பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகம்... திணறல் 'சீட்' நிரம்பாததால் சம்பளத்திற்கு சிக்கல்
பொறியியல் கல்லுாரிகளில் நடப்பு ஆண்டு எதிர்பார்த்த அளவு மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் பயிற்றுவிக்கும் பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் நிர்வாகம் திணறி வருகிறது. தமிழகத்தில் 525 தனியார் மற்றும் அரசு பொறியியல் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர 10 சுய அதிகாரம் படைத்த பல்கலைக் கழகங்களும், 10 சுய நிதிக்கல்லுாரிகளும் உள்ளன. உயர் கல்வியை பொறுத்தவரை மருத்துவம், பொறியியல் என ஒப்பிட்டுப் பார்த்தால், அதிகளவு மாணவர்கள் சேர்க்கை பொறியியல் கல்லுாரியில் தான் நடைபெறும்.
காரணம் தற்போதைய மருத்துவ உலகில் வெறும் எம்.பி.பி.எஸ்., மட்டும் படித்து விட்டால் சம்பாதிக்க முடியாது. எம்.பி.பி.எஸ்., நாலரை ஆண்டு, ஹவுஸ் சர்ஜன் ஒரு ஆண்டு என ஐந்தரை ஆண்டுகள் படித்து முடித்த பின் தேர்வு எழுதி பின்னர் தான் எம்.டி., படிக்க வேண்டும். அதன் பின்னர் 'ராசியான' டாக்டர் என பெயர் எடுத்தால்தான் மக்கள் மத்தியில் சிகிச்சை செய்து சம்பாதிக்க முடியும். இதற்கெல்லாம் குறைந்தது 10 ஆண்டுகளாவது பிடிக்கும். அதன் பின்னர் தான் மருத்துவக் கல்லுாரியில் செலவு செய்து படித்த பணத்தை சம்பாதிக்க முடியும்.
ஆனால், பொறியியல் பட்டப்படிப்பு அப்படியல்ல. மாணவர்கள் 4 ஆண்டுகளில் படிப்பை முடித்த உடன் பல தனியார் நிறுவனங்களில் சேர்ந்து மருத்துவருக்கு இணையாகவோ அல்லது அதை விட கூடுதலாகவோ சம்பளத்தை உடனடியாக பெற முடியும். இதனால்தான் ஏராளமான மாணவர்கள் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்கின்றனர்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு உகந்த வேலை வாய்ப்பு இல்லை. இதே நிலை இன்னும் 10 ஆண்டுகளுக்கு தொடரும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதன்காரணமாக மாணவர்கள் பொறியியல் கல்லுாரிகளில் சேர்ந்து படிப்பதை விட கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர்ந்து படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக கடலுார் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லுாரிகளில் பல்வேறு ஆசை வார்த்தைகளைக் கூறி மாணவர்களை பிடித்து வருவதில் முனைப்பு காட்டி வருகின்றனர்.
இன்றுள்ள சூழ்நிலையில் 'ப்ரீகேஜ்' வகுப்பில் சேரவே 40 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டிய கால கட்டத்தில், கல்விக் கட்டணமே இல்லாமல் படிக்க முடியும் என்றால் அது பொறியில் கல்வி மட்டும் தான் என தெரியவந்துள்ளது.
பல கல்லுாரிகளில் சேர்க்கைக்காக மாணவர்களை கூவி, கூவி அழைக்கும் நிலை உள்ளது.
கல்லுாரிகளில் போதியளவு சீட் சேராததால் ஏ.ஐ.சி.டி.இ., விதிமுறைப்படி மாதம்தோறும் பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே கல்லுாரி நிர்வாகம் திணறி வருகிறது. இதனால், நிர்வாகத்திற்கு ஒத்துவராத ஆசிரியர்கள், ஊழியர்களை கல்லுாரிகளை விட்டு வெளியேற்றி வருகின்றனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.