட்ட நிலையில், தற்போது நவீன காலத்தில், 'மதர்ஸ் டே' கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம் உருவான வரலாற்றின் பின்னணி வித்தியாசமானது. இன்றைக்கு உலகெங்கும் கொண்டாடும், 'அன்னையர் தினம்' அமெரிக்காவில் தான் உருவானது.
அனா ஜார்விஸ் என்ற பெண் சமூக சேவகி, அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியா மாநிலத்தில், 'கிராப்டன்' என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அப்போது, அங்கு நடந்த யுத்தக் களத்தில், அமெரிக்க வீரர்கள் பலர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களும் சிதைந்து சீரழிந்து, நாலாபுறமும் சிதறிப் போயின. அப்படி பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும், சமாதானத்துக்கும் கடுமையாக போராடியவர் தான், அனா ஜார்விஸ்.
அவர் தன் பார்வையற்ற மகளுடன், இறுதி மூச்சுவரை சமூக சேவகியாகவே வாழ்ந்து, 1904ம் ஆண்டில் மறைந்தார். அந்த பார்வையற்ற மகள் அன் ரீவ்ஸ் ஜார்விஸ் முதன்முதலாக, தன் தாயின் நினைவாக உள்ளூரில் உள்ள, 'மெத்தடிஸ்ட் சர்ச்'சில், 1908ம் ஆண்டு மே மாதம், இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்று, சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினார். தன் தாயாரின் நினைவை போற்றியதைப் போலவே, எல்லாரும் அவரவர் அன்னையை கவுரவிக்க வேண்டும். எல்லாருடைய இல்லங்களிலும், அன்றைய தினம் மகிழ்ச்சி ததும்ப வேண்டும் 
என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது.தன் 84 வயதில் தனியார் மருத்துவமனையில், அவர் இறப்பதற்கு முன்னதாக, 'உலகம் முழுவதும் அன்னையர் தினம் அனுசரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் அன்னையைப் போற்றுகிற, வாழ்த்துகிற, மகிழ்விக்கிற நாளாக அன்றைய தினம் மலர்ந்து மணம் பரப்ப வேண்டும் என்பது தான், என் ஆசை' என்று, தன் கடைசி ஆசையை சொல்லிவிட்டு, இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார். அவருடைய ஆசை பூர்த்தியாக்கும் விதமாக, இன்று உலகம் முழுவதும், 'அன்னையர் தினம்' கொண்டாடப்பட்டு 
வருகிறது.


ஜெ.குமுதா, பச்சிளம் குழந்தை பராமரிப்பு நிபுணர்




என் அம்மா கண்மணியை போன்று அத்தனை மென்மையானவர் அவர் பெயரே கண்மணி. படிக்காதவர், ஆனால், பண்புள்ளவர். அரசாங்க வேலையில் அப்பா இருந்தார். ௧௫ வயதில் திருமணம் முடித்தவுடன், ஏதும் தெரியாமல் அப்பாவோடு சென்னைக்கு வந்தவர்; தன் அனுபவத்தின் மூலம் எங்களை வளர்த்தவர். திருமணமாகி மூன்று வருடங்களுக்கு பின் தவமாய் தவமிருந்து என்னை பெற்றதாய் சொல்வார். அப்பாவிற்கும், அம்மாவிற்கும் ௧௨ வருடங்கள் வயது வித்தியாசம் அதை கூட இடைவெளியாக கருதாதவர். ௧௮ வயதில், நான் பிறந்த போது கட்டாயம் மருத்துவராக வேண்டும் என்று எனக்காக கனவு காண ஆரம்பித்தவர். 
விருந்தோம்பலில் ஆர்வமுள்ளவர். மறக்க முடியாத சம்பவம் ஒன்று என் மனதில் உண்டு. நான் மருத்துவம் படித்து கொண்டிருந்த போது, கல்லுாரியின் கடைசி நாள் அன்று, பச்சை நிறத்தில் புடவை அணிந்திருந்தேன். அதற்காக பூவும் வைத்துக் கொள்ள பச்சை நிறமே வேண்டும் என்றதும், தேடி பிடித்து, கொடி சம்பங்கி பூவை கோர்த்து, என்னிடம் வைத்து கொள்ள சொல்லி அழகு பார்த்தவர்.
அதுமட்டுமல்ல, கல்லுாரி நாட்களில், என் அம்மா, எனக்காக சினிமாவிற்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு காத்திருப்பார். கடைசி வகுப்பு கட் அடித்துவிட்டு, அம்மாவுடன் பார்த்த பல சிவாஜி படங்கள் இன்னும் பசுமையாய் என் மனதில் உண்டு. மருத்துவ சேவை செய்கிறேன், திருமணம் அதற்கு தடையாய்யிருக்கும் என்ற போது, திருமணம் செய்து கொள், உன் குழந்தையை நான் வளர்க்கிறேன் என்று தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அளித்தவர். பகைவனே உன்னிடம் சிகிச்சைக்கு வந்தாலும், மனிதம் போற்ற வேண்டும் என்று உணர்த்தியவர். அம்மா மறைந்திருக்கலாம். அம்மாவின் நினைவு மட்டும் மறையாது என் மனதில்.


வேல்முருகன், பின்னணி பாடகர்




பத்து மாசம் என்னை சுமந்துபெத்து எடுத்த அம்மாஉன் பாசத்துக்கு முன்னாலஎல்லாமே சும்மாஉன் ரத்தத்தை எல்லாம் பாலாக தந்துபெத்து வளர்த்த அம்மாஉன் அன்புக்கு முன்னால ஆகாசம் சும்மா. விஜய் தொலைகாட்சி நிகழ்ச்சியான, யாரு மனசல யாரு, உங்க மனசுல யாரு, அவருக்கு என்ன பேரு, இதில் அம்மாவைப் பற்றி நான் பாடிய பாடலை கேட்டுதான் இயக்குனர் சமுத்திரக்கனியும், சசிகுமாரும் எனக்கு முதன் முதலாக சுப்பிரமணியபுரம் படத்தில், மதுரை குலுங்க குலுங்க பாடல் வாய்ப்பு தந்தாங்க. இந்த பாடல் உருவாக காரணமே என் அம்மாதான். நான் பதினைந்து வயதாக இருக்கும் போதே இறந்துட்டாங்க. ஆனா, சின்ன வயதில் தினக்கூலிக்கு வேலைக்கு சென்று, ஒரு நாள் ஏழு ரூபாய் சம்பளத்தில், எனக்காகவும், என் அண்ணனுக்காகவும் உழைப்பை சிந்திய உயர்ந்த பெண்மணி. அம்மாவை பிற்காலத்தில் நல்லா வச்சுக்கணும் என்ற லட்சியத்திலேயே வளர்ந்தேன். அவங்க இறந்துதான் என்னை வாழ வச்சுக்கிட்டிருக்காங்க.

அன்னையர் தினத்தில், அன்னையரை மகிழ்விக்க, அன்னை பற்றிய பாடல்கள் காலர் ட்யூனாக செட் செய்து அசத்தலாமே...





'தாயில்லாமல் நானில்லை' எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா இணைந்து நடித்த, அடிமைப் பெண் படத்தில் இடம் பெற்ற பாடல். எம்.ஜி.ஆர்., பாடுவது போல வரும், இப்பாடலை எழுதியவர் மறைந்த கவிஞர் வாலி. டி.எம்.சவுந்தரராஜன் குரல் கொடுத்திருப்பார்.

'அம்மா என்றால் அன்பு' அ.தி.மு.க.,வினரின் அம்மாவான ஜெயலலிதா பாடிய முதல் பாடல்; கவிஞர் வாலி தான் இப்பாடலையும் எழுதியவர். படம் அடிமைப் பெண்.

வாலி எழுதிய இன்னொரு அருமையான பாடல். மன்னன் படத்தில், 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே...' ரஜினிகாந்த் பாடுவது போல வரும் பாடல். குரல் கொடுத்தவர் ஜேசுதாஸ். இளையராஜா இசையில் வந்த இந்தப் பாடலைக் கேட்காத காதுகளே கிடையாது என்று கூறலாம்.

'நானாக நானில்லை தாயே...' இது கமல்ஹாசன் படப் பாடல். படம் துாங்காதே தம்பி துாங்காதே. இதற்கும் இசை இளையராஜாதான். இளையராஜாவே இந்தப் பாடலையும் பாடியிருப்பார். வாலி பாடல்தான் இதுவும்.
'ஆராரிராரோ நான் இங்கு பாட... தாயே நீ கண்ணுறங்கு...' இது அமீரின் ராம் படப் பாடல். சினேகன் எழுதி, ஜேசுதாஸ் பாடிய பாடல்.

'காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தெய்வம் அம்மா... அன்பென்றாலே அம்மா...' பாடல் நியூ படத்தில் உள்ளது இதில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருப்பார்.

'அம்மா... அம்மா... நீ எங்க அம்மா' தனுஷ் நடித்த வேலையில்லாப் பட்டதாரி படத்தில் வரும் பாடல் இது. பொதுவாக காதல் தோல்விகளால் கசிந்துருகும் தனுஷ், இப்பாடலில் தாய்ப்பாசத்தில் பாடும் பாடல் இது.

'அன்னை மடி...' பி.சுசீலா பாடிய அழகுப் பாடல்களில் இதுவும் ஒன்று. கற்பகம் படப் பாடல். வாலி எழுதிய பாடல். அத்தை மடி மெத்தையடி பாடலின் இன்னொரு வடிவம் இது.
'அம்மா அம்மா எனது ஆருயீரரே...' கார்த்திக் நடித்த பொன்னுமணி படத்திலுள்ள அம்மாவைப் போற்றும் பாடல்

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png